காண்டிக்யர் காண்டிக்யர் வேதாந்தத்தின் பக்கம் அதிகம் போகவில்லை அவர் முழுக்கவும் கர்ம மார்க்கக்காரராகவே இருந்தார் ப்ரம்ம வித்யா சாஸ்த்ரங்களில் கேச

காண்டிக்யர்

காண்டிக்யர் வேதாந்தத்தின் பக்கம் அதிகம் போகவில்லை. அவர் முழுக்கவும் கர்ம மார்க்கக்காரராகவே இருந்தார். ப்ரம்ம வித்யா சாஸ்த்ரங்களில் கேசித்வஜர் எப்படி நிபுணராயிருந்தாரோ, அப்படி வைதிக கர்மாநுஷ்டானங்களிலும், அவற்றுக்கான சாஸ்த்ரங்களிலும் காண்டிக்யர் நிபுணராயிருந்தார். ஆகக்கூடி, கர்ம காண்டம், ஞான காண்டம் என்ற இரண்டிலே இந்த இரண்டு ஜனகர்களில் ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றில் பெரிய ’ஸ்கால’ராக இருந்தனர். அதே ஸமயத்தில் வியவஹாரத்தில் எல்லா ராஜாக்களும் எப்படி இருப்பார்களோ அப்படியே ‘ப்ராக்டிகலாக’வும் இருந்தார்கள். இத்தனை நாழி அத்வைதிகளைப் பற்றி நான் சொன்னதற்கேற்ப, கர்ம மார்க்க காண்டிக்யரைவிடவும் ஞான சாஸ்த்ர நிபுணரான கேசித்வஜர்தான் ப்ராக்டிகலாக முன்னேறுவதில் அதிக சிறப்போடு விளங்கினார்.

அக்கால ராஜதர்மத்தில் எல்லா தேசங்களையும் ஜயித்து, அவற்றைக் கட்டியாளும் ஸார்வபௌமனாவதே ஒரு ராஜாவின் கடமையாக நினைக்கப்பட்டது. அந்தப்படி காண்டிக்யர் தம்முடைய ஒன்றுவிட்ட ஸஹோதரரான கேசித்வஜரின் ராஜ்யத்தையும் கைப்பற்றுவதற்கு முஸ்தீபு பண்ணினார். வேதாந்தப் படிப்பால் ப்ராக்டிகல் வியவஹாரங்களில் கொஞ்சமும் பின்வாங்காத கேசித்வஜரும் இப்படியே காண்டிக்யரின் படை மேல் எதிர்த் தாக்குதல் நடத்தினார். சித்தப்பா – பெரியப்பா பிள்ளைகளான இரண்டு ஜனகர்களுக்கும்  யுத்தம் மூண்டது.

கார்ய லோகத்தில் ஒன்றைச் செய்து முடிப்பதில் அதிக ஸாமர்த்தியம் பெற்றிருந்த கேசித்வஜரே ஜயித்தார்.

காண்டிக்யர் மந்த்ரி-பிரதானிகள், புரோஹிதர்கள் முதலான ஸ்வல்ப பரிவாரத்தோடு காட்டுக்குத் தப்பி ஓடினார். அங்கேயும் யாகங்களை விடாமல் பண்ணினார்.

இங்கே, கேசித்வஜரும் இனி சத்ரு பயமில்லை என்பதால் நிம்மதியாக நிறைய யாகங்கள் செய்யலாமென்று ஆரம்பித்தார்.