மதாசாரியர்களும் நாடகங்களும் சாந்த ரஸத்தையே பிரதானமாக வைத்து எழுதின நாடகங்கள் ரொம்பவும் அபூர்வம்தான் மற்ற ரஸங்கள் முக்கியமாக வரும்போது, சாந்தம் அ

மதாசாரியர்களும் நாடகங்களும்

சாந்த ரஸத்தையே பிரதானமாக வைத்து எழுதின நாடகங்கள் ரொம்பவும் அபூர்வம்தான். மற்ற ரஸங்கள் முக்கியமாக வரும்போது, சாந்தம் அவற்றை அநுசரித்து வருகிற விதத்திலேயே பிரசித்தமான கவிகளும் நாடகம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணமிச்ரர் என்பவர் மட்டும் சாந்தத்தையே பிரதான ரஸமாக வைத்து ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். கோணா மாணா என்று உணர்ச்சிகளைக் கிளறிவிடுகிற நாடகங்களே – நாடக ஸ்தானத்தில் வந்துள்ள ஸினிமாக்களே – ஜாஸ்தியாகிவிட்ட இன்று, அந்தச் சாந்த ரஸ நாடகத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்.

கிருஷ்ண மிச்ரர், ‘கீதகோவிந்தம்’ பாடிய ஜயதேவரின் சம காலத்தவர் என்கிறார்கள். சுமார் தொள்ளாயிரம் வருஷங்களுக்கு முன் இருந்தவர். அவர் பரம அத்வைதி. அவர் ஸித்தாந்தச் சண்டைக்காக நாடகம் எழுதவில்லை. தம் ஸ்வாநுபூதியையே உருவகமாக, allegorical ஆக, ஒரு நாடகமாக்கி எழுதினார். ஞான மார்க்கத்தினால் பெறுகிற அத்வைத சாந்த நிலையைப் பற்றி எழுதினார். ஆனால் கட்சி, பிரதி கட்சி இல்லாமலே எழுதினார். பலவிதமான தத்துவங்களும் அதில் பாத்திரங்களாக வருகின்றன. விவேகன் (அதாவது, ஞானத்தைத் தேடுகிற ஸாதகன்) தான் கதாநாயகனான ராஜா, அவனுக்கு எதிரி மஹாமோஹன் (அதாவது மாயை). விவேகனுக்குப் பலவிதமான நல்ல குணங்களும் மந்திரிகளாக, சைன்யங்களாக இருக்கின்றன. விஷ்ணு பக்தி, சிரத்தை, கருணை, தர்மம், வைராக்கியம் எல்லாம் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள். அஞ்ஞானம், பாபம், அஸத்தியம் முதலிய கெட்ட குண பட்டாளங்கள் மஹாமோஹனின் பரிவாரமாக வருகின்றன. விவேகன் மஹாமோஹனை ஜயித்து ஞானத்தை அடைந்ததாகக் கதை போகிறது. ஞான உதயம்தான் நாடகத்தின் லட்சியம். ‘பிரபோத சந்திரோதயம்’ என்பதே இந்த நாடகத்தின் பெயர். பிரபோதம் என்றாலும் ஞானம் என்றாலும் ஒன்றே தான்.

ஞானம் சூரிய ஜோதிஸ் மாதிரி இருக்கிறது என்று இத்தனை நாழி நான் சொன்னேன். ஆனால் கிருஷ்ண மிச்ரர், அதிலே கொஞ்சம் கூடத் தாபம் இல்லாமல் இருப்பதால் ஞானத்தைச் சந்திரனாகவே குளிர்ச்சியாகச் சொல்கிறார். பூரண சந்திரன் உதித்தவுடன் சமுத்திரம் பொங்குவது போல் பூரண ஞானம் உதித்து, சாந்த நிலவைப் பொழிகிற போது இருதயத்தில் ஆனந்த சமுத்திரம் பொங்குவதால் அவர் வைத்த பெயர் ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது. இந்த நாடகத்தின் ஆரம்பமே நம்மை ரொம்ப உச்சிக்குத் தூக்கிக்கொண்டு போகிறது.

