பலவிதக் கூத்துகள் பழந்தமிழ்நாட்டில் நாட்டிய – நாடகாதிகளை சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என்ற இரு பெரும் பிரிவுகளாகவே பிரித்திருந்தார்கள் கொ

பலவிதக் கூத்துகள்

பழந்தமிழ்நாட்டில் நாட்டிய – நாடகாதிகளை சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என்ற இரு பெரும் பிரிவுகளாகவே பிரித்திருந்தார்கள். கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு, விநோத ரஸம் இருக்கும்படியாக உள்ளது விநோதக் கூத்து. பொம்மலாட்டம், கழைக்கூத்து இவையும், குடத்தைத் தலையில் பாலன்ஸ் பண்ணிக்கொண்டே ஆடுகிற குடக்கூத்தும் இந்த வகையைச் சேர்ந்ததே.

இதைவிட ஸீரியஸானது சாந்திக் கூத்து. அதிலே நாலு ஸப்-டிவிஷன்கள்.

முதலாவது சொக்கம். சுத்த ந்ருத்தம் என்பதும் இதுதான். பாட்டுக்கு அபிநயமாக இல்லாமல் தில்லானா, ஜதிஸ்வரம் போல பலவித அடவுகளைப் பிடித்து, மனஸை உயர்த்துகிற விதத்தில் கலா ஸௌந்தர்யத்தோடு கௌரவமாக உடம்பு, கை, கால்களை வளைத்துக் காட்டுவதுதான் சொக்கம். இது பரத சாஸ்திரத்திலுள்ள 108 கரணங்களை ஆதாரமாகக் கொண்டது. பிருஹதீச்வரத்தில் கர்ப்பகிருஹத்தைச் சுற்றி வரும்போது, விமானத்தின் இரண்டாம் தளத்தில், ஸாக்ஷாத் பரமேச்வரனே இந்த 108 கரணங்களை ஆடிக்காட்டுவதாகச் சில்பங்கள் அமைத்திருப்பதைப் பார்க்கலாம்.

இரண்டாவது, மெய்க்கூத்து. இது அகத்துறை, அகமார்க்கம் எனப்பட்ட ச்ருங்கார ரஸத்தை ஒரு தூக்குத்தூக்கி ஜீவாத்ம-பரமாத்ம ஐக்யமான நாயக-நாயிகா பாவத்தில் ஆடுவது. தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், திவ்யப் பிரபந்தம் எல்லாவற்றிலுமே இப்படிப்பட்ட அக மார்க்கப் பாடல்கள் இருக்கின்றன.

மூன்றாவது அவிநயம். அவிநயம் என்றால் இங்கே ‘விநயமில்லாதது’ என்று அர்த்தமில்லை. ‘அபிநயம்’ என்பதே தமிழ் மொழிப் பண்புப்படி அவிநயமாயிருக்கிறது. ச்ருங்காரம் மட்டுமின்றி நவரஸங்களையும் காட்டும் தனிப் பாட்டுக்களுக்கு அபிநயம் செய்து காட்டுவது இதன் கீழ் வரும்.

நாலாவதுதான் நாடகம். அதாவது ஒரு பெரிய கதையை எடுத்துக் கொண்டு அதை ஆடல் பாடல்களாக நடித்துக் காட்டுவது. இந்த நாடகத்திலும் மேலும் இரண்டு உட்பிரிவு உண்டு. ஸம்ஸ்கிருதத்தில் உள்ள கதைகளைத் தழுவி நடிக்கிறவைகளுக்கு ஆரியக் கூத்து என்றும், தமிழ்க் கதைகளைத் தழுவி நடித்துக் காட்டுவதற்குத் தமிழ்க் கூத்து என்றும் பெயரிட்டு, இரண்டாகப் பிரித்தார்கள். “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேயே கண்” என்று வசனமே இருக்கிறபடியால், ஸம்ஸ்கிருத கதா நாடகங்கள் அக்காலத்தில் எவ்வளவு பஹுஜனப் பிராபல்யம் – mass attraction – பெற்றிருந்தன என்று தெரிகிறது. அந்த பாஷை, இந்த பாஷை என்ற பேதம் தெரியாமல் அன்பு மயமாக இருந்த நாள்!

