தேவாரப் பண்கள் ”ஒனக்குப் பண்ணாராய்ச்சியிலே பரிசயம் உண்டோ?” “அவ்வளவாக இல்லை” “திருப்பாவைக்கு ராகம் போட்டிருக்கியே! ஆனா, தேவாரம் மாதி

தேவாரப் பண்கள்

”ஒனக்குப் பண்ணாராய்ச்சியிலே பரிசயம் உண்டோ?”

“அவ்வளவாக இல்லை”.

“திருப்பாவைக்கு ராகம் போட்டிருக்கியே! ஆனா, தேவாரம் மாதிரி திவ்ய ப்ரபந்தங்களிலே பண் பேர் கொடுக்கவுமில்லை; பாசுரம் ஸேவிக்கிறவா ஸங்கீதமாப் பாடறதுமில்லையே! திவ்ய ப்ரபந்தத்தை ப்ராம்மணாளே சொல்றதாலே வேதம் மாதிரியா ஒரு தினுஸா அதை ஏத்தல் எறக்கல் ப்ராஸத்தோட சொல்றதுன்னுதானே ஏற்பட்டிருக்கு? நீ ஒன் மனோபாவப்படி, மனோதர்மப்படி (திருப்பாவைக்கு ராகம்) போட்டாயாக்கும்?”

“ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு.”

”அதுவேதான் ஸ்டாண்டர்டா மத்த வித்வான்களும் ஒத்துண்டு பாடற மாதிரி ஆயிருக்கே!... நம்மோட பழைய ராகங்கள் ஒரிஜினல் ரூபம் மாறாம, ரொம்பக் காலமா வந்துண்டிருக்கிறது தேவாரப் பண்களிலேதான்னு தெரியறது. வேதத்தை ஸ்வரம் தப்பாம வைதிகாள் வம்ச பரம்பரையா ரக்ஷிச்சுக் கொடுத்திருக்கிற மாதிரியே ஓதுவாமூர்த்திகள் வழிவழியா தேவாரங்களை ரூபம் மாத்தாம – செய்யுள் ரூபம் மாத்ரமில்லை; பண்ணோட ரூபமும் மாறாம – காப்பாத்திண்டு வந்திருக்கா. பக்திக்குத் தொண்டே ஸங்கீதத்துக்கும் பெரிய தொண்டாயிருக்கு. இப்போ சங்கராபராணம், பைரவி, நீலாம்பரின்னுல்லாம் சொல்ற ராகங்கள் வேறே பேருல இன்னின்ன பண்ணாயிருந்து, அப்படியே தொடர்ந்து பாடிண்டு வரா-ன்னு ரிஸர்ச் பண்ணி நிச்சயப்படுத்தியிருக்கா. இதுல ஸௌராஷ்ட்ரம், கேதாரகௌளை இருக்கு. காம்போதியும் இருக்கு. யதுகுல காம்போதிகூட இருக்கு. காம்போதிக்குத் ‘தக்கேசி’ன்னோ என்னமோ பண்ணிலே பேர் சொல்றா…1 காம்போதி மேளராகம்2 இல்லையோல்லியோ?”

“இல்லை, ஹரிகாம்போதிதான் மேளம், காம்போதி (அதன்) ஜன்யம்3.”

“ஆனா ஹரிகாம்போதியைவிட ஃபேமஸா இருக்கு. அப்பாவைவிட பிள்ளை ஒசத்தியாயிருக்காப்பல இப்படி சில ஜன்ய ராகங்கள் ஜனக ராகத்தைவிட ப்ரபலமாயிருக்கு இல்லியா?”

“பைரவியும் பெரியவா சொல்கிற மாதிரிதான். அது நடபைரவி ஜன்யம்.”

“ஸரி, நீ பாடு. வரவழைச்ச கார்யத்தைப் பண்ணவிடாம ஊர்க்கதையிலே போயிண்டிருக்கேன்.”

    • காம்போதி  தக்கேசிப் பண்ணேதான்.
    • ஏறுவரிசை, இறங்கு வரிசை இரண்டிலும் ஏழு ஸ்வரங்களும் கிரமமாகவும், அன்னிய ஸ்வரம் கலக்காமலும் அமைந்த ஸம்பூர்ண ராகம்.
    • ஒரு மேளராகத்தின் ஸ்வரங்களில் ஒன்றையோ சிலவற்றையோ விட்டுவிட்டது. ‘ஜன்யம்’ என்றால் மூலமான மேளராகத்திலிருந்து ‘பிறந்தது’ என்று பொருள்.