பசுவதைத் தடைச் சட்டம் மக்கள், அரசாங்கம் ஆகிய இருவரும் பேணிக் காக்க வேண்டிய கோஸம்ரக்ஷண தர்மத்தில் மக்கள் செய்வதற்கு பெரிய பக்க பலமாக அரசாங்கம

பசுவதைத் தடைச் சட்டம்

மக்கள், அரசாங்கம் ஆகிய இருவரும் பேணிக் காக்க வேண்டிய கோஸம்ரக்ஷண தர்மத்தில் மக்கள் செய்வதற்கு பெரிய பக்க பலமாக அரசாங்கம் முக்யமாகச் செய்ய வேண்டியது கோவதையைத் தடுத்துச் சட்டம் செய்வதாகும். அரசாங்கம் சட்டம் செய்வதற்கும் மக்களின் அயராத தூண்டுதல்தான் வழிவகுக்கும். சட்டத்தின் பலவந்தத்துக்கு பயந்துதான் கோவதை நிற்க வேண்டும் என்றில்லாமல் அதற்கு இந்த தேசத்திலுள்ள ஸகல இனமக்களும் மனமொப்பி ஆதரவு தருமாறு வெகுவாகப் பிரசாரம் செய்யவேண்டும். மாற்று அபிப்ராயமுள்ளவர்களிடமும் கோபப்படாமல் சாந்தமாகவும் அன்புடனும் விடாமல் எடுத்துச் சொல்லவேண்டும்.

முகலாய அரசர்களான அக்பரும் ஷாஜஹானும், மிக ஸமீப காலத்திலேயே ஆஃப்கானிஸ்தானின் அமீரும் பசு ஸம்ரக்ஷணையின் அவசியத்தை உணர்ந்து அதற்கான சட்டங்களைச் செய்திருக்கிறார்களென்பது குறிப்பிடத் தக்கது.

ஆகவே நாம் உரிய முறைப்படி எடுத்துச் சொன்னால் இந்த தேசத்தின் ஸகல பிரிவுகளையும் சேர்ந்த பிரஜைகள் எல்லோருமே நமக்கு ஆதரவு தருவார்கள் என்பதே என் நம்பிக்கை. அரசாங்கமும் எந்த ஒரு பிரிவினருக்கும் விரோதமாகச் சட்டம் செய்வதற்கில்லை என்ற காரணத்துக்காக இந்த உத்தமமான கார்யத்தைப் பண்ணாமலிருக்கும் நிலை மாறிச் சட்ட பூர்வமான ரக்ஷணை கிடைக்கும்.

அவசியமான சிலவற்றை அழிக்காமல் காப்பளிப்பதற்குச் சட்டம் செய்தால்தான் முடிகிறது என்பதால் அரசாங்கம் அப்படியே செய்கிறது. க்ரூரமான வனவிலங்குகள் கூட அழிந்து போய்விடக்கூடாது என்று சட்டபூர்வமாகக் காப்புத் தரப்பட்டிருக்கிறது. சந்தன மரத்துக்கு அப்படிக் காப்பு இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் தெரியாத ஒன்று சொல்கிறேன்; இலுப்பை மரம் அப்படிப்பட்ட உயர்ந்த வஸ்துவா என்று தோன்றக்கூடும். ஆனால் வங்கம், பிஹார் எல்லையிலுள்ள ஸாந்தால் பர்கணாவைச் சேர்ந்த ஆதிவாஸிகளுக்கு இலுப்பை மரம்தான் முக்யமான உணவை அளித்து வந்தது. அதனால் அதை இஷ்டப்படி வெட்டிச் சாய்க்கக்கூடாது என்று சட்டமே இருந்தது.

