தஞ்சைவாணன் கோவை நம் மடத்துக்கு நீண்ட காலமாகவே தமிழ்ப் புலவர்கள் தொடர்பு உண்டு என்று நான் ஸாக்ஷி காட்டிய ஒரு விஷயம் அவருடைய ஆராய்ச்சிக்கும் ஒத்தாசை ப

தஞ்சைவாணன் கோவை

நம் மடத்துக்கு நீண்ட காலமாகவே தமிழ்ப் புலவர்கள் தொடர்பு உண்டு என்று நான் ஸாக்ஷி காட்டிய ஒரு விஷயம் அவருடைய ஆராய்ச்சிக்கும் ஒத்தாசை பண்ணியதால் ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்துவிட்டார்.

அதென்ன விஷயம்?

‘தஞ்சைவாணன் கோவை’ என்று கேள்விப்பட்டிருக்கலாம். ‘கோவை’ என்பது தொண்ணூற்றாறு ப்ரபந்த வகைகளில் ஒன்று. ‘அகப்பொருள்’ என்பதாக நவரஸங்களில் ச்ருங்காரத்தைச் சொல்கிறார்களல்லவா? அந்த ரஸப் பிரதானமாக ஆக்கப்பட்ட காவிய வகைகளில் ஒன்றே கோவை என்பது. இப்படி நாயிகா பாவத்தில் ஈச்வராராதனையே செய்துமாணிக்கவாசக ஸ்வாமிகள் செய்த நூலுக்குத்தான் ‘கோவை’ என்பதே டைட்டிலாகித் ‘திருக்கோவையார்’ என்று பெயர். முதலில் வரும் ‘திரு’ மரியாதை அடைமொழி; பின்னால் வரும் ‘யார்’ என்பதும் மரியாதை விகுதிதான்; ‘கோவை’ என்பது தஞ்சையில் இருந்த வாணன் என்ற வள்ளலைப் பற்றிய ச்ருங்கார காவியம்.

அவனைப் பற்றி ஒரு கதை உண்டு. ஒருநாள் தமிழ்ப் புலவர்கள் அவனுடைய அரண்மனைக்குப் போனபோது அவன் ஊரில் இல்லை. ஆனால் அவனுடைய ராணி இருந்தாள். அவளும் நல்ல ரஸிகத்தனம் உள்ளவள். அதனால், வந்த புலவர்கள் வெறுமே திரும்ப வேண்டாமென்று அவளுக்கே தாங்கள் இயற்றி வந்திருக்கும் பாட்டுக்களைப் பாடிக் காட்டுவது – அந்தப் புலவர்கள் பாஷையில் சொல்வதானால் ‘திருச்செவி சாற்றுவது’ – என்று முடிவு பண்ணி, அப்படியே செய்தார்கள்.

இவளையும் ஒரு தமிழ்ப்பாட்டி என்று சொல்லிவிடலாம். எப்படி என்றால், வயஸிலே இவள் பாட்டி இல்லை; யௌவனப் பிராயத்தில் இருந்தவள்தான். ஆனால் பாட்டுக்களைப் புலவர்களிடமிருந்து பெற்றவள் அல்லவா? அதனால் ‘பாட்டி’ என்று சொல்லலாம். பாட்டு ஸமர்ப்பணத்துக்குப் பாத்திரமானதால் பாட்டியான தஞ்சைவாணன் பத்தினி அவனைப் போலவே, அல்லது அவனையும்விட அதிகமாகவே, தானும் புலவர்களை ஸம்மானிக்க வேண்டுமென்று நினைத்தாள். அவர்கள் பாடிய ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு தாம்பூல மரியாதை பண்ணினாள். ஒவ்வொரு தாம்பூலத்திலும் ஸாதாரணத் தேங்காய்க்குப் பதில் தங்கத்தாலான ஒரு தேங்காயை வைத்துக் கொடுத்தாள். வாணன் ஊரிலில்லாத போது இவர்கள் வருவார்களென்று முன்னமேயே தெரிந்து, நிறைய ஸ்வர்ணத் தேங்காய்கள் பண்ணி வைத்துக் கொண்டிருந்தாள் போலிருக்கிறது!

