ஸங்கீதமும் ஸாஹித்யமும் ”எதுக்குக் கூப்பிட்டேன்னா, ‘ஸ்ரீ ஸுப்ரமண்யாய நமஸ்தே’ இருக்கே*, அதை யாராவது சுத்தமாகப் பாடிக் கேக்கணும்னு ஒரு ஆசை ஒன் பேரு காத

ஸங்கீதமும் ஸாஹித்யமும்

”எதுக்குக் கூப்பிட்டேன்னா, ‘ஸ்ரீ ஸுப்ரமண்யாய நமஸ்தே’ இருக்கே*, அதை யாராவது சுத்தமாகப் பாடிக் கேக்கணும்னு ஒரு ஆசை. ஒன் பேரு காதுல பட்டவுடனே அந்த நினைப்பு வந்துடுத்து… சுத்தமாகப் பாடறதுன்னா ஸங்கீதமும் சுத்தமாயிருக்கணும்; ஸாஹித்ய உச்சரிப்பும் சுத்தமாயிருக்கணும். ரொம்பப் பேர் தெலுங்கு, ஸம்ஸ்க்ருதக் கீர்த்தனங்களிலே வார்த்தைகளை விரூபமாக்கிடறா.

  • ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய ’ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே’ என்ற பாடல்.

”ஸங்கீத  அம்சத்தையும், தாளத்தையும், ஸாஹித்ய சந்தஸையும் – ‘சந்தம்’னு தமிழ்ல சொல்றாளே, அது, அதையும் – அநுஸரிச்சுச் சில கீர்த்தனங்களிலே வார்த்தைகளை ஒரு தினுஸாச் சேர்த்து, பிரிச்சு எல்லாம் கொடுத்திருக்கும். அதாவது ஸாஹித்யம்னு எழுதிப் பார்க்கிறதுக்கு இப்படி ரூபம் பண்ணியிருக்கும். அதையே ஸங்கீதமா – அர்த்தபாவம் கலந்த ஸங்கீதமா – பாடறப்போ ஸங்கீதம், தாளம் இதுகளோடகூட அர்த்தத்துக்கும் ஹானி இல்லாம எப்படி ஸந்தி பிரிக்கணுமோ, சேர்க்கணுமோ அப்படிப் பாடணும். நல்ல வாக்யேகாராள் க்ருதிகள் இதுமாதிரி சுத்தமாப் பதம் பிரிச்சுப் பாட நிச்சயமா எடம் குடுக்கும். ஆனா, பாடறவாள்ள ரொம்பப் பேர் அர்த்தத்தைக் கவனிக்காம ஸங்கீதத்தை மட்டும் கவனிக்கிறதுல, எழுத்தில இருக்கிற பாட்டே காதுல கேட்கிறப்போ விபரீதமா அர்த்தம் கொடுக்கும்படியாப் பண்ணிடறா….

“இந்த ‘ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே’யிலேயே ஒரு எடத்துல ‘குருகுஹாயாஜ்ஞான த்வாந்த ஸவித்ரே’ன்னு வரது. அது ‘குருகுஹாய, அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே’ன்னு பிரிஞ்சாதான் ஸரியான அர்த்தம் குடுக்கும். ‘குருகுஹனுக்கு, அஞ்ஞான இருட்டுக்கு ஸுர்யனாயிருக்கிறவனுக்கு (நமஸ்காரம்)’னு அர்த்தம். சில பேர் என்ன பண்ணறான்னா ‘குருகுஹாயா’ன்னு அப்படியே நீட்டி அதை ஒரு தனி வார்த்தை மாதிரிக் காட்டிட்டு, ‘ஞான த்வாந்த ஸவித்ரே’ன்னு – அதாவது, ஞான இருட்டுக்கு ஸுர்யன்னு – விபரீதமாப் பாடறா!”

-” ‘சங்கராசார்யம்’ க்ருதி இருக்கே,1 நீ பாடறயோ என்னவோ, (வீணை) தனம்மா குடும்பத்துல வந்து, செம்மங்குடி சீனு2, எம்.எஸ்.கூட பாடறா – அதிலே ‘பரமாத்வைத ஸ்தாபன லீலம்’னு வரது. ‘விளையாட்டாவே பரம தத்வமான அத்வைதத்தை ஸ்தாபிச்சவர்’னு அர்த்தம். பாடறச்சே ‘பரம அத்வைத ஸ்தாபன லீலம்’னு (பாடியே காட்டுகிறார்கள்) ‘அ’வுல அழுத்தங் குடுத்துப் பதம் பிரிச்சுப் பாடினாத்தான் ஸரியா அர்த்தம் குடுக்கும்.