அந்தர் நாடீ நியமித மருத் லங்கித ப்ரம்ம ரந்த்ரம்” என்ற தக்ஷிணாமூர்த்தி தியான சுலோகத்துடன் நாடகத்தை ஆரம்பிக்கிறார். டிராமா என்றால் ஒரே வசனம், ஆக்‌ஷந்தான். இங்கோ மங்கள சுலோகத்தில் வாயையே திறக்காமல், ஒரு காரியமும் இல்லாமல், தானாக இருக்கிற தக்ஷிணாமூர்த்தியை வர்ணிக்கிறார். “பிராணனை சுஷும்னா நாடி வழியாக சிரஸின் உச்சிக்குக் கொண்டு போனால் அங்கே கிடைக்கக்கூடிய ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியத்தைக் காட்டுபவர்; வெளியிலே பத்தினி தெரியாவிட்டாலும், உள்ளுக்குள்ளே சாந்தி என்பவளைப் பத்தினியாக உடையவர்; சாந்தியிடம் விளைந்த ஆனந்தத்தில் திளைத்தவர்; ஆத்ம ஜோதி வடிவானவர்; அந்த ஜோதிக்கு வெளி அடையாளமாகவே நெற்றியில் நெருப்புக் கண்ணை வைத்திருப்பவர்’ என்றெல்லாம் மிக அழகான வாக்கில் வர்ணிக்கிறார். இங்கே ஜோதி, அக்னி நேத்திரம் இவற்றைச் சொன்னாலும், ஜில்லென்று ‘சந்திரோதயம்’ என்றே நாடகத்துக்குத் தலைப்புக் கொடுத்துவிட்டார்.

இன்னொரு விசேஷம், இங்கே ஸாக்ஷாத் பரமேசுவரனை குரு ஸ்வரூபமாக வர்ணித்தாலும் நாடகத்தில் வருகிற பாத்திரங்களில் விஷ்ணு பக்தி என்று ஒரு ஸத்பாத்திரத்தைக் கொண்டு வந்து, விஷ்ணு பக்தியே ஞானத்தில் சேர்ப்பதாகக் காட்டுகிறார். சைவ, வைஷ்ணவ பேதமோ, வேறு எந்தவித சர்ச்சையோ இல்லாமல், திறந்த மனசோடு தாம் அநுபவித்ததை எழுதிவிட்டார்.

பிற்காலத்தில் வேதாந்த தேசிகர் வந்தார். “நிகமாந்த மஹாதேசிகன்”, “ஸர்வதந்திர ஸ்வதந்திரர்” என்றெல்லாம் வைஷ்ணவர்கள் கோயிலுக்குக் கோயில் சந்நிதி ஏற்படுத்தி நமஸ்கரிக்கிற பெரியவர் அவர். மஹா வித்வான், நிரம்ப யோக்கியதை வாய்ந்தவர். அவருடைய விசிஷ்டாத்வைத கொள்கைக்கு ‘பிரபோத சந்திரோதயம்’ வித்தியாசமாக இருந்தது. எனவே, இந்த நாடகத்தை ஆக்ஷேபித்து, இதே ‘டெக்னி’க்கில் அவரும் ஒரு நாடகம் எழுதினார். இதிலும் தத்துவங்கள்தான் பாத்திரங்கள். ‘பிரபோத சந்திரோதய’ பாத்திரங்கள் சிலர் இதிலும் வருவார்கள். ஸாதகனுக்கு இடைஞ்சல் செய்யும் தற்புகழ்ச்சிக் குணத்தை ‘டம்பன்’ என்ற பாத்திரமாக கிருஷ்ணமிச்ரர் சிருஷ்டித்தார். தேசிகனும் அந்த டம்பனைத் தம் நாடகத்துக்கு எடுத்துக் கொண்டார். இதிலே, இந்தக் காலத்தில் சிலர் தற்போதுள்ள நிலவரங்களையே நாடகத்தில் கேலி – Satire – செய்து எழுதுகிறார்கள் அல்லவா, அது மாதிரி தேசிகனும் செய்திருக்கிறார்! டம்பனை, “நீ எந்த ஊர்?” என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு டம்பன், “என் ஊர் சின்ன காஞ்சீபுரம். நான் அங்கே அக்கிரகாரத்தில் இருக்கிறேன்” என்று ஆரம்பித்துத் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறான். அந்தக் காலத்தவருக்கு உடனே இந்த satire புரிந்திருக்கும். சின்னக் காஞ்சீபுரம் அக்கிரகாரத்தில் அப்போது வசித்து வந்த தாத்தாச்சாரியாருக்கும் வேதாந்த தேசிகருக்கும் ஸௌஜன்யம் இல்லை. அவரைத்தான் இங்கே இவர் வறட்டு ஜம்பக்காரனான டம்பனாக வர்ணிப்பது. ஆக, இப்போது நாம் செய்கிற சாமர்த்தியம் எல்லாம் அப்போதே நம் பெரியவர்களுக்குத் தெரியாமல் போகவில்லை.

