திருச்சித்ரகூடம் எது? சைவர்களுடைய ’பாடல் பெற்ற ஸ்தல’ங்களில் முதலிடம் பெற்றுள்ள சிதம்பரத்தை வைஷ்ணவர்களும் தங்களுடைய நூற்றியெட்டு ‘திவ்யதேச’ங்களில

திருச்சித்ரகூடம் எது?

சைவர்களுடைய ’பாடல் பெற்ற ஸ்தல’ங்களில் முதலிடம் பெற்றுள்ள சிதம்பரத்தை வைஷ்ணவர்களும் தங்களுடைய நூற்றியெட்டு ‘திவ்யதேச’ங்களில் ஒன்றான ‘தில்லை நகர் திருச்சித்ர கூடம்’ என்கிறார்கள். பரமேச்வரன் நடராஜாவாக ஏக ஆட்டம் ஆடும் அந்த க்ஷேத்ரத்திலே, அந்த ஆலயத்திலேயே மஹா மாயாவியான மஹாவிஷ்ணு கோவிந்தராஜா என்ற பெயரில் ஒரே தூக்கமாகத் தூங்கிக் கொண்டே ஜகத்ரக்ஷணம் பண்ணுகிறார்! இந்த ஸந்நிதிதான் திருமங்கையாழ்வாரும் குலசேகரப் பெருமாளும் மங்களாசாஸனம் செய்துள்ள தில்லைச் சித்ரகூடம் என்கிறார்கள்.

ஆனால் ஸ்வாமிநாதையருக்கோ இந்த திவ்யதேசம் சிதம்பரம் இல்லை என்று அபிப்பிராயம். ’சித்ரகூடம் என்பது பெயரானால் அதிலுள்ள மூர்த்தி ராமசந்த்ர மூர்த்தியாகத்தானே இருக்கணும்? பேர் சித்ரகூடம், பெருமாள் கோவிந்தராஜா என்றால் பொருத்தமே இல்லையே’ என்று அவருக்கு யோஜனை. சேஷ சயனம் செய்யும் மஹாவிஷ்ணுவே கோவிந்தராஜா என்று கிருஷ்ணராக ஆக்குவது மட்டும் ஸரியா என்றால், ஸரிதான். ஏனென்றால் கிருஷ்ணர் பூர்ணாவதாரம் என்ற முறையிலே அவரையும் மஹா விஷ்ணுவையும் ஒருவராகவே பாவிப்பது வழக்கந்தான். திருப்பதி ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கே “கோவிந்தா”தானே போடுகிறோம்?

ஐயரின் கவனத்தில் பதிந்த இன்னொரு விஷயம். சித்ரகூடத்தைப் பாடியுள்ள குலசேகரர் தம்முடைய ‘பெருமாள் திருமொழி’யின் அந்தப் பாசுரத்தில் முழுக்க ராமாயண ஸம்பவங்களையே சொல்லிக்கொண்டு போவதாகும். ஆனபடியால் ராமரை மூலவராகக் கொண்ட ராமக்ஷேத்ரமாகிய வேறேதோ தில்லைச் சித்ரகூடத்தைத் தான் சிதம்பரமாக நினைக்கும் வழக்கம் வந்து விட்டதா என்று ஐயர் ஆராயந்து கொண்டிருந்தார்.

ஒரு எதிர்க் கேள்வி கேட்கலாம். “குலசேகரர் ராமனையே இஷ்ட மூர்த்தியாக உபாஸித்தவர். பூர்வத்தில் இவர் சேர நாட்டு அரசராகத் திருவஞ்சிக்களத்திலிருந்து கொண்டு ஆட்சி நடத்திய போது ராமாயண உபந்நியாஸம் நடந்து, அதிலே ‘ஜனஸ்தானத்திலிருந்த பதிநாலாயிரம் ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்வதற்காக ராமர் தனி மனிதராகப் புறப்பட்டார்’ என்ற இடம் வந்தவுடன் இவர், பக்திப் பரவசத்தில் கால பேதங்களை மறந்துவிட்டார். ’என் ஸ்வாமி தனித்துப் போகவா? இதோ என் ஸேனைகளைத் திரட்டிக் கொண்டு, கூடப் போவேன்’ என்று கிளம்பியிருக்கிறார்! அவருக்கு ‘அந்தா ராம மய’மாக இருந்ததால் திருக்கண்ணபுரத்தில் கூடத்தான் கௌஸல்யா தேவியின் பாவத்தில் குழந்தை ராமருக்கு தாலாட்டுப் பாடியிருக்கிறார். ஆகையால் கோவிந்தராஜாவையும் அவர் ராமராகப் பாடியிருப்பதில் ஆராய்ச்சிக்கான விஷயம் என்ன இருக்கிறது?” என்று கேட்கலாம்.

இதிலே எனக்கு ஒரு கட்சியும் இல்லை. ஸ்வாமிநாதையர் கருத்தைச் சொல்ல மட்டும் வந்தேன். அவர் அபிப்பிராயப்படி, திருக்கண்ணபுரத்தில் பாடிய மாதிரி ஜெனரலாக – பொதுப்படையாக – இல்லாமல், சித்ரகூடத்தில் பாடியபோது,

தில்லை நகர் திருச்சித்ர கூடந்தன்னுள்

      திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் தன்னை

என்று, இது ராமனின் மூர்த்தி இருக்கும் ஸந்நிதிதான் என்று திட்டமாகக் குறிப்பிட்டே காட்டியிருக்கிறது.