சாந்திக் கூத்து; கதகளிக்கு மூலம் கொட்டு-ஆட்டு-பாட்டு மூன்றிலும் வ்யுத்பன்னனாக (விற்பன்னனாக) இருப்பவன் தான் நிருத்தாசார்யன் எனப்படுவான் இப்படி ராஜரா

சாந்திக் கூத்து; கதகளிக்கு மூலம்

கொட்டு-ஆட்டு-பாட்டு மூன்றிலும் வ்யுத்பன்னனாக (விற்பன்னனாக) இருப்பவன் தான் நிருத்தாசார்யன் எனப்படுவான். இப்படி ராஜராஜன் அப்பாயிண்ட் பண்ணின நாலுபேரில் ஒருத்தனுக்குத் திருவள்ளரைச் சாக்கை என்று பேர். இவன் ‘மறைக்காடன்’ – அதாவது வேதாரண்யத்தைச் சேர்ந்தவன். பாக்கி மூன்று பேரில் இருவர் ‘ஒற்றியூரான்’ எனப்படுகிறார்கள். அதாவது, தஞ்சாவூருக்கு இருநூறு மைல் தள்ளி தொண்டை மண்டலத்தில் நம் மெட்ராஸைச் சேர்ந்தாற் போலிருக்கிற திருவொற்றியூர்க்காரர்கள். ’சாக்கை’ என்ற பேரையும், ஒற்றியூர் ஸமாசாரத்தையும் நான் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணமுண்டு.

திருவொற்றியூரில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. அதிலே டான்ஸ் ஆடுகிற புருஷன் ஒருத்தனின் சிற்பம் இருக்கிறது. அவனுடைய ட்ரெஸ்ஸைப் பார்த்தால் ஆச்சரியமாயிருக்கிறது. இந்தக் காலத்தில் மலையாளக் கதகளிக்காரர்கள் தலையில் பெரிசாக ஒரு தினுஸுச் சும்மாடு வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதே மாதிரி இவன் வைத்துக் கொண்டிருக்கிறான். கதகளிக்காரன் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் கத்தி மாதிரியே இவன் கையிலும் இருக்கிறது!

தமிழறிஞர்களிடம் இதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டதில், கதகளிக்கு ஜன்மபூமி தமிழ் தேசந்தான் என்று எனக்குத் தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. பூர்வத்தில் மலையாளம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சேரநாடாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டின் கதகளி பிற்காலத்தில் அங்கே மாத்திரம் தங்கிவிட்டிருக்கிறது. ‘கதகளி’ என்பது ‘கதை-களி’ என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டு. கதை என்றால் கதைதான். ‘களி’ என்பது டான்ஸாகிய கூத்துக்கே தமிழில் வழங்கிய இன்னொரு பெயர். கூத்தனான நடராஜாவின் favourite நைவேத்யத்துக்கு இதனால்தான் களி, திருவாதிரைக் களி என்றே பேர் வைத்துவிட்டாற் போலிருக்கிறது! ஒன்றுக்கொன்று ஸம்பந்தமில்லாத தனிப் பாடல்களுக்கு டான்ஸ் என்றில்லாமல், ஒரே பெரிய கதையை நாட்ய த்வாரா விளக்கி ஆடுகிற dance drama என்பதே ‘கதகளி’ என்பதன் அர்த்தம்.

கதகளிக்காரனின் டர்பன், தோடு, மூஞ்சியில் அவன் அப்பிக்கொள்கிற கலர்ப் பூச்சு, இதுகளோடு அவன் மாதிரியே கத்தியைப் பிடித்துக் கொண்டு ஆடுகிற டான்ஸ் தமிழ் நாட்டில் ஆதியிலேயே இருந்திருக்கிறது. உக்ரகாளியோடு ஈச்வரன் நாட்டியப் போட்டி நடத்தி, ஊர்த்வ தாண்டவம் செய்து அவளை அபஜயப்படுத்தி, அவளுடைய உக்ரத்தை சாந்தமாக்கினதைப் பண்டையத் தமிழ் நூலில் சாந்திக்கூத்து என்று சொல்லியிருக்கிறது. அதுதான் கதகளிக்கு மூலம்.

வாசிகை பூண்டு, மணித்தோடணியணிந்து

பூசிய சுண்ணம் முகத்தெழுதி

தேசுடனே ஏந்து சுடர்வாள் பிடித்திட்(டு)

ஈசனுக்கும் காளிக்கும் சாந்திக் கூத்தாரத்தகும்.

 

’வாசிகை’ என்பது டர்பன்; ‘முகத்துப் பூசிய சுண்ணம்’ என்பது மூஞ்சியில் அப்பிக்கொள்கிற கலர்ப்பூச்சு.

மலையாள நம்பூதிரி வம்சத்தில் அவதரித்த ஸ்ரீ சங்கர பகவத்பாதாளுக்குத் திருவொற்றியூருடன் நெருங்கின ஸம்பந்தமுண்டு. அங்கே திரிபுரஸுந்தரிக்கு யந்திர ஸ்தாபனம் செய்திருக்கிறார். இன்றைக்கும் அம்மன் கோயில் அர்ச்சகர்களாக நம்பூதிரிகளே இருக்கிறார்கள். இப்போது மலையாளத்தில் மட்டும் தங்கிவிட்ட கதகளி ஆயிரம் வர்ஷம் முந்தி ராஜராஜன் நாளில் தமிழ் நாட்டுக்குள்ளேயே மற்ற இடங்களைவிடத் திருவொற்றியூரில் ரொம்பப் பொலிவோடு இருந்திருக்கிறது.

‘சாந்திக் கூத்து’ என்றது காளியைச் சாந்தப் படுத்தினது மட்டுமில்லை; அதைக் கொங்சம் எக்ஸ்ப்ளெயின் செய்கிறேன்.