அத்வைத ஞானிகளும் நடைமுறை உலகும் ப்ருஹதாரண்யகத்தில் வரும் ஜனகர், ஸீதை அப்பா ஜனகர் முதலானவர்கள் ஆத்மாநுபூதியில் ஸித்தியே பெற்ற பிற்பாடும் ராஜ்ய நிர்

அத்வைத ஞானிகளும் நடைமுறை உலகும்

ப்ருஹதாரண்யகத்தில் வரும் ஜனகர், ஸீதை அப்பா ஜனகர் முதலானவர்கள் ஆத்மாநுபூதியில் ஸித்தியே பெற்ற பிற்பாடும் ராஜ்ய நிர்வாஹம் பண்ணினவர்கள். பார்த்தால் வேடிக்கையாயிருக்கும் – லோகம் மாயை, உடம்பு மாயை, மனசு மாயை என்றிருந்த அத்வைத ஞானிகள் பல பேர் தான் இவற்றை நிஜமாக நினைக்கிற த்வைதிகளைவிடவும் லோகத்திலே கார்ய ரூபத்தில் அபாரமாக ஸாதித்திருக்கிறார்கள். ஆசார்யாள் (ஆதி சங்கரர்) ஒரு உதாரணம் போதும். பரம அத்வைதியான அவர் முப்பத்திரண்டே வயசுக்குள் ஆஸேது ஹிமாசலம் இந்த தேசத்தை ஓர் இடம் விடாமல் சுற்றி, எத்தனை வாதம், எத்தனை பாஷ்யம், எத்தனை யந்த்ர ப்ரதிஷ்டை, மூர்த்தி ப்ரதிஷ்டை, ஸ்தோத்ர க்ரந்தம், மட ஸ்தாபனம் என்று பண்ணியிருக்கிறார்? அப்புறம் ஆசார்யாளின் மடம் ஒன்றில் ஆதிபத்யம் வகித்த வித்யாரண்யாள்தான் விஜயநகர ஸாம்ராஜ்யத்துக்கு விதை விதைத்து எழுச்சி தந்தது. அதற்கப்புறம் சிவாஜி மஹாராஜா ஹிந்து ஸாம்ராஜ்யம் ஸ்தாபித்தாரென்றால் அதற்கான கார்ய உத்ஸாகத்தை அவருக்கு ஊட்டி, அவரை ஸதாவும் guide பண்ணிக் கொண்டிருந்தவரும் பரம அத்வைதியான ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள்தான். இங்கே நம்முடைய தஞ்சாவூரிலே நாயகர்களின் ராஜ்யம் ஏற்படக் காரணமாயிருந்து, முதல் மூன்று ராஜாக்களுக்கு பிரதம மந்த்ரியாக இருந்தது யாரென்று பார்த்தால் அவரும் ஒரு கடைந்தெடுத்த அத்வைதிதான் – கோவிந்த தீக்ஷிதர் என்பது அவர் பெயர். ஆகக் கூடி, விஷயம் தெரியாத வெள்ளைக்காரர்கள் அத்வைதத்தின் ‘மாயா டாக்ட்ரின்’ (Maya Doctrine) தான் ஹிந்துக்களுக்குக் கார்யப் பிரபஞ்சத்தில் ஈடுபாடில்லாமல் சோப்ளாங்கிகளாக்கித் துருக்கர், வெள்ளைக்காரர்கள் முதலியவர்களிடம் நாட்டைப் பறிகொடுக்க வைத்தது என்று சொன்னாலும், சரித்திரத்தை நிஷ்பக்ஷமாகக் கூர்ந்து பார்த்தால் உண்மை இதற்கு நேர்மாறானது என்று தெரியும்.

