காமாக்ஷி தொடர்புள்ள பாட்டி பல தினுஸான பாட்டிகளைப் பார்த்துவிட்டோம் என்னென்ன தினுஸு? சொந்தமாகப் பாட்டுப் பாடியதாலும், சிருங்கார எண்ணம் வராமல் சிறும

காமாக்ஷி தொடர்புள்ள பாட்டி

பல தினுஸான பாட்டிகளைப் பார்த்துவிட்டோம். என்னென்ன தினுஸு? சொந்தமாகப் பாட்டுப் பாடியதாலும், சிருங்கார எண்ணம் வராமல் சிறுமியாயிருக்கும் போதே குழந்தை ஸ்வாமியான பிள்ளையார் அருளால் கிழவி ஆனதாலும் பாட்டியான ஒளவை – இவள் கன்னிப் பாட்டி; பாட்டுக்கள் ஸமர்ப்பிக்கப்பட்டதால் பாட்டியான தஞ்சாக்கூர் ராணி – இவள் யௌவன ஸுமங்கலிப் பாட்டி; ராமர் கோவில் கட்டிய தில்லை விளாகத்தின் தீர்க்க ஸுமங்கலிப் பாட்டி; பாட்டுடைத் தலைவியானதால் பாட்டியான சோழ ராஜகுமாரி – இவளும் கன்னிப் பாட்டி என்றாலும், ச்ருங்காரத்தில் மனஸை விட்டு, கல்யாணமாகாமலே அமங்கலி மாதிரியாகி உயிரை விட்டவள்… என்றிப்படிப் பல தினுஸுப் பாட்டிகளை எப்படியோ மட ஸம்பந்தப் படுத்திச் சொல்லிவிட்டேன்.

அமங்களமாய் முடிக்காமல் இன்னம் ஒரு பாட்டியைச் சொல்ல வேண்டும். நம்முடைய மடத்துக்கே, சந்த்ரமௌளீச்வரருக்கே ஜீவசக்தியாக இருக்கும் ஸர்வ மங்கள மங்களையான காமாக்ஷி மஹா த்ரிபுரஸுந்தரியின் ஸம்பந்தமுள்ளவள் இந்தப் பாட்டி. சங்ககாலத்திலேயே வாழ்ந்து பாட்டுக்கள் இயற்றியதால் ‘பாட்டி’ ஆனவள். அகநானூறு, புறநானூறு, நற்றிணை முதலியவற்றில் இவளுடைய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. முக்யமாக இவள் தெய்வ ஆவேசமாகிய ‘வெறியாடல்’ என்பதைப் பற்றிப் பாடியிருப்பதால் ‘வெறி பாடிய’ என்றே அடைமொழி பெற்றிருக்கிறாள். காஞ்சி காமாக்ஷி ஆதியிலே ரொம்ப உக்ரமாக – உக்ரம் என்றால் என்ன? நம்மால் தாங்க முடியாத அளவுக்கு அருள் வெறி பிடித்திருந்த உக்ரம்தான்! – இருந்தாளென்றும், ஆசார்யாள்தான் அவளை சமனப்படுத்தினாரென்றும் சொல்கிறார்கள், அதனால் இப்போதும் ‘பேய்க்காமாக்ஷி’, ‘வெறி காமாக்ஷி’ என்று சொல்லும் வழக்கிருக்கிறது! பேய், வெறி என்பதெல்லாம் தெய்வ ஆவேசந்தான் என்பது ‘பேய் மகள்’ ‘வெறி பாடியவள்’ என்றெல்லாம் கூறப்படும் சங்க காலப் பெண் புலவர்கள் இருந்ததிலிருந்து தெரிகிறது. இப்படி மறைமுகமாக மாத்திரம் இல்லாமல் நேராகவே காமாக்ஷி ஸம்பந்தமுள்ளவள், நான் சொல்ல வந்த பாட்டி…’வெறி பாடிய’ என்று பட்டப் பெயர் பெற்ற அவளுடைய இயற்பெயர் காமக்கண்ணியார். ‘காமக் கண்ணி’ என்றால் ‘காமாக்ஷி’ என்றே அர்த்தம்!