தேசிகனுடைய டிராமாவுக்கு ‘சங்கல்ப சூரியோதயம்’ என்று பேர். சூரியன் உதித்தவுடன் சந்திரன் இருந்த இடம் தெரியாமல் மழுங்கிவிடும் அல்லவா? அது போல் மிச்ரரின் ‘சந்திரோதய’த்தை இது ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என்பதால் இப்படிப் பேர் வைத்தார்.

கிருஷ்ணமிச்ரர் ஒரு சண்டைக்கும் போகவில்லை. குளிர்ச்சியாகப் பேர் வைத்தார். தேசிகன் வாதப் போர் செய்வது என்று ஆரம்பித்தவுடன் சூடு பிடித்துவிட்டது. ‘சூரியோதயம்’ என்று பேர் உண்டாயிற்று.
பிற்பாடு வந்த மத்வாசாரியார், அத்வைதம் விசிஷ்டாத்வைதம் இரண்டையும் ஆக்ஷேபித்தவர். ஆனபடியால் அவர் ‘சந்திரோதயம்’, ‘சூரியோதயம்’ இரண்டையும் கண்டித்து ஒரு கிரந்தம் எழுதினார். சந்திரன், சூரியன் இருவரையும் விழுங்குபவன் ராகு அல்லவா? எனவே தம் நூலுக்கு ‘உபயக்ராஸ ராஹுதயம் (ராஹு உதயம்)“ என்று பெயர் வைத்தார். உபய – இரண்டையும் (சந்திர சூர்யர் இருவரையும்); க்ராஸ – பிடிக்கிற, பீடிக்கிற ‘ராஹுதயம்’ – ராகுவின் உதயம் என்று அந்தத் தலைப்புக்கு அர்த்தம். ராகு என்பது நிழல், இருள். ‘சாயா கிரகம்’ என்றே பேர். முதலில் குளிர்ச்சியும் ஒளியும் சேர்ந்த சந்திரன். பிறகு குளிர்ச்சியில்லாவிட்டாலும் பிரகாசமாவது இருக்கிற சூரியன் என்று போய்க் கடைசியில் ஒளியும் இல்லாத ராஹு பாம்புடன் முடிகிறது! கண்டனமே லட்சியம் என்றால் இப்படியாகிறது!

அது ஒரு பக்கம் இருக்கட்டும். பெரிய தத்துவங்களைச் சொல்வதற்கு, மதாசாரியர்கள்கூட நாடகம் எழுதினார்கள் என்றால், அந்தக் கலைக்குப் பூர்வத்தில் எத்தனை உயர்ந்த ஸ்தானம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. இதுமட்டுமில்லை. குமாரில பட்டர் போன்ற மகா பெரிய தத்வ சாஸ்த்ரஜ்ஞர்கள் தங்கள் சித்தாந்தத்துக்குப் பிரமாணம் காட்டும்போது, வேத வாக்கியம், தர்மசாஸ்திர வாக்கியம் இவற்றோடு, ‘சாகுந்தலம்’ போன்ற நாடக வசனத்தையும் மேற்கோள் காட்டி, ‘எங்கள் அபிப்பிராயத்துக்கு இது ஓர் ஆதாரம்’ என்கிறார்கள். மனச்சாட்சிக்கும் ஓரளவு சத்தியப் பிரமாணம் உண்டு என்பதற்குக் குமாரிலபட்டரும் வேதாந்த தேசிகரும் காளிதாஸனை மேற்கோள் காட்டுகிறார்கள்.