1. ஆதி சங்கரர் பற்றி சங்கராபரண ராகத்தில் ஸுப்பராம தீக்ஷிதர் இயற்றிய பாடல்.

2. செம்மங்குடி ஸ்ரீநிவாஸய்யர்

நான் ஏதோ காமாசோமான்னு பாடறச்சேயே இந்த மாதிரி ஸங்கீதத்துக்கும் ஹானியில்லாம, தாளத்துக்கும் ஹானியில்லாம, அதோடகூட அர்த்தத்துக்கும் ஹானியில்லாமப் பாட முடியறதுன்னு தெரியறதோல்லியோ? நான் சொன்னவாள்ளாமும் இப்படித்தான் பாடறா. ஆனா, புரிஞ்சுக்காதவா, புரிஞ்சுண்டு பாடணும்கிற கவலை இல்லாதவா, ‘பரமா’ன்னு அப்படியே நீட்டிண்டே போய் ‘த்வைத ஸ்தாபன லீலம்’னு பாடி அத்வைத ஆசார்யாளை த்வைத ஆசார்யாளா கன்வெர்ட் பண்ணிடறா! (வெகு நேரம் சிரிக்கிறார்கள்.)

“ஸங்கீதத்தில் த்வைதம்-அத்வைதம் முதலான எந்த பேதமும் இல்லைதான். ஸங்கீதத்தில் ஸங்கீதந்தான் முக்யம். ஸாஹித்யம் எதைப் பத்தினதோ, யாரைப் பத்தினதோ அதிலே பாடறவா மனஸை ஸங்கீதமே ஐக்யப்படுத்தி விடறது. அதனாலதான் நீ, வைஷ்ணவன், ஒங்கிட்ட ‘ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய’ ஒட்டிண்டிருக்கு; இல்லாட்டா, நீ அதுகிட்ட ஒட்டிண்டிருக்கே; எதுவோ ஒண்ணு. அந்த க்ருதி நீ பாடிக் கேட்டிருக்கேன். ஸங்கீத அம்சத்துல நீ சுத்தம்கிறதுக்கு நான் சொல்ல வேண்டாம். ஸாஹித்யமும் நீ சுத்தமாப் பாடறேன்னு கவனிச்சேன். அதனாலதான் ஒனக்குச் சொல்லி அனுப்பினேன்.”

“என் தர்பார்ல கல்லும் முள்ளும்தான்! பக்க வாத்தியமும் இல்லாம, தம்பூர்கூட இல்லாம வந்திருக்கே. எத்தனை ச்ரமமானாலும் ஸஹிச்சுண்டு எனக்காகக் கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு”.

கடல் மடையாகப் பேசிப் போன ஸ்வாமிகள் நிறுத்தியதும் அரியக்குடி கடல் மடையாகவே கண்ணீர் பெருக்கிவிட்டார். மீண்டும் ஒரு முறை ஸ்வாமிகள் முன் நெடுஞ்சாண்கிடையாக வணங்கி எழுந்தார். ‘பெரியவா’ பாடச் சொல்லிப் ‘பெரியவா’ளுக்காகப் பாடுவதை விட எந்தப் பெரிய கௌரவமும் தமக்கில்லை என்று கூறினார். “தாஸனையும் பொருட்டாக எண்ணி வலிந்து ஸந்தர்ப்பம் கொடுத்து அநுக்ரஹித்திருக்கிற கருணைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ச்ருதி, பக்க வாத்தியம் எல்லாவற்றுக்கும் பெரியவாள் அநுக்ரஹமேதான் இட்டு நிரப்ப வேண்டும். ‘அவ்விடத்தில்’ எதிர்பார்க்கும் அளவுக்கு சரியாகப் பாடவும் அநுக்ரஹந்தான் ஸஹாயம் செய்ய வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டு பாட ஆயத்தமானார்.