புலவர்கள் ஒரே ஸந்தோஷமாக விடைபெற்றுக் கொள்ளும் ஸமயத்தில் தஞ்சை வாணன் திரும்பி வந்துவிட்டான். ராணி ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு தங்கத் தேங்காய் கொடுத்தாள் என்றதும் அவனுக்கு ஏக கோபம் வந்து விட்டது. “என்னது? தங்கத் தேங்காயா? எதற்கு என்ன மதிப்புக் கொடுக்கலாம் என்பதில் இப்படியா வியவஸ்தை கெட்டுப் பண்ணுவது?” என்று அவளை ரொம்பவும் கோபித்துக் கொண்டுவிட்டு புலவர்களைப் பார்த்தான். “தங்கத் தேங்காய்களை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு, இந்த ஸபையிலேயே சற்று நேரம் உட்கார்ந்திருங்கள். நியாயமாக உரிய ஸம்பாவனையை நான் தீர்மானம் பண்ணிவிட்டு அப்புறம் வந்து கொடுக்கிறேன்” என்றான்.

ராணிக்கு ஈயாடவில்லை. புலவர்களுக்கும் ரொம்ப ஏமாற்றமாயிற்று. ஆனாலும் வேறு வழியில்லாமல் தேங்காய்களை வாணனிடம் திருப்பிக் கொடுத்தார்கள். அவன் அரண்மனைக்கு உள்ளே போய் விட்டான். ஸபா மண்டபத்தில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த புலவர்கள், “கொடைவள்ளலாகவும், மரியாதைப் பண்பில் மிக்கவனாகவும் இருந்தவன் என்ன இப்படி அடியோடு மாறி, நம்மை இத்தனை நேரம் காக்க வைக்கிறானே!” என்று அலுப்படைந்தார்கள்.

வாணன், ராணி ஸஹிதம் திரும்பி வந்தான்.

புலவர்களுக்கு ஸம்பாவனை பண்ணினான். என்ன ஸம்பாவனை என்றால் அந்தத் தங்கத் தேங்காய் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களுக்குப் பதில் விலை மதிக்க முடியாத மூன்று ரத்தினங்கள் பதித்துக் கொடுத்தான்!

வெறும் தேங்காயாகக் கொடுக்காமல் தங்கத் தேங்காயாக ராணி தந்தாளென்றால், ‘வெறும் தங்கத் தேங்காயா தருவது?” என்றே கோபமடைந்து, ரத்தினங்கள் பதிப்பித்துக் கொடுத்தான் அந்த வள்ளல்.

இவனுடைய ராணி பாட்டி என்றால், இவனும் தமிழுக்கு அள்ளிக் கொடுத்த தாதா ஆதலால் தமிழ்த் தா(த்)தா தான்!

இந்த தஞ்சைவாணனைப் பற்றி ஸ்வாமிநாதையர் ஒரு ஆராய்ச்சி செய்திருந்தார். அதாவது, அவன் ஆட்சி நடத்திய தஞ்சை சோழ தேசத்திலுள்ள தஞ்சாவூர் இல்லை என்றும், பாண்டிய நாட்டிலுள்ள தஞ்சாக்கூர்தான் என்றும் பல காரணங்கள் காட்டி அவர் முடிவு செய்திருந்தார்.

மதுரையிலிருந்து மானாமதுரை போகும் ரயில்வே லைனில் திருப்பாச்சேத்தி என்று ஒரு ஸ்டேஷன் இருக்கிறது. அதற்கு ஒரு மைல் தெற்கே போனால் வருவது இந்தத் தஞ்சாக்கூர்.