ஆலயங்கள் எடுத்தவர்கள்
கண்டெடுத்த இந்த ராமர் ‘ஸெட்’டுக்குப் புதிதாகக் கோவில் கட்டி வைத்ததில் இன்னொரு பாட்டி ஸம்பந்தம் வருகிறது. இவள் ஒரு ஸுமங்கலிப் பாட்டி. கோபால க்ருஷ்ணையர் என்ற என்ஜினீயரின் பத்தினி. தில்லை விளாகத்தில் ராம மூர்த்திக்குக் கோவில் கட்டுவதற்கென்று அறுபதினாயிரம் ரூபாய் எடுத்து வைத்தவள் – அல்லது பதியை எடுத்து வைக்கச் சொன்னவள் – அவள்தான். நூறு வருஷம் முந்தி அறுபதினாயிரம் என்றால் அது இன்று எத்தனையோ லக்ஷம்.
எவ்வளவு தூரம் வாஸ்தவமோ, இதைப்பற்றி இன்னொன்று கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது, அந்த அம்மாள், தர்மவதி, தாராளமாக அறுபதினாயிரம் தரணும் என்று புருஷரிடம் சொல்லிவிட்டு ஸுமங்கலியாக ராமசரணாரவிந்தத்தை அடைந்து விட்டாளாம். அப்புறம் பத்திரம் எழுதும்போது அவள் பர்த்தாவுக்கு அவ்வளவு மனஸ் வராமல், ஆறாயிரம் கொடுத்தால் போதாதா என்று தோன்றியதாம். அப்படியே எழுத ஆரம்பித்தாராம். ‘எண்ணால்’, ‘எழுத்தால்’ என்று இரண்டு விதமாகத் தொகையைக் குறிப்பிட வேண்டுமல்லவா? முதலில் ‘எண்ணால்’ 6000 என்று எழுதப் போனவர் தம்மையறியாமல் மூன்று ஸைஃபர்களுக்கு அப்புறம் நாலாவதாக இன்னொரு ஸைஃபரும் போட்டு விட்டாராம். உடனே கண்டுகொண்டார், பத்து மடங்கு ஜாஸ்தியாக பார்யாள் விரும்பிய தொகையையே போட்டு விட்டோமென்று. ஆனாலும் மனஸிலே என்னவோ ஒன்று தைத்து, ‘எழுதியதை அடித்து மாற்ற வேண்டாம்; அவளுடைய பக்தியின் ஸுக்ஷ்ம சக்தியும் ராமசந்த்ர மூர்த்தியின் பிரபாவமுந்தான் நம்மை இப்படி எழுதப் பண்ணியிருக்கிறது’ என்று தெளிவு ஏற்பட்டு, அறுபதினாயிரம் ரூபாயே கொடுத்துக் கோவிலைக் கட்டினாராம்.
இதற்குச் சில வருஷங்களுக்குப் பிறகு, யாரோ குடியானவன் அம்பலவூருணி அருகில் வெட்டின போது தில்லை விளாகத்துக்கு அந்தப் பேர் ஏற்படக் காரணமான நடராஜாவின் திவ்யமான பெரிய மூர்த்தி அம்பாளோடு கண்டெடுக்கப்பட்டது.* விஷயம் பெரி.நா.மெ.கண. குடும்பத்து நாட்டுக்கோட்டைப் புண்யவானுக்குத் தெரிந்தது. உடனே அவர் நடராஜ மூர்த்திக்கே உரியதான ‘ஸபை’ என்கிற அமைப்பில் கோவில் கட்டினார்.
ராமர் ஸெட், நடராஜா ஸெட் ஆகிய இரண்டுவகை விக்ரஹங்களும் ஒரே அமைப்பில் இருந்ததைக் கொண்டும், மற்ற தடயங்கள், ஊக – அநுமானங்களிலிருந்தும் சிதம்பரத்தில் போலவே இங்கேயும் ஈச்வரன் நடராஜா, பெருமாள் ராமர் ஆகிய இருவர் ஸந்நிதிகளும் பக்கத்தில் பக்கத்தில் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றியதால் அவ்வாறே ஆலய நிர்மாணம் செய்யப்பட்டது.
ஐயரின் ஆராய்ச்சிக்கு அப்புறம் தில்லை விளாகம் ரொம்பப் பிரஸித்தி பெற்றுவிட்டது. இரண்டு மூர்த்திகளுக்குள் சிதம்பரத்தில் ஈச்வரன் – நடராஜா – முக்யஸ்தராக இருப்பதற்கு ஈடு செய்கிறார்போல, இங்கே பெருமாள் – ராமர் – முக்யம் பெற்று அடியார்களை ஏராளமாக ஆகர்ஷிக்கிறார்.