உ வே சா செய்த பணி தமிழ்ப்பாட்டி தானே ஒரிஜினலாகப் பாடியவள் பாட்டினால் தர்ம போதனை பண்ணினவள் தமிழ்த் தாத்தா முக்யமாக ஆராய்ச்சியாளர்தான் ஏற்கெனவே இருந

உ.வே.சா. செய்த பணி

தமிழ்ப்பாட்டி தானே ஒரிஜினலாகப் பாடியவள். பாட்டினால் தர்ம போதனை பண்ணினவள். தமிழ்த் தாத்தா முக்யமாக ஆராய்ச்சியாளர்தான். ஏற்கெனவே இருந்த நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தவர். அரைகுறையாய்க் கிடைத்த பல நூல்களை முழுதாகக் கண்டுபிடித்துப் பூர்ண ரூபத்தில் கொடுத்திருக்கிறார். மூலம் அடியோடு மறைந்தே போய், எங்கேயோ மேற்கோள்களில் பிரஸ்தாவிக்கப்பட்டதால் மட்டும் துளித் துளி தெரிந்த நூல்களையும் தேடு தேடு என்று தேடிப்போய், கண்டு பிடித்துப் பிரகாசப்படுத்தியிருக்கிறார். எங்கேயாவது ஒரு அபூர்வமான சுவடி இருக்கிறது என்று கேள்விப்பட்டுவிட்டால் போதும், உடனே எப்பாடு பட்டாவது, எத்தனை அலைச்சல் அலைந்தாவது, யாரானாலும் அவரிடம் கெஞ்சி மன்றாடியாவது அதைப் பெற்றுவிடுவார். இப்படி அவரால் புத்துயிர் பெற்ற தமிழ் நூல்கள் ஏராளம். அவருடைய பதிப்புக்களிலெல்லாம் இருக்கிற விசேஷம் என்னவென்றால், பல பிரதிகளை ஒப்பிட்டுப் பாட பேதங்கள் கொடுத்திருக்கும்; விளக்க வேண்டிய விஷயங்களுக்கெல்லாம் ‘விசேடக் குறிப்பு’ என்று கொடுத்திருப்பார்; பழைய உரைகளில் தமக்குப் புரியாத மேற்கோள்களைத் தனியாக, ‘விளங்காமேற்கோளகராதி’ என்று கொடுத்திருப்பார். ஒரு ரிஸர்ச்-ஸ்டடிக்கு இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும் அவற்றில் சிறப்பாக இருக்கும்.

ஆனால் தமிழ்ப்பாட்டியைப் போல் இந்தத் தாத்தாவுக்கு நீதி போதனைக்காக ஏற்பட்ட ஒன்றாக பாஷை இல்லை. பாஷைக்காகவே பாஷை என்று பணி செய்தார். அதனால் வைதிக தர்மத்துக்கு வேறான சமண ஸமயத்தை ஸமயம் நேர்ந்த போதெல்லாம் வலியுறுத்தும் “ஜீவக சிந்தாமணி” போன்ற நூல்களைக் கூடப் பதிப்பித்திருக்கிறார். நம்முடைய தமிழின் உயர்ந்த இலக்கிய பாரம்பர்யம் தெரிவதற்கு அவருடைய இந்தத் தொண்டு நிரம்ப உபகாரம் செய்துதான் இருக்கிறது. அதனால், அவர் செய்த ஆராய்ச்சிப் பணிகளைக் கவனித்து அவ்வப்போது அவரைப் பாராட்டி ஊக்கி, அவரை மடத்தின் பக்கம் நெருங்கி வரப் பண்ணினேன்.

அவர் பெரிசாகத் தமிழ் ஆராய்ச்சி பண்ணியிருக்கிறாரென்றால் நானும் ஏதோ கொஞ்சம் இந்த விஷயத்திலே என் ‘ஸாமர்த்தியத்’தைக் காட்டியிருக்கிறேன். இதிலே ஒன்று, இரண்டு அவர் வருகிறபோது ‘அவிழ்த்து’ விடுவேன். அவருக்கு உச்சி குளிர்ந்துவிடும். ஸம்ஸ்க்ருதத்துக்கு என்றே ஏற்பட்ட மடம் என்று நினைக்கப்படும் ஒன்றின் ‘தம்பிரான்’ தமிழில் கைவரிசை காட்டுகிறாரே என்பதில் அவருக்கு ஏற்பட்ட ஸந்தோஷம் வளர்ந்து வளர்ந்து, நம்முடைய மடத்தில் நல்ல அபிமானமும், பகவத்பாதாளிடம் பக்தியுமாக உறுதிப்பட்டன. காலக்ரமத்தில் நமக்குத் தப்பாமல் வ்யாஸ பூஜா காணிக்கை அனுப்ப ஆரம்பித்து விட்டார்! நான் ஆசைப்பட்டபடி நம் தர்மாசாரங்களில் அவருக்கு நல்ல பற்று ஏற்பட்டு விட்டது.