ப்ராயச்சித்தம்: பகவந் நாமமும் வைதிக கர்மமும்
”ஆனால் கோவிந்த நாமா ப்ராயச்சித்தம் இல்லையா?” என்றால் ப்ராயச்சித்தம்தான். வேறு ப்ராயச்சித்தம் எதுவுமே நம்மால் முடியவில்லை என்று தீர்ந்து போய்விட்டபோது தான் அந்தப் பெரிய ப்ராயச்சித்தத்துக்குப் போக வேண்டும். ரொம்பவும் வீர்யமான மருந்தை முதலிலேயே கொடுப்பார்களா? மருந்து, ஊசி, ஆபரேஷன் என்று ஒன்றுக்கப்புறம்தானே மற்றொன்றுக்குப் போவார்கள்? அம்மாதிரி சாஸ்த்ரத்தில் சொன்ன மற்ற பரிஹாரங்கள் நம்மால் முடியவே இல்லை என்றாலோ, அவற்றாலும் பயன் ஏற்பட்டதாகத் தெரியாவிட்டாலோ தான் மஹா பெரிய உபாயமான நாமாவே கதி என்று சரணாகதி செய்ய வேண்டும்.
நாமோச்சாரணம் ஸுலபமாயிருக்கிறதென்பதால் நாம் பிறத்தியார் விஷயமாக அதுவே நமக்கு ப்ராயச்சித்தம் என்று பண்ணுவதுபோல், நம் விஷயமாகப் பிறத்தியார் பண்ணினால் சும்மா இருப்போமா? நமக்குத் தர வேண்டிய பணத்தைக் கடன்காரன் தரமாட்டேன் என்கிறான். “கோவிந்த நாமா சொல்லவிட்டேன். கடனைத் திருப்பிக் கொடுக்காத தோஷம் எனக்கு வராது” என்கிறான். ஒப்புக் கொள்வோமா?
அதற்கு உண்டான பரிஹாரத்தைப் பண்ண முடியாத போதுதான் மனஸ் உருகி நாமாவைச் சொல்லி அழுதால் கோவிந்தன் தோஷத்தைக் கழுவி விடுவான்.
வேர்த்து விருவிருத்து, பசித்துக் களைத்து ஒரு வீட்டுக்குப் போகிறோம். நன்றாக ஸ்நானம் பண்ணி, வயிறாரச் சாப்பிடணும் போல இருக்கிறது. வீட்டுக்காரர்கள் “கோவிந்தேதி ஸதா ஸ்நானம்னு இருக்கு. ‘கோவிந்தா’ன்னுங்கோ. அதுவே குளிச்சாப் போலே. ‘நாமாம்ருதம்’னு நாமாவை ஸாதாரணச் சாப்பாட்டுக்கு மேலே அம்ருதமாவே சொல்லியிருக்கு. அதனாலே போஜனத்துக்குப் பதிலும் ‘கோவிந்தா போட்டுடுங்கோ’ என்று சொன்னால் அப்போது நமக்குப் பற்றிக் கொண்டு வருமே தவிர, நாம மஹிமையா தெரியும்? நிஜமாகவே மஹிமை தெரியும்போது அதுவே ஸர்வ ப்ராயச்சித்தம் தான்.