அதெப்படி அத்வைத ஞானிகள் வியவஹார லோகத்தில் இத்தனை ஸாதித்தார்களென்றால், அந்த ஞானமேதான் இந்த ஸாதனைக்குச் சக்தி தந்தது என்றுதான் புதிர் மாதிரி பதில் சொல்ல வேண்டும். ‘லோகம், உடம்பு, மனஸ் என்பவை அடிப்படையில் மாயை. ஆனாலும் வியவஹாரத்தில் இருக்கிற மாதிரி ஒரு தோற்றம் அதற்கு இருக்கிறது’ என்கிற அத்வைதக் கொள்கையை ஏற்கும்போது இந்தத் தோற்றத்தை தர்மமாகக் கர்மத்தினால் ஒழுங்குபடுத்தி, அப்புறம் ஞானத்துக்குப் போக வேண்டும் என்றும் ஏற்படுகிறது; அதே சமயத்தில் இது தோற்றம்தானேயொழிய அடிப்படையான ஸத்ய வஸ்து இல்லை என்பதால் இதோடேயே தன்னை ‘ஐடிண்டிஃபை’ பண்ணிக் கொண்டு, அதனால் இதிலேயே உழன்று கொண்டு, உழப்பிக் கொண்டு நிற்காமல் இதில் பட்டுக் கொள்ளாமல் விலகி நின்று பார்க்கவும் முடிகிறது. இதுவேதான் ஸர்வமும் என்று தப்பாக நினைக்கும்போதுதான் அந்த நினைப்பால் இதைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதில் அதீதமான கவலை ஏற்படுகிறது. அதனாலேயே சித்தத்திலே தெளிவு குறைகிறது. தர்மம் தப்பிப்கூட இதைக் காப்பாற்றிக் கொண்டாலென்ன என்கிற ரீதியில் சித்தம் போக இடமேற்படுகிறது. அதாவது ஒழுங்காகக் காரியத் திட்டம் போட முடியாமலிருக்கிறது. உள்ளத்தை வைத்துத்தானே உடம்பு? ஸைகாலஜி கூட அப்படித்தானே சொல்கிறது? அதீத ஈடுபாட்டு விசாரத்தால் சித்தம் பலமிழக்கிற போது, அதற்கு தார்கிக பலமும் குறைகிறபோது, அதன் பிரதி பலிப்பாகவே சரீரத்தின் பலம், உத்ஸாஹம், காரிய சக்தி எல்லாமும் குறைந்து போகின்றன. அத்வைதிக்கு இப்படி இல்லை. அவன் லோக வியவஹாரத்திலேயே இருப்பதாகத் தோன்றினாலும், அதிலேயே உழப்பிக் கொண்டு விசாரப் படாமல் விலகி நின்று பார்த்துக் கொண்டு இருப்பதால், ஸ்திரமான சித்த பலத்தோடு, சிதறிப் போகாத தேஹ பலத்தோடு யுக்தமாகத் திட்டம் போட்டு, அதை சக்திகரமாகக் கார்யத்தில் நிறைவேற்ற அவனால் முடிகிறது.

ஞானாப்யாஸம் பண்ணி அத்வைதாநுபவத்தில் ஸித்தி அடைந்தவர் மட்டுந்தான் இப்படி என்றில்லை. ஞான சாஸ்த்ராப்யாஸம் மட்டுமே நிறையப் பண்ணி, ஆனாலும் அதையே இப்போது ஸாதனையாக்கிக் கொள்ளாமல், அதற்குப் போவதற்குப் பூர்வாங்கமாகக் கர்மா-பக்திகளை அப்யாஸம் செய்து கொண்டிருப்பவனுக்குங்கூட, அவனுடைய ஆழ்ந்த அத்வைதப் படிப்பு உள்ளூரத் தானாகவே ஓரளவு கைகொடுத்து, அவனையும் ஓரளவுக்குப் பட்டுக் கொள்ளாமல் விலகி நிற்கவும், அதனாலேயே கார்யங்களை அதிகத் தெளிவோடும் சக்தியோடும் பண்ணவும் பக்குவப்படுத்திவிடும்.

இப்படித்தான் கார்ய லோகத்தில் கேசித்வஜர் காண்டிக்யரைவிட சோபித்து ப்ராக்டிகலாக முன்னேறினார்.