சத்ருவிடம் பரிஹாரம் கேட்டல்! கேசித்வஜர் சுனகரிடம் போனார் அவர் பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டார் “கசேரு, பார்க்கவர், நான், இன்னம் யாரெல்லாம் பெ

சத்ருவிடம் பரிஹாரம் கேட்டல்!

கேசித்வஜர் சுனகரிடம் போனார். அவர் பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டார். “கசேரு, பார்க்கவர், நான், இன்னம் யாரெல்லாம் பெரியவர்களென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அந்த எவருக்குமே நீ கேட்கும் விஷயம் தெரியாது. தெரிந்தவர் ஒருத்தரே ஒருத்தர்தான். நீ ஜயித்து, காட்டுக்கு ஓட்டியிருக்கிறாயே, அந்தப் பரம சத்ருவான காண்டிக்ய ஜனகர்தான் தர்ம சாஸ்த்ரம் பூராவும் கரைத்துக் குடித்திருக்கிறாராதலால் அவர் ஒருத்தருக்குத் தான் கர்மா ஸம்பந்தமாக ஒரு விஷயம் விடாமல் தெரியும். அதனால் அவருக்கே இந்த ஸமாசாரமும் நிச்சயம் தெரிந்திருக்கும்” என்று சொல்லி விட்டார்.

‘பரம சத்ருவிடம் போய் பரிஹாரம் கேட்பதா? கேட்டால் தான் அவர் சொல்வாரா?” என்றுதான் வேறு எவராயிருந்தாலும் இந்த நிலையில் நினைத்திருப்பார்கள். ‘தன்னாலான முயற்சி பண்ணியாய்விட்டது. எதுவும் பிரயோஜனப்படாததால் ஸர்வ ப்ராயச்சித்தமாக நாமஜபம் பண்ண வேண்டியதுதான்’ என்று இருந்திருப்பார்கள். ஆனால் கேசித்வஜர் அப்படிச் செய்யவில்லை.

‘பரம சத்ருவாகத்தான் இருக்கட்டும், எதுவாகத்தான் இருக்கட்டும், நமக்கு வேண்டிய விஷயம் தெரிந்த ஒருவர் இருக்கிறார். நம்முடைய தர்மாசரணையை நாம் மனப்பூர்வமாகப் பண்ணுகிறோமென்றால், இதிலே தோஷ நிவ்ருத்திக்கு யாரிடம் உபாயம் இருந்தாலும் அவரை ஆச்ரயித்து, பிரார்த்தித்து அதைத் தெரிந்து கொள்ளப் பிரயத்னப்படத்தான் வேண்டும். பிரயத்னம் பலிக்காமல், அவர் சத்ரு பாவத்துடனேயே இருந்து உபாயம் சொல்லாவிட்டால் அது அவரைப் பொறுத்த ஸமாசாரம். அவர் பரிஹாரம்தான் சொல்வாரோ, பரிஹாஸம்தான் செய்வாரோ, அவரிடம் போய்க் கேட்க வேண்டியது நம் கடமை’ என்று உடனேயே கேசித்வஜர் தீர்மானித்து விட்டார்.

அதனால் சுனகரிடம், “மஹர்ஷே! நல்ல தகவல் கொடுத்தீர்கள். ரொம்பவும் நமஸ்காரம். விஷயம் கேட்டுக் கொள்வதற்காக காண்டிக்யனைத் தேடி இப்போதே காட்டுக்குப் போகிறேன். பரிவாரங்களோடு போனால் அங்கேயும் சிறைப் பிடித்து வதைக்க வந்துவிட்டேனென்று நினைத்து அவன் ஓடி ஒளிந்து கொண்டு விடலாம். அதனால் நான் மட்டும் தனியாளாகப் போகிறேன். தனியாய் நான் போவதால் என்னை அவன் கொன்று போட்டாலும் பரவாயில்லை. ஒரு யாகத்தின் பொருட்டுப் போய் உயிரை பலி கொடுத்தாலும் அப்போது அந்த யாகத்தைப் பூர்த்தி செய்த பலனே கிடைத்துவிடும். இப்போது பாதி யாகத்தில் பசு போய் அபூர்த்தியாய் நிற்கும் யாகத்தை இப்படி உயிரைக் கொடுத்துத்தான் நான் பூர்த்தி பண்ணினதாயிருக்கட்டும்! அல்லது அவன் ப்ராயச்சித்த கர்மாவைச் சொல்லிக் கொடுத்தால் ரொம்ப நல்லது. அதைப் பண்ணி அப்புறம் யஜ்ஞத்தைப் பூர்த்தி செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கேசித்வஜர் அங்கேயிருந்தே நேரே தான் மட்டும் ரதத்திலேறிக் கொண்டு காட்டுக்குப் போனார்.

உயிரே போனாலும் போகட்டும் என்று ராஜாவாக இருக்கப்பட்ட ஒருவர் கர்மாநுஷ்டானத்தில் இருந்த ச்ரத்தையினால் தனியாளாகக் காட்டுக்கு, சத்ரு இருக்கும் இடத்துக்குப் போனார்.

