தமிழ் வித்வான்களும் ஸ்ரீமடமும் எப்படியாவது தமிழ்ப் பெரியார்களுக்கெல்லாம் மடத்திலே ஒரு ஸம்பந்தம் ஏற்படுத்திப் பார்ப்பதில் எனக்கு ஒரு த்ருப்தி ஏனெ

தமிழ் வித்வான்களும் ஸ்ரீமடமும்

எப்படியாவது தமிழ்ப் பெரியார்களுக்கெல்லாம் மடத்திலே ஒரு ஸம்பந்தம் ஏற்படுத்திப் பார்ப்பதில் எனக்கு ஒரு த்ருப்தி. ஏனென்றால், நம் மடம் என்றால் வெளியிலே என்ன நினைக்கிறார்கள்? அங்கே ஸம்ஸ்க்ருதத்துக்குத்தான் எல்லா முக்யமும் என்றெ நினைக்கிறார்கள். வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ‘உபய வேதாந்தம்’ என்று ஸம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டையும் போஷிக்கிறார்போல், இந்த் ஸ்மார்த்த மடத்தில் இல்லையே என்று நினைக்கிறார்கள். இதற்கு ஹிஸ்டாரிகலாக ஒரு காரணம் உண்டு. ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் ‘ஆல் இண்டியா பேஸிஸி’லேயே (அகில இந்திய அடிப்படையிலேயே) தம்முடைய அவதார கார்யத்தைச் செய்தவர். இந்தப் பெரிய தேசத்தின் தக்ஷிணத்தில் காஞ்சிபுரத்திலும், ச்ருங்கேரியிலும் செய்தாற்போலவே வடக்கு-மேற்கு-கிழக்கு எல்லைகளிலும் முறையே பதரி, த்வாரகை, புரி ஜகந்நாதம் ஆகிய இடங்களிலும் அவர் மடங்கள் ஸ்தாபித்து, இன்றளவும் அந்தப் பீடங்களில் ஆசார்யர்கள் இருந்து வருகிறார்கள். ஆகையினால் எந்த ஒரு பிரதேசத்தையும் சேர்ந்ததாக இன்றி, தேசம் பூராவுக்கும் உள்ள ஸகல வேத – சாஸ்த்ரங்களுக்கும் உரிய ஸம்ஸ்க்ருதத்தோடு மாத்திரம் சங்கர மடங்களுக்கு விசேஷ ஸம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் நம்முடைய மடத்துக்குத் தமிழ் ஸம்பந்தமும் இல்லாமல் போய்விடவில்லை. அந்தந்தக் காலத்தில் இருந்து வந்திருக்கிற ஆசார்யர்களிடம் தமிழ்ப் புலவர்கள் தங்கள் புலமையைத் தெரிவித்துக் காட்டி ப்ரஸாதம், ஸம்பாவனை பெற்றுப் போயிருக்கிறார்கள். ஸ்வாமிநாதையரே சொல்லியிருக்கிறார் – அவருடைய இளவயஸிலே, அவருக்குப் பதினெட்டு இருபது வயசு இருக்கிறபோது, அதாவது இந்த 20-ஆம் நூற்றாண்டு பிறப்பதற்கு இருபது இருபத்தைந்து வருஷம் முந்திகூட அவர் நம்முடைய மடத்துக்கு வந்திருக்கிறார். மடத்துப் பண்டிதர்கள் அவருடைய பிரஸங்கங்கலைப் பாராட்டியிருக்கிறார்கள். அப்போது ஆசார்யர்களாக இருந்த இளையாத்தங்குடிப் பெரியவாளிடம் அவர் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்.

தமிழ், ஸம்ஸ்க்ருதம் இரண்டும் பேதப்பட்டு நிற்க ஆரம்பித்தது முக்கியமாக இந்த 20-ஆம் நூற்றாண்டில்தான். இதை எப்படியாவது ஆதியில் இருந்த மாதிரி ஐக்யப்படுத்தி விட வேண்டும்; எல்லோரையும் சந்த்ரமௌளீச்வர் ஸந்நிதானத்தில் அவர் குழந்தைகளாக ஒன்று சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதுதான் எனக்கு எப்போதும் நினைப்பாயிருக்கிறது. அதனால் ஸம்ஸ்க்ருதப் பண்டிதர்களைப் போலவே தமிழ் வித்வான்களையும் ஸ்ரீமடத்தில் ஆதரித்து ஸம்மானிக்க ஆரம்பித்தது. இந்த ரீதியிலேதான் ஸ்வாமிநாதையரையும் மடத்தின் பக்கம் வரப்பண்ணி, தத்-த்வாரா (அதன்மூலம்) தமிழுலகத்துக்கு வைதிகாசாரங்களில் அபிமானம் வளர்வதற்கு ஸஹாயம் செய்ய நினைத்தது.