தில்லை விளாகம்; ராம விக்ரஹச் சிறப்பு இவருடைய அபிப்பிராயத்தை உறுதிப்படுத்தும் ஒரு விஷயம் கேள்விப்பட்டார் ‘தில்லை விளாகம்’ என்று சிதம்பரத்தின் பேர்

தில்லை விளாகம்; ராம விக்ரஹச் சிறப்பு

இவருடைய அபிப்பிராயத்தை உறுதிப்படுத்தும் ஒரு விஷயம் கேள்விப்பட்டார். ‘தில்லை விளாகம்’ என்று சிதம்பரத்தின் பேர் கொண்டதாக, தஞ்சாவூர் ஜில்லா திருத்துறைப் பூண்டி தாலுகாவில் உள்ள கிராமத்தில் நூறு வருஷம் முந்தி ஸீதா-லக்‌ஷ்மண-ஹநுமத் ஸமேத ராமசந்த்ரமூர்த்தி விக்ரஹமும், சிவகாமஸுந்தரி ஸமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தி விக்ரஹமும் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டார். இவரும் உடனே உண்மையைக் கண்டெடுக்க ஆராய்ச்சியால் ‘தோண்டினார்’. முடிவாக இந்தத் தில்லை விளாகம் தான் திருச்சித்ரகூடம் என்ற திவ்யதேசம் என்று தீர்மானம் பண்ணினார். ‘உபய வேதாந்தி’யாய் இல்லாவிட்டாலும், ‘உபய’த்தில் ஒன்றான திவ்ய ப்ரபந்தப் ‘பெருமாள் திருமொழி’யில் இவர் செலுத்திய ஈடுபாடு பலனளித்து விட்டது!

‘தில்லை’ விளாகம் என்று இன்று ஊர் பேரே இருப்பதால் இது ஆதியில் ‘தில்லைச் சித்ரகூடம்’ என்று பேர் பெற்றிருக்கக் கூடும்தான். தில்லைக்குரிய நடராஜாவும், சித்ரகூடத்துக்கு உரிய ராமரும் சேர்ந்து இருக்கும் இந்த ஊருக்குத் தானே இந்தப் பேர் ரொம்பப் பொருத்தம்?

இங்கே நடராஜ மூர்த்தி அகப்பட்டது எவ்விடத்திலென்றால், ‘அம்பல ஊருணி’ என்ற குளத்தருகில். மறுபடியும் தில்லைச் சிற்றம்பல ஸம்பந்தம் வந்துவிடுகிறது! அதாவது பூர்வகாலத்தில் இது இரண்டாவது சிதம்பரமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். இப்போதும் திருவெண்காட்டை ‘ஆதி’ சிதம்பரம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிதம்பர தீக்‌ஷிதர் மூவாயிரவரில் ஒரு பிரிவினர் வெகு காலம் முன்பு தில்லை விளாகத்திலும் பூஜகர்களாக இருந்திருக்கலாம். அதனாலேயே குலசேகரப் பெருமாள் ‘அந்தணர்க ளொருமூவா யிரவரேத்த’ என்று பாடியிருக்கலாம்!

தில்லை விளாகத்துக்கு உள்ள ராம ஸம்பந்தம் ரொம்ப ஸ்வாரஸ்யம்! விக்ரஹம் கிடைத்த பிறகு கட்டிய கோவிலுக்குப் புஷ்கரிணியாக இப்போது ‘ராம தீர்த்தம்’ எனப்படுவதற்கு ரொம்ப காலமாக ‘நல்ல பிள்ளை பெற்றாள் குளம்’ என்ற பெயர் வழங்கி வந்திருக்கிறது. யார் அந்த ‘நல்ல பிள்ளை பெற்றாள்’ என்றால் கௌஸல்யா தேவிதான். ‘கௌஸல்யா ஸுப்ரஜா’ என்ற விச்வாமித்ரர் வாக்கால் இன்றைக்கும் விச்வ முழுவதும் ஸ்துதிக்கப் படுபவன் ராமன். ’ஸுப்ரஜா’வுக்கு நேர்தமிழ்தான் ‘நல்ல பிள்ளை’. இவ்வூருக்குப் பக்கத்தில் ‘கழுவன் காடு’ இருக்கிறது – ஜடாயுக் கழுகை நினைவுபடுத்துவதாக. ‘ஜாம்பவான் ஓடை’யும் இருக்கிறது. ஏழெட்டு மைலில் ‘தம்பிக் கோட்டை’ – லக்ஷ்மணன் பேரில் ஏற்பட்டது என்கிறார்கள். அப்புறம் ஆறேழு மைல் போனால் அதிராம்பட்டினம் என்கிற அதிவீர ராமபட்டினம்.