இதிலே இன்னொரு விசேஷம், ஒரு விஷயத்தில் அறிவு பெறுவதற்காக சத்ருவிடமும் போய் விஜ்ஞாபனம் செய்து கொள்கிற விநய மனப்பான்மை. ஏதோ ஒரு விஷயத்தில் நமக்கு அறிவு பெறணும் என்று இருந்தால்கூட, அதை போதிக்கக் கூடியவர் யார் என்பதையும் கவனித்தே க்ரஹிக்கத் தோன்றும். நமக்குப் பிடிக்காத ஒருவருக்கோ, தாழ்ந்த நிலையிலிருக்கற ஒருவருக்கோதான் அந்த விஷய ஞானம் இருக்கிறது என்றால், ‘போயும் போயும் இவனிடமா கேட்டுக் கொள்வது?” என்று விட்டுவிடுவோம். அப்படிக் கூடாதென்றுதான் திருவள்ளுவர் “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்” என்று சொன்னார். அந்த உசந்த மனோபாவத்தைக் கேசித்வஜர் கதையில் பார்க்கிறோம்.

யாகத்தைப் பாதியில் நிறுத்தித்தான் இப்படிக் கேசித்வஜர் பேர் பேராக அலைந்தது. யாகமென்றால் அது முடிந்து அவப்ருத ஸ்நானம் என்பதைப் பண்ணும் வரையில் (யாகத்தை செய்பவனான) யஜமானன்‌தீக்ஷையுடனேதான் இருக்க வேண்டும். அதாவது க்ஷௌரம் (க்ஷவரம்) பண்ணிக் கொள்ளக் கூடாது. க்ருஷ்ணாஜினம் என்ற கறுப்பு மான் தோல் உடுத்திக் கொள்ள வேண்டும். இன்னம் அநேக நியமங்கள் – அரித்தால்கூட கையால் சொறிந்து கொள்ளாமல் மான் கொம்பால்தான் சொறிந்து கொள்ளவேண்டும் என்கிற மாதிரி. அந்தப்படி இப்போது தாடியும் மீசையும் மான்தோலுமாகத்தான் கேசித்வஜர் இருந்தார். இந்தக் கோலத்திலேயேதான் அவர் காட்டுக்குப் போனது.

காட்டிலே காண்டிக்யரும் அவரது சின்ன பரிவாரமும் இருக்குமிடத்தை கேசித்வஜர் கண்டுபிடித்து விட்டார். உடனே பரம சத்ருவின் இருப்பிடத்துக்குக் கொஞ்சம்கூட மனஸ் கலங்காமல் தேரைச் செலுத்தினார்.

காட்டுக்கு வந்த பரதனை தூரத்திலிருந்து பார்த்ததும் லக்ஷ்மணனுக்கு எப்படிக் கோபம் வந்ததோ அப்படியே தான் இப்போது காண்டிக்யருக்கும் கேசித்வஜரைப் பார்த்ததும் வந்தது. பரதன் பரிவாரத்தோடு வந்தது போலில்லாமல் இவர் தனியாக வந்தும் அவருக்கு ஏன் கோபம் வந்ததென்றால், ஏகாங்கியாக அவர் வருவதே ஒரு சூழ்ச்சிதான் என்ற ஸந்தேஹம் ஏற்பட்டதாலேயே கோபம் வந்தது.

”அடே கேசித்வஜா! யஜ்ஞ தீக்ஷை வேஷத்தில் க்ருஷ்ணாஜினம் போட்டுக் கொண்டு நீ வந்தால் நான் உன்னைக் கிட்டே சேர்த்துக் கொண்டுவிடுவேன், அப்புறம் ஸமயம் பார்த்து என்னைத் தீர்த்துக் கட்டிவிடலாம் என்று தான் நீ இப்படி வந்திருக்கிறாயென்று புரிந்து கொண்டு விட்டேனடா! உன்னை முந்திக் கொண்டு நான் இதோ அம்பு போட்டு உன்னைத் தொலைத்து விடுகிறேன் பார்! மான் தோல் போர்த்தியவனைக் கொல்லக் கூடாது என்று தந்திரம் பண்ணினாயானால் அது பலிக்காது. இந்தத் தோலைப் போர்த்திக்கொண்டு உயிரோடு ஓடுகிற மானையே அடிக்க நமக்கு ராஜதர்மம் இடம் கொடுப்பதால், வேஷதாரியான உன்னையும் அந்த விதிப்படி வேட்டையாடுவேன்” என்று காண்டியர் கன கோபமாக நாணேற்ற ஆரம்பித்தார்.

“அப்பா, காண்டிக்யா! அவசரப்படாதே! நான் ஸத்யமாய் உன்னைக் கொலை பண்ண வரவில்லை. உனக்கு மட்டுமே தெரிந்ததான ஒரு தர்ம சாஸ்த்ர ஸமாசாரம் கேட்டுக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறேன் – நிராயுதபாணியாய் வந்திருக்கிறேன். அறிவு பிக்ஷை போட்டு உபகாரம் பண்ணப்பா. யஜ்ஞ பூர்த்திக்கு அவச்யமான விஷயம் கேட்டுப் போக வந்தேன். அந்த விஷயம் தெரியாமலே போகுமானால், அபூர்ணமாக யஜ்ஞத்தை விடுவதைவிட, என் உயிரையே விடவும் தயாராயிருக்கிறேன். ஆகையால் நீ ஒன்று, கோபத்தை விடு, அல்லது பாணத்தை விடு. இரண்டையும் வரவேற்கிறேன்” என்று கேசித்வஜர் ரொம்பவும் உணர்ச்சியோடு கேட்டுக்கொண்டார்.

தமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை அறிந்து போகவே அவர் வந்திருப்பதாகச் சொன்ன மாத்திரத்தில் காண்டிக்யரின் ஸந்தேஹமும் கோபமும் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விட்டன.