தக்ஷிண மேரு விடங்கர்; ஆடவல்லான் ’தக்ஷிண மேரு விடங்கர்’ என்றே இங்கே ஒரு சிவமூர்த்திக்குப் பேர் வைத்திருக்கிறான் ஸோமாஸ்கந்தர்தான் அந்த மூர்த்தம் அரு

தக்ஷிண மேரு விடங்கர்; ஆடவல்லான்

’தக்ஷிண மேரு விடங்கர்’ என்றே இங்கே ஒரு சிவமூர்த்திக்குப் பேர் வைத்திருக்கிறான். ஸோமாஸ்கந்தர்தான் அந்த மூர்த்தம். அருவுருவ லிங்கமான மூலஸ்தான மூர்த்திக்கு உருவ representative ஆக எல்லாக் கோயிலிலும் இருப்பவர் அம்பாளோடும் குமாரஸ்வாமியோடும் உள்ள ஸோமாஸ்கந்தர்தான். இவருக்கு திருவாரூர் முதலான ஏழு ‘விடங்க’ க்ஷேத்ரங்களில் தியாகராஜா என்று பெயர். அங்கே உள்ள தியாகராஜ விக்ரஹங்கள் ‘டங்கம்’ எனும் உளியினால் செதுக்கப்படாமல், தேவ சிற்பி விச்வகர்மாவின் மனஸாலேயே கல்பிக்கப்பட்டதால் ‘விடங்க மூர்த்திகள்’ எனப்படும். இந்த மானஸிக விடங்க ஸ்ருஷ்டிகள் ரொம்பவும் பூர்வகால சமாசாரம். தஞ்சாவூர் கோவில் கட்டினது கி.பி. ஆயிரத்தையொட்டித்தான். அதாவது இது ஆயிர வருஷ சமாசாரம்தான். இங்கே நம் உலகத்தைச் சேர்ந்த ஸ்தபதி உளியை வைத்துக்கொண்டு தான் விக்ரஹம் அடித்தான். பின்னே ஏன் ‘விடங்க’ என்று பேர் வைத்தான் என்றால்:

ஸப்த விடங்கர்கள் இருந்தாலும், ‘விடங்கர்’ என்ற மாத்திரத்தில் திருவாரூர் தியாகராஜாதான் நினைவு வரும். சோழ ராஜாக்களுக்கு ஆதியில் தலைநகராயிருந்தது திருவாரூர்தான். மநு நீதிச் சோழன் தன் பிள்ளையைத் தேர்க்காலில் பலிகொடுக்கப் போனது திருவாரூரில்தான் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனால், ராஜராஜன் தான் புதுசாக, மஹா பெரிசாக ஒரு கோவில் கட்டின போது தன் குல மூதாதைகளையும், குலதெய்வத்தையும் நினைவு கொண்டு, மற்றவர்களும் அவர்களை நினைக்கப் பண்ண வேண்டும் என்றே ‘தக்ஷிண மேரு விடங்கர்’ என்று ஸோமாஸ்கந்தருக்குப் பேர் வைத்தான்.

சிவாலயங்களில் இரண்டு ராஜாக்கள் முக்கியம். ஒன்று நடராஜர், மற்றது தியாகராஜா என்கிற ஸோமாஸ்கந்தர். தன் பேரிலேயே இரண்டு ராஜாக்களைக் கொண்டிருந்த ராஜராஜனுக்கு ‘இந்த’ இரண்டு ராஜாக்களிடமும் தனியான ஈடுபாடு! அதனால் ராஜராஜேச்வரத்தில் அந்த இருவருக்கும் தனியாக ஒவ்வொரு பேர் கொடுத்துச் சிறப்பு செய்தான். தக்ஷிண மேரு என்று எந்த பிரம்மாண்ட விமானத்துக்குப் பேர் வைத்தானோ அதன் சொந்தக்காரரே இந்த ஸோமாஸ்கந்தர்தான் என்று த்வனிக்கும்படியாக அவருக்கு ‘தக்ஷிண மேரு விடங்கர்’ என்று பெயரிட்டான். நடராஜாவுக்கு, தனக்கு ரொம்பப் பிடித்ததான, நாவுக்கரசர் நாவில் வந்ததான ‘ஆடவல்லான்’ என்ற பெயரை வைத்தான்.