இன்றைக்கு தெய்விகமான ரூப ஸௌந்தர்யத்துக்குப் பேர் போன விக்ரஹங்களாக ஒரு பத்துப் பதினைந்தை முதல் rankகள் கொடுத்துச் சொன்னால் அதில் தில்லை விளாகம் ராமரும் ஒருத்தராக இருப்பார். ஐந்தடி உயரத்துக்கு அந்தசந்தமாய் ஸர்வாங்க ஸுந்தரமாய் நிற்கும் ராமசந்த்ர மூர்த்தியை எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நரம்புகள், ரேகைகள்கூடத் தெரிகிற மாதிரி அப்படியொரு நுட்பமான சிற்ப வேலைப்பாடு. ‘வேலைப்பாடு’ என்று சொல்வது கூடத் தப்பு – சிற்பி கை வழியாக ஸ்ரீராமனே வந்திருக்கிறானென்று தான் சொல்லணும். இதிலேயுள்ள அநேக விசேஷங்களில் ஒன்று ‘ராம சரம்’ என்கிற அம்பு. மற்ற ஸ்தலங்களிலுள்ளது போல், கூர்முனைக் கோடியிலுள்ள தலைப்புற நுனியில் மொட்டையாகவோ, பிறை வடிவமாகவோ முடியாமல் ஒரு முக்கோணத்தைப் போல முடிந்திருப்பது. இன்னொரு விசேஷம், இடதுகை மணிக்கட்டில் கௌஸல்யா தேவி – நல்ல பிள்ளை பெற்றாள் – அந்த நல்ல பிள்ளையின் வனவாஸத்தில் அதற்குத் தீங்குகள் வராமலிருக்க வேண்டும் என்று கட்டிய ரக்ஷை காணப்படுவது.

ஸீதை, லக்ஷ்மணர், ஹநுமார் எல்லாமே நெஞ்சைக் கவர்கிற மூர்த்திகள். ஹநுமாரிடம் சிறப்பு அம்சம், ‘திறல் விளங்கு மாருதி’ என்று ஆழ்வார் சொன்னது வீரத்தின் திறலாக இல்லாமல் பணிவின் திறலாக, பக்தியின் சக்தியாக வடித்தெடுக்கப்பட்டிருப்பதாகும். எங்கேயுமே யஜமானர் முன்பு அவர் அஸம்பாவிதமாக வீரத்தைக் காட்டிக் கொண்டு நிற்பதில்லை என்றாலும் இங்கே அடக்கத்திலும் அடக்கமாக இடது கையை உடம்பைச் சேர ஒட்டித் தொடையில் வைத்துக் கொண்டு வலது கையால் வாயைப் பொத்திக் கொண்டு நிற்கிறார்.

பரத, சத்ருக்னர்களோடு பட்டாபிஷிக்தராக அமர்ந்த திருக்கோலத்தில் இல்லாமல், இப்படி ஸீதா, லக்ஷ்மண ஸமேதராக மாத்திரம் ராமர் நின்ற திருக்கோலத்தில் விளங்குகிற ஆலயங்களை ‘சித்ரகூடம்’ என்று சொல்வது வழக்கம். வனவாஸத்தில் ஸீதா லக்ஷ்மணர்களோடு மாத்திரம் ராமர் இருந்ததில் முக்யமான இரண்டு இடங்கள் சித்ரகூடமும், பஞ்சவடியும் ஆகும். ஆனால் பஞ்சவடியில் ஸீதையின் அபஹரணம் நடந்ததால் அதைச் சொல்லாமல், இப்படி மூவராக உள்ள ஸந்நிதியைச் சித்ரகூடம் என்றே சொல்கிறார்கள். சித்ரகூடத்தில் ஆஞ்ஜநேயர் ராமரிடம் வந்து சேரவில்லைதான். ஆனால் நாம் வழிபடும்போது ஒரு தெய்வத்தோடு அதன் பிரதம கிங்கரரையும் சேர்த்துத்தான் ஆராதிக்க வேண்டும். நந்திகேச்வரர் இல்லாமல் பரமேச்வரனையும், கருடாழ்வார் இல்லாமல் மஹாவிஷ்ணுவையும், ஆஞ்ஜநேயர் இல்லாமல் ராமரையும் பூஜிப்பதற்கில்லை என்பதாலேயே இங்கே ஆஞ்ஜநேயரும் காட்சி கொடுக்கிறார்.