கம்பனும் ஸ்ரீமடமும் இம்மாதிரி கவிச் சக்கரவர்த்தி என்னும் கம்பனுக்கே மடத்தோடு சொந்தம் இருக்கிறது மடம் இருக்கிற காஞ்சி மண்டலம் தான் கம்பர் பிறந்து வ

கம்பனும் ஸ்ரீமடமும்

இம்மாதிரி கவிச் சக்கரவர்த்தி என்னும் கம்பனுக்கே மடத்தோடு சொந்தம் இருக்கிறது. மடம் இருக்கிற காஞ்சி மண்டலம் தான் கம்பர் பிறந்து வளர்ந்த அவருடைய சொந்த ஊர் என்று ஒருவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். அவர் பெயர் வஸிஷ்ட பாரதி. முதுபெரும் புலவர். இவரையும் தமிழ்த் தாத்தா என்று சொல்லலாம்.

‘கம்பரைக் கம்பநாடர், கம்பநாட்டாழ்வார் என்கிறார்கள். இதிலிருந்தே, அவர் சோணாட்டில் உள்ள தேரழுந்தூரில் வந்து தங்கியவர்தான், அவருடைய சொந்தச் சீமை சோணாடாக இல்லாத கம்பநாடு என்று ஆகிறது. முன்னூல்களைப் பார்த்தால் ‘கம்பநாடன்’ என்பது காஞ்சீபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஏகம்பநாதனின் பெயராகவே தெரிகிறது. ‘ஏகம்பன்’ என்பது ‘கம்பன்’ என்றாகலாம். அல்லது கம்பா நதி பாய்வதால் காஞ்சி மண்டலத்திற்கு கம்ப நாடு என்று பெயர் ஏற்பட்டதாகவும் கொள்ளலாம். இப்படி இன்னொரு சீமையிலிருந்து இவர் சோணாட்டுக்குப் போய் வாஸம் செய்ய ஆரம்பித்திருந்தால்தான், இவர் புதிதாகப் போன சீமைக்காரர்கள் இவரை இன்ன நாட்டுக்காரர் என்று சொல்லிக் ‘கம்ப நாடர்’ என்று பெயர் வைக்க இடம் ஏற்படும்’ என்பது இந்தத் தமிழ்த் தாத்தாவின் கருத்து.

அந்தக் கருத்தில் மேலும் தாளித்துக் கொள்ள என்னிடம் கொஞ்சம் சரக்கு இருக்கிறது. காஞ்சி மண்டல ஸம்பந்தமே கம்பரை நம் மடத்தோடு உறவுபடுத்தப் போதும் என்றாலும், கூடுதலாக இன்னொரு விஷயமும் இருக்கிறது:

காஞ்சீபுரத்துக்கு மூன்று மைலில் அம்பி என்று ஒரு கிராமம் இருக்கிறது. புலவச்சேரி மாதிரி இதுவும் நம்முடைய சந்த்ரமௌளீச்வரருக்கு சொந்தமான கிராமம். கி.பி.1111-இல் விஜயகண்ட கோபாலன் என்ற தெலுங்கு சோழராஜா இந்த கிராமத்தை மடத்துக்குக் காணிக்கையாக அர்ப்பணம் செய்திருக்கிறான். அந்த தான சாஸனத் தாமிர பட்டயம் – (செப்பேடு) – மடத்தில் இருக்கிறது.

அதிலே ‘அம்பி’யின் முழுப் பேர் அம்பிகாபுரம் என்று கண்டிருக்கிறது. அங்கே ஆலயத்தில் உள்ள சிவபெருமானுக்கு அம்பிகாபதீச்வரர் என்றே பெயர். கம்பருடைய பிள்ளையின் பெயரும் அம்பிகாபதி தான்! கம்பர் நம்மாழ்வாரைப் பற்றி ‘சடகோபர் அந்தாதி’ பாடிய வைஷ்ணவராயிருந்த போதிலும், சைவ – சைஷ்ணவ ஸமரஸ மனோபாவமுள்ளவராகப் பிள்ளைக்கு ஈச்வரன் பேரை வைத்திருக்கிறார்! கம்பரின் காலம் கிட்டத்தட்ட அம்பி கிராமம் மடத்துக்குச் சாஸனமாக்கப்பட்ட அதே காலம்தான் என்பதையும், அவர் பகவத்பாதாளை அநுஸரிப்போருக்கு உரிய சைவ – வைஷ்ணவ அபேத நோக்குப் பெற்றிருந்ததையும் பார்த்தோமானால், அவர் அம்பி கிராமத்தின் மூலம் நம்முடைய காஞ்சி மடத்தோடேயே ஸம்பந்தப்பட்டுக் கூட இருக்கலாம் என்று பெருமை கொள்ள நியாயமிருக்கவே செய்கிறது.

தத்வரீதியில் கூட அவர் நம்முடைய ஆசார்யாளின் ஸித்தாந்தத்தை நன்றாக ஆதரித்து ‘ராமாயண’த்தில் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்: மாயையினால் பிரம்மமே தான் உலகம் போலத் தோன்றுகிறது – இருட்டினால் ஒரு பழுதை பாம்பாகத் தெரிகிற மாதிரி. விளக்கைக் கொண்டு வந்தால் இருட்டு ஓடிப் போகிறாற்போல், ஞான விளக்கிலே மாயையிருள் ஓடிவிடும். வெளிச்சத்திலே, வெறும் கல்பிதமான பாம்புத் தோற்றம் அதற்கு ஆதாரமான பழுதையிலே ஒடுங்கி, பழுதை மட்டுமே உண்மைப் பொருளாய் நிற்கிறது. இப்படித்தான் ஞானப்ரகாசத்திலே உலகத் தோற்றம் என்ற பஞ்ச பூத விஸ்தாரமும் கல்பனை வஸ்துவாக ஆதார ஸத்யத்தில் ஒடுங்கி அந்த மெய்ப்பொருள் மாத்திரமே மிஞ்சும்” என்று ஆசார்யாள் விளக்கியிருக்கிறார். இந்தக் கருத்தை இதே உபமானத்தினால் கம்பரும் சொல்லி அந்த மறைமுடிவான மெய்ப்பொருள்தான் ராமன் என்கிறார்:

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை

அரவெனப் பூதம் ஐந்தும்

விலங்கிய விகாரப் பாட்டின்

வேறுபா டுற்ற வீக்கம்

கலங்குவ தெவரைக் கண்டால்

அவரென்பர் கைவில் ஏந்தி

இலங்கையில் பொருதா ரன்றே

மறைகளுக் கிறுதி யாவார்.

இப்படிப் பரம் அத்வைதம் பேசும் கம்பரோடு நம் மடம் நிச்சயம் பந்துத்வம் கொண்டாடலாம்,

அம்பிகாபதி கதையால் இன்னொரு தமிழ்ப் பாட்டியும் நமக்கு உறவாகிறாள். அவன் ப்ரேமை கொண்ட, அவனிடம் ப்ரேமை கொண்ட சோழ ராஜகுமாரிதான். அவனுடைய ஒரு கவிதைக்கு அவள் ‘பாட்டுடைத் தலைவி’ ஆனதால் ‘பாட்டி’ ஆகிறாள்! அந்தப் பாட்டுதான் அவனை ராஜாவின் சிரஸாக்கினைக்கு ஆளாக்கி அவனுடைய உயிரையே குடித்தது; உடனே அவளும் பிராணத்யாகம் செய்து விட்டாளென்று கதை.