ஐயர்களில் ஒரு உ வே ஸ்ரீவைஷ்ணவர்களில் பெரியவர்களாக இருக்கப்பட்டவர்களின் பேருக்கு முன்னால் ‘உ வே ’ என்று போடுவார்கள் இது ‘உபய வேதாந்த’ என்ற வார்த்தைக

ஐயர்களில் ஒரு உ.வே

ஸ்ரீவைஷ்ணவர்களில் பெரியவர்களாக இருக்கப்பட்டவர்களின் பேருக்கு முன்னால் ‘உ.வே.’ என்று போடுவார்கள். இது ‘உபய வேதாந்த’ என்ற வார்த்தைகளுக்குச் சுருக்கமாகும். ஸ்ரீராமாநுஜ ஸம்ப்ரதாயத்தில் தமிழுக்கும் ஏற்றம் கொடுத்து, ரிஷிகள் ஸம்ஸ்கிருதத்தில் கொடுத்துள்ள வேதாந்த சாஸ்திரத்தைப் போலவே ஆழ்வார்கள் “வேதம் தமிழ் செய்து” கொடுத்திருக்கும் திவ்ய ப்ரபந்தத்திலும் அந்த ஸம்ப்ரதாயஸ்தர்கள் நல்ல தேர்ச்சி பெற வேண்டுமென்று வைத்திருக்கிறது. ’உபயம்’ என்றால் இரண்டை, இரட்டையைக் குறிப்பது. ரிஷி ப்ரபந்தம், ஆழ்வார் ப்ரபந்தம் என்று இரண்டு பாஷைகளில் உள்ள வேதாந்தத்திலும் நல்ல ஞானம் பெற்றவர்கள் என்ற அர்த்தத்தில் தங்களுடைய பெரியவர்களுக்கு ‘உபய வேதாந்த’ என்று மரியாதையாக அடைமொழி போடுகிறார்கள். அதன் ‘அப்ரிவியேஷன்’ தான் உ.வே.

இம்மாதிரி ஸ்ரீ சங்கர ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஸ்மார்த்தர்-(ஐயர்)-களிலும் உபய வேதாந்தியாக இருக்கிற ஒரே ஒருவர்தான் உ.வே.ஸ்வாமிநாதையர் என்று யாராவது நினைத்தால் அது தப்பு. ஸ்வாமிநாதையருக்கு தமிழ் ஒன்று தான் பேச்சு, மூச்சு, நினைப்பு எல்லாம். ரிஷி ப்ரபந்தத்தில் அவருக்கு ஈடுபாடு இல்லை. தமிழிலும் கூட, அந்த பாஷைக்காகவே, பொதுப்படையான அதன் இலக்கியத்துக்காகவே இதயத்தைக் கொடுத்தவரே தவிர ஆழ்வார் ப்ரபந்தத்தில் தனிப்பட்ட பிடிமானம் கொண்டவரில்லை. பக்தி என்று வரும் போதும் பரம சாம்பவராகவே (சிவ பக்தராகவே) இருந்தார். ஆனபடியால் வைஷ்ணவர்கள் சொல்லும் ’உ.வே.’ பட்டம் இவருக்குக் கிடைப்பதற்கு நியாயமில்லை. பின்னே என்ன ’உ.வே’, என்றால், அவை இவருடைய இனிஷியல்கள்தான். அவர் பிறந்த ஊர் உத்தமதானபுரம். அவருடைய பிதா வேங்கடஸுப்பையர்.