மடத்துக்கு உறவுக்காரர்கள் தில்லை விளாகத்துக்கு இன்னொரு பெருமை அதன் கிட்டே ஒளவைப் பாட்டிக்குக் கோவில் இருப்பதாகும் தில்லை விளாகத்துக்குத் தெற்கே ந

மடத்துக்கு உறவுக்காரர்கள்

தில்லை விளாகத்துக்கு இன்னொரு பெருமை அதன் கிட்டே ஒளவைப் பாட்டிக்குக் கோவில் இருப்பதாகும். தில்லை விளாகத்துக்குத் தெற்கே நாலு மைலில் உள்ள கற்பனார் கோயில் என்ற ஸ்தலத்துக்குப் பக்கத்தில், தஞ்சாவூர் மஹாராஷ்டிர ராஜ வம்சத்தைச் சேர்ந்த துளஜாஜியின் பெயரில் துளஜாப் பட்டினம் என்ற ஊர் இருக்கிறது. அங்கேதான், ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று சொன்னவளுக்கு ஆலயம் இருக்கிறது. 1940 வாக்கில் கற்பனார் கோயிலில் புதுசாகக் கும்பாபிஷேகம் நடந்தபோது இந்த ஒளவை கோவிலும் பிரஸித்தி பெற்றுவிட்டது. தமிழறிஞர்கள் அங்கே கூடி அதை ஒரு புலவர்சேரியாகவே செய்தார்கள்.

அதற்குத் தெற்கே இன்னொரு நாலு மைல் போனால் ஸமுத்ரம். இங்கே இயற்கையாக ஏற்பட்டுள்ள சில அமைப்புக்களால் தென் வடலாக சுமார் இரண்டு மைல் அகலமும், கீழ் மேலாக சுமார் முப்பது மைல் நீளமும் கொண்ட ஸமுத்ரப் பரப்பு. வருஷத்தில் நாலு மாஸம் ஒரே உப்புக் கட்டிகளாக உறைந்து நிறைந்திருக்கும். ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் உப்பு ஸத்யாக்ரஹம் செய்தது வேதாரண்யத்தின் இந்தப் பகுதியில்தான். ஒளவையாருக்குப் பக்கத்திலேயே வேதம்! நான் ஆசைப் படுகிற மாதிரி வேதமும் தமிழும் இந்த நாட்டில் கைகோத்துக் கொண்டு போயிருக்கின்றன என்பதற்கு இன்னொரு ஸாக்ஷி!

இந்த ஆசையினால்தான், ஒளவையாரைப் போல ஒரு தமிழ்ப் பெரியவர் ‘ஆத்திசூடி’ என்கிற மாதிரி ஒரு வார்த்தையால் சந்த்ரமௌளீச்வரரை ஞாபகப்படுத்தினால் கூட உடனே, “அவர் எங்கள் மடத்துக்கு உறவுக்காரர்” என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டு நான் பெருமைப்படுவது.