அருள் புரிவதில் தலை சிறந்தவர் ”தாஸ-ஜனாபீஷ்ட-ப்ரத-தக்ஷதராக்ர-கண்யாய”: ’வரேண்யாய’ என்று ஸ்வாமியின் சிறப்புக்கு ஸுபர்லேடிவ் கொடுத்தவர்,

அருள் புரிவதில் தலை சிறந்தவர்

”தாஸ-ஜனாபீஷ்ட-ப்ரத-தக்ஷதராக்ர-கண்யாய”:

’வரேண்யாய’ என்று ஸ்வாமியின் சிறப்புக்கு ஸுபர்லேடிவ் கொடுத்தவர், அவர் எப்படி அருளை வாரி வழங்குகிறாரென்பதற்கு இங்கே ஏகப்பட்ட ஸுபர்லேடிவ் கொடுத்துக்கொண்டே போகிறார்.

‘தாஸ ஜன அபீஷ்ட ப்ரத’ – அடியாரான மக்களின் மனோரதங்களை நிறைவேற்றித் தருகிற’. ‘தருகிறவருக்கு’ என்பதற்கு ‘ப்ரதாய’ என்று போட்டிருந்தாலே போதும்; ஆனால் ஸ்வாமியின் அநுக்ரஹ சீலத்தை அப்படி ஸாதாரணமாகச் சொல்லி, விட்டு விடுவதற்கு தீக்ஷிதருக்கு  மனஸ் வரவில்லை. ‘ப்ரத’வுக்கு அப்புறம் ஒரு ‘தக்ஷ’  அதற்கப்புறம் ஒரு ‘தர’, அதற்கு அப்புறம் ஒரு ‘அக்ரகண்ய’ என்று ஸுபர்லேடிவ்களாகக் கோத்துக் கொண்டே போகிறார்: ‘அபீஷ்ட ப்ரத-தக்ஷதராக்ரகண்யாய’.

‘அபீஷ்டப்ரத தக்ஷ’ என்றால் மனோபீஷ்டங்களை அருள்வதில் மஹா கெட்டிக்காரர். முதலில் ‘வாஸுகி, தக்ஷகாதி’ என்ற இடத்தில் Taksha.   இங்கே Daksha. தக்ஷ என்றால் ரொம்பவும் கெட்டிக்கார, ரொம்ப ஸாமர்த்யமான என்று அர்த்தம். அபீஷ்டத்தை அளிப்பதில் ஸுப்ரஹ்மண்யர் தக்ஷர். அதோடு மட்டுமில்லை. அதற்கும் மேலே! கேட்டதைக் கொடுப்பதில் மிகவும் சிறந்து விளங்கும் தக்ஷர்களான தெய்வங்களிலும் மற்ற எல்லாரைவிட இவரே சிறந்தவர் – தக்ஷதரர். “இது தரமானது” என்கிறோம். அப்படியானால், மற்றவற்றோடு ‘கம்பேர்’ பண்ணும்போது இதுவே சிறந்தது என்று அர்த்தம். அப்படித்தான் இவர் மற்ற அநுக்ரஹ மூர்த்திகளுக்கு நடுவே ‘தர’மானவராயிருக்கிறார். மற்ற தெய்வ உபாஸகர்கள் எங்கள் தெய்வமும் அப்படித்தான் என்று வந்து விட்டால் என்ன பண்ணுவது? ‘ஸரி, அவர்களோடும் நாம் சண்டைக்குப் போக வேண்டாம். ஐக்கியத்துக்கும் ஸமரஸத்துக்கும்தானே ஸ்வாமியும், ஸங்கீதமும், ஸாஹித்யமும் இருப்பது?” என்று தீக்ஷிதர்வாள் நினைத்து, ‘அபீஷ்ட-ப்ரத-தக்‌ஷ-தரர்களாகப் பல பேர் இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர்களில் முதல்வராக, ‘நம்பர் ஒன்’னாக இவரே மதிக்கப்படுகிறார் என்று போட்டு விடுவோம்’ என்று முடிவு பண்ணி ‘தக்‌ஷ-தர’வுக்கு அப்புறம் ‘அக்ரகண்யாய’ என்று முத்தாய்ப்பு வைத்து விட்டார் போல இருக்கிறது. ‘தாஸ ஜனங்களின் இஷ்டத்தை வழங்குபவர்களில் சிறப்புற்றவர்களிலேயும் முதலாமவராக மதிக்கப்படுபவர்’ என்று பெரிசாக நீட்டிக்கொண்டு போயிருக்கிறார். ‘அக்ர’ – முதலில், முதலிடத்தில்; ‘கண்ய’ – மதிக்கப்படுகிறவர்.