ராஜராஜனின் பெருமைகளும், தலையான பெருமையும் ராஜராஜனுக்கு எத்தனையோ பெருமை சொல்கிறார்கள் அவனுடைய வீர தீரப் பிரதாபங்களைச் சொல்கிறார்கள் பக்தியைப் பார

ராஜராஜனின் பெருமைகளும், தலையான பெருமையும்

ராஜராஜனுக்கு எத்தனையோ பெருமை சொல்கிறார்கள். அவனுடைய வீர தீரப் பிரதாபங்களைச் சொல்கிறார்கள். பக்தியைப் பாராட்டுகிறார்கள். கோவிலுக்காகவும், மூர்த்திகளுக்காகவும், ஆபரணாதிகளுக்காகவும், நித்ய நைமித்திக வழிபாடுகளுக்காகவும், சிப்பந்திகளுக்காகவும், கலைஞர்களுக்காகவும் அவன் வாரி வாரி விட்ட ஒளதாரியத்தைப் புகழ்கிறார்கள். இத்தனையையும் ஒரு detail விடாமல் கல்வெட்டில் பொறித்து வைத்ததைப் போற்றுகிறார்கள். தான் பரம சாம்பவனாக இருந்தும், பெருமாள் கோவில், புத்த விஹாரம் எல்லாவற்றையும் பேணிய மனோ விசாலத்தை ஸ்தோத்திரிக்கிறார்கள். அட்மினிஸ்ட்ரேஷனிலும் அபாரத் திறமை காட்டி, ராஜ்யத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து முடியாட்சியிலேயே குடியாட்சியாக ஊர்ச் சபைகளுக்கு நிறைய ஸ்வதந்திரம் தந்து, அதன் மெம்பர்களை ஜனநாயகக் குடவோலைத் தேர்வு முறையில் நியமிக்கப் பண்ணினதைக் கொண்டாடுகிறார்கள். நிலங்களையெல்லாம் அளந்து ரிஜிஸ்டர் பண்ணினான்; தெருக்களுக்குப் பேர் கொடுத்து door number போட்டான் என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். அவனுடைய மத உணர்ச்சி, கலா ரசனை, உதார குணம், planning எல்லாவற்றுக்குமே ஒரு ரூபகமாக இந்தப் பெரிய கோவிலை அவன் கட்டினதை அவனுடைய சிகரமான சிறப்பாகப் போற்றுகிறார்கள்.

எல்லாம் பெரிசாகப் பண்ணின அந்தப் பெரியவன் ராஜராஜனிடம் எனக்கு ரொம்பப் பெரிசாகப் படுவது, அவன் ’ஆடவல்லான்’, ‘தக்ஷிண மேரு விடங்கன்’ என்று இரண்டு பேர் வைத்தானே, அது தான்.

ஏனென்றால் இது தமிழையும் ஸம்ஸ்கிருதத்தையும் இருகண்களாக அவன் மதித்துப் போற்றினான் என்பதற்கு அற்புதமான proof ஆகத் தெரிகிறது. நம்முடைய மஹத்தான கலாசாரத்துக்கு மாதா பிதாக்களாக இருக்கிற இந்த இரண்டுக்கும்தானே இப்போது குத்துப் பகை, வெட்டுப் பகை என்று பேதப்படுத்தி வைத்திருக்கிறது? இதைப் பார்த்து மனஸ் தாங்க முடியாமல் வேதனைப்படுகிறபோது, ‘ராஜராஜனுக்குச் சிலை வைக்கிறார்கள்; அவனுடைய ஜன்ம தினமான ஐப்பசி சதயத்தில் ப்ருஹதீச்வரருக்கு மஹாபிஷேகாதிகள் பண்ணுகிறார்கள்’ என்றெல்லாம் கேள்விப்பட்டால், உடனே ஒரு ஆஸ்தை, நம்பிக்கை, உத்ஸாஹம் ஏற்படுகிறது. ராஜராஜனைக் கௌரவிக்கப் புறப்பட்டு விட்டார்களோல்லியோ? ஸரி, அவன் தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டு மரபுகளையும்தானே போற்றி வளர்த்தான்? அதையும் தெரிந்து கொள்வார்கள். ‘நாமும் அப்படியே செய்வதுதான் அவனுக்கு நிஜமான உத்ஸவம். பேத புத்தி போனால்தான் அவனுக்கு விழா எடுக்க நமக்கு உரிமையும் தகுதியும் உண்டு’ என்றும் புரிந்து கொண்டு விடமாட்டார்களா?’ என்று தோன்றுகிறது.