இப்படி வகைப்படுத்தின சாந்திக் கூத்திலே பலவித ரஸ பேதங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் இருந்தாலும், முடிந்த முடிவாக அது மனஸைச் சாந்தப்படுத்தவே செய்யும். அதனால்தான் ’சாந்திக் கூத்து” என்று பேர். இந்த நாளில் excite பண்ணுவதுதான் entertainment என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளிலோ elevate பண்ணுவதுதான்  entertainment என்று தெரிந்து கொண்டு, எத்தனைதான் உணர்ச்சிகளைக் கிளறிவிட்டாலும் முடிவாக ஆதமார்த்தமானதாக்கி, சாந்தத்தில் அடங்கச் செய்தார்கள். நடராஜாவின் ஆட்டமெல்லாம் தக்ஷிணாமூர்த்தியின் சாந்தத்தில் நிறையும்படி பண்ணினார்கள். “சாந்தம் சிவம்” என்றுதானே உபநிஷத்தே அவனைச் சொல்கிறது?

இந்த சாந்திக்கூத்தைச் சேர்ந்த ஆரியக் கூத்தில், ‘சேதம்’ என்பது ஒரு வகை. புராணக் கதைகளை ஸ்வாரஸ்யத்துக்காகக் கொஞ்சம் மாற்றிக் கொள்வது – adapt செய்து கொள்வது – என்று ஒரு வழக்கம் இருக்கிறதல்லவா? மூல ரூபத்தையே சிதைத்து, ஸ்வாரஸ்யம் என்ற பெயரில் விரஸத்தை உண்டு பண்ணாத வரையில் இதை அநுமதிக்கலாம். இப்படிப் பூர்விகத் தமிழர்கள் அநுமதி தந்தார்கள். இருந்தாலும் இந்த adapted versionஐயே ‘அதாரிடி’ உள்ள மூலம் என்று எவனும் நினைத்துவிடக்கூடாது என்று கருதி, ‘இது மூலம் இல்லை; அதன் சேதம் தான்’ என்று புரிய வைக்கிறதற்காக, adapted play க்களுக்குச் ‘சேதம்’ என்றே பேர் வைத்தார்கள். இதுவே ஸம்ஸ்கிருதப் பேர்தான். சேதித்தது, வெட்டி கொட்டி மாற்றினது என்று அர்த்தம். இப்படி ஸம்ஸ்கிருத புராண, காவிய, நாடகாதிகளைச் சேதித்து ஆடினவனுக்குத்தான் சாக்கை என்று பேர். முன்னே, திருவெள்ளறைச் சாக்கை என்பவனை ராஜராஜன் நியமித்ததாகச் சொன்னது ஞாபகமிருக்கிறதோல்லியோ?

‘சேதம்’ என்ற கூத்து வகை ரொம்பவும் ஆதிநாளிலிருந்தே இருந்திருக்கிறது. பரமேச்வரன் திரிபுரதஹனம் பண்ணின ஸம்ஸ்கிருதக் கதையைக் ‘கொட்டிச் சேதம்’ என்ற பெயரில் adapt பண்ணி, பறையூர்க் கூத்தச் சாக்கையன் என்பவன் சேரன் செங்குட்டுவனுக்கு முன்னால் ஆடிக் காட்டினான் என்று சிலப்பதிகாரத்திலேயே வருகிறது.

சாக்கை, சாக்கையன் என்பது ஒருமை. பன்மையில் இந்த ஆட்டக்காரர்களைச் சாக்கையர் என்பார்கள்.

கதகளி போலவே மலையாளத்தில் இப்போதும் பிரஸித்தமாயுள்ள ஒரு நாட்டிய நாடக வகைக்கு சாக்கியார் கூத்து என்றே பெயர் சொல்கிறார்கள். நம்முடைய மடத்து (ஆகம, சில்ப, கிராமியக் கலை) ஸதஸ்களில்கூட சாக்கியர்கள் என்கப்பட்ட கேரள தேசத்து ஆர்டிஸ்ட்கள் வந்து சாக்கியார் கூத்து நடத்தியிருக்கிறார்கள். இது முழுக்க மலையாள பாஷையில் இல்லாமல், ஆரியக் கூத்து வகை என்பதை நிரூபிக்கும் வகையில், முதலில் ஸம்ஸ்கிருத ச்லோகங்களைப் பாடுகிறார்கள். அப்புறம் அதை விளக்கி ஸம்ஸ்கிருதம் கலந்த மலையாள மணிப்ரவாள பாஷையில் கானம் பண்ணிக்கொண்டு டான்ஸ் செய்கிறார்கள்.