பெருமை இறைவனுக்கே தேவாரம் என்ற சொற்கோவிலைக் காப்பாற்றிக் கொடுத்தவன், தஞ்சாவூரில், இன்றும் லோகம் பிரமித்துக் கொண்டாடும்படியான கற்கோயிலையும் கட்டின

பெருமை இறைவனுக்கே

தேவாரம் என்ற சொற்கோவிலைக் காப்பாற்றிக் கொடுத்தவன், தஞ்சாவூரில், இன்றும் லோகம் பிரமித்துக் கொண்டாடும்படியான கற்கோயிலையும் கட்டினான். தான் பெற்ற வெற்றிகளுக்கு நன்றிக் காணிக்கையாகக் கட்டினான்.

வடக்கே இப்போது ஒரிஸ்ஸா என்கிறோமே அந்தக் கலிங்கம்வரை படையெடுத்துப் போய், கோதாவரி-கிருஷ்ணா நதிகளுக்கு மத்தியிலே கீழைச் சளுக்கியர்கள் ஆண்டு கொண்டிருந்த வேங்கிநாடு, தெற்கே ஈழம் என்னும் இலங்கை, இப்போது Laccadives – லக்ஷத் தீவு – என்கிற அராபியன் ஸீ ஐலண்ட்ஸ் எல்லாவற்றையும் ஜயித்துத்தான் ராஜராஜன் என்று காரணப் பெயர் வாங்கினான். அவனுடைய சொந்தப் பெயர் அருண்மொழி வர்மன் என்பது. பெயருக்கேற்ப தேவாரமாகிய அருள்மொழிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறான்! சேக்கிழாருக்கும் அருண்மொழித்தேவர் என்றே இயற்பெயர். அவர் அருள்மொழியான “பெரிய புராண”த்தைச் செய்திருக்கிறார்.

ராஜராஜனாக ஆனவுடன் நமக்கானால் தற்பெருமையும் தலைக்கனமும்தான் ஏற்படும். ஆயுஸ் பரியந்தம் தனக்கும், அப்புறம் பின் ஸந்ததிக்கும் ராஜ்யாதிகாரம் என்றில்லாமல், ஒரு அஞ்சு வருஷம் மினிஸ்டர் என்று ஆகிவிட்டாலே, தனக்காக வெற்றி விழா, பாராட்டு விழா, கிரீடச் சூட்டு, கேடயச் சூட்டு எல்லாம் பண்ணிக் கொள்கிறோம். அவனோ ராஜராஜனானவுடன் தன் போராற்றல், வெற்றி, வீரதீரம் அத்தனையும் ஈச்வரப் பிரஸாதம்தான் என்பதாக, தான் அடங்கி, ஈச்வரனையே பெரியவனாக, அம்பாளையே பெரியவளாக வைத்து மஹா பெரிய கோவிலைக் கட்டினான். பெருமை எல்லாம் பகவானைச் சேர்ந்ததுதான் என்று உணர்த்தும்படியாக அந்தக் கோயிலில் எல்லாம் பெரிசாக, பெயர்களிலும் ‘பெரிய’ ஸம்பந்தம் இருக்கும்படியாகச் செய்தான். ஸ்வாமி பெயரே ப்ருஹத்-ஈச்வரர், பெருவுடையார்; அம்பாள் ப்ருஹந்நாயகி-பெரிய நாயகி. ‘கோயில் பெயரே ப்ருஹத்-ஈச்வரம்-பெரிய கோயில். Big Temple of Tanjore, Great Pagoda at Tanjore என்று அதற்கு லோகம் பூரா கியாதி இருக்கிறது. ‘ராஜராஜேச்சுரம்’ – ‘ராஜராஜேச்வரம்’ – என்பது கல்வெட்டில் இருக்கிற பேர். ராஜராஜேச்வரி என்பது அம்பாளுக்குப் பிரஸித்த நாமா. இங்கே ஈச்வரனுக்கும் ராஜராஜனை முன்னிட்டு ‘ராஜராஜேச்வரம்’ என்று வாஸஸ்தானம் ஏற்பட்டிருக்கிறது.

எல்லாம் பெரிசு அங்கே. நந்திகேச்வரர் the Big Bull of Tanjore என்று அந்நிய தேசங்களிலும் புகழ் எடுத்திருக்கிறார். பிராகாரச் சுற்றிலே இருக்கிற ஒவ்வொரு கோஷ்ட தேவதையும் எட்டடி, பத்தடி உயரம். அளவிலே மட்டுமில்லாமல், அழகிலே, அருளிலே எல்லாமே பெரிய மூர்த்திகள். எண்ணூறடி நீளம், நானூறடி அகலத்துக்கு விஸ்தாரமாகக் கோவில் கட்டினான். மஹாலிங்கம், மஹாதேவன் என்று பெயருள்ள பெருவுடையாருக்கு பிரம்மாண்டமான லிங்கத் திருமேனி வைத்தான். அவர் தலைக்கு மேலே உள்ள விமானத்தை இருநூறு அடிக்கு மேலே உயரமாகக் கட்டி அதற்கு ‘தக்ஷிண மேரு’ என்று பெயர் வைத்தான். வடக்கே உள்ள மேருவுக்கு – மேரு என்றால் இங்கே கைலாஸம் என்றே அர்த்தம் பண்ணிக் கொள்ளணும், அதற்கு – ஸமானமாகத் தென் தேசத்தில் உள்ளது என்று பொருள்.