தமிழ் மகன் என்று ராஜராஜனை நன்றாகச் சிறப்பிக்கட்டும். அது வாஸ்தவம்தான். தேவாரத் திருமுறைகளை அவன்தான் கண்டெடுத்தான். அதுமட்டுமில்லாமல் ஈச்வர ஸந்நிதானத்தில் அது பிரதிபூஜா காலத்திலும் ஜீவசக்தியோடு பிரகாசித்து ஒலித்துக்கொண்டு எந்நாளும் லோகத்தில் சிரஞ்ஜீவியாக இருக்கும்படி, ஆலயங்களில் ஓதுவாமூர்த்திகளை நியமனம் பண்ணி, வழிபாட்டிலேயே ஓர் அங்கமாகத் ‘திருப்பதிக விண்ணப்ப’த்தை ஆக்கினான். பெரிய கோவிலில் இப்படி ஐம்பது பேரை நியமித்திருக்கிறான். ஆனபடியால் தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிர் தந்தவன் என்று அவனை விசேஷிக்க ஸகல நியாயமும் உண்டு.

ஆனால் இதைமட்டும் சொன்னால் one-sided தான்; ஒருதலைப்பக்ஷம்தான். ஸம்ஸ்கிருதத்துக்கும், வேத, வைதிக, ஆகம சம்பிரதாயங்களுக்கும் அவன் அளவிலாத மதிப்புணர்ச்சியோடு தொண்டு செய்திருப்பதையும் சேர்த்துச் சொன்னால்தான் அவனுக்குப் பூர்ண நியாயம் பண்ணினவர்களாவோம். ஆலய நிர்மாணம், பூஜை, உத்ஸவம், எல்லாம் சாஸ்திர சம்பிரதாயப்படியேதான் அவன் ஏற்பாடு பண்ணினான். மூலஸ்தானத்துக்கு நர்மதா பாணலிங்கம்தான் சிலாக்யம் என்ற சாஸ்திர விதிக்குக் கட்டுப்பட்டு, ராஜ்ய காரியம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, “அறுபா நான்கு வேளான் செட்டி” என்ற அறுபத்து நாலு பேரோடுகூட அவன் எத்தனையோ நூறு மைல்கள் போய் நர்மதையில் இத்தனாம் பெரிய லிங்கத்தைக் கண்டு, இவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு வந்தான் என்று தெரிகிறது. கோயிலிலே அநேகக் கல்வெட்டுக்களைப் பொறித்தபோது, முதல் கல்வெட்டை,

ஏதத் விச்வநிரூபச்ரேணி மௌலி

என்று ஸம்ஸ்கிருதத்திலேயே ஆரம்பித்திருக்கிறான்.

ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்

என்றும்,

வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய் என்றும் தேவாரத்தில் ஸ்வாமியைச் சொல்லியிருப்பதை அதே ‘ஸ்பிரிட்’டில் எடுத்துக்கொண்டு, ஒரு பக்கம் ஏகப்பட்ட கனபாடிகளும், இன்னொரு பக்கத்தில் ஏகப்பட்ட ஓதுவார்களுமாக வேதமும் தேவாரமும் ஸந்நிதானத்தில் நிவேதனம் பண்ணும்படியாகச் செய்தான்.