எனவே லௌகிக த்ருஷ்டி, வைதிக த்ருஷ்டி என்று எப்படிப் பார்த்தாலும் மிகவும் உயர்வு பொருந்திய கோவை வதைக்கக்கூடாது என்று சட்டம் செய்வதற்கு மிகவும் நியாயமுள்ளது. அது மிகவும் அவசியமானது. இனவேறுபாடு இல்லாமல் எல்லாப் பெருமக்களும் அப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு ஆதரவு திரட்டித்தந்து அரசாங்கத்தைச் செயற்பட வைக்க வேண்டும்.
தொன்று தொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள புனிதமான எண்ணங்களும் தத்வங்களும் நம்முடைய கலாசாரத்துக்கென்றே ஏற்பட்ட பல சீரிய அம்சங்களை உருவாக்கியிருப்பதால் வேறெதற்கும் இல்லாத தனியானதொரு ஸ்தானத்தைப் பசுவுக்குத் தந்து அது என்றென்றும் போஷாக்குடன் இருக்கச் செய்ய வேண்டும். கோ ஸம்ரக்ஷணம் பரம தர்மம்; பரம புண்யம்.

பசுவின் க்ஷேமம் நாட்டுக்கே க்ஷேமம் தரும். அதை ஸம்ரக்ஷித்தால் தன்னால் லோகத்தில் பாபம் குறையும்; சாந்தி பெருகும். அதற்கு ஹிம்ஸை நடந்தால் லோகம் முழுதற்குமே கஷ்டந்தான் உண்டாகும். லோகம் தர்மத்தில் நிலை நிற்பதற்கு கோ ஸம்ரக்ஷணம் அவசியம். சாஸ்த்ர வசனப்படி தர்ம தேவதையே தபஸ், சௌசம் (தூய்மை), தயை, ஸத்தியம் என்ற நாலு கால்களுடைய ஒரு ரிஷபமாகத்தான் இருக்கிறது. அந்த தர்மக் காளையுடனேயே கோமாதாவும் இருப்பதாகவும், தர்மத்தையே பாலாகச் சுரக்கிற ‘தர்மதுகா’வாக அப்பசுத் தாய் இருப்பதாகவும், அந்த ஜோடியைக் கலி புருஷன் ஹிம்ஸித்ததாலேயே இந்த யுகம் இப்படிச் சீர்குலைந்திருக்கிறதென்றும் ‘பாகவ’தத்தில் இருக்கிறது.* ஆகையினால் கலிதோஷம் நீங்கி தர்மம் தலையெடுப்பதற்குச் செய்ய வேண்டியவற்றில் கோ ரக்ஷணம் முக்யமான ஒன்றாகும். அதிலே நாம் தவறினோம் என்ற பெரிய களங்கம் ஏற்படாமல் நமக்கு கோபாலக்ருஷ்ண ஸ்வாமி அநுக்ரஹிக்க வேண்டும்.

மஹாபாரதத்தில் அநுசாஸனிக பர்வத்தில் பீஷ்மர் ஸகல தர்மங்களையும் தர்ம புத்ரருக்கு உபதேசிக்கும்போது கோஸம்ரக்ஷணத்தையும் சொல்லி கோ மஹிமையை எடுத்துக் கூறுகிறார். நஹுஷ மஹாராஜனுக்கு ச்யவனர் என்ற மஹரிஷியை விலை கொடுத்து வாங்கும்படியாக ஒரு ஸந்தர்பம், நிர்பந்தம் ஏற்படுகிறது. (மூவுலகும் அடங்கும்) தன் த்ரைலோக்ய ராஜ்யம் முழுதையும் விலை கொடுத்தாலும் அந்த உத்தம ரிஷிக்கு ஈடாகாதே! எதைத் தருவது? என்று புரியாமல் அவன் தவிக்கிறான். அப்போது பசுவின் வயிற்றில் பிறந்த ஒரு ரிஷி அவனிடம் வந்து ஒரு பசுவை அவருக்கு விலையாகத் தந்தால் போதுமானது என்கிறார். அவர் சொன்னதை ச்யவனரும் மனஸார ஒப்புக் கொண்டு, ‘கோவுக்கு ஈடான எந்த இன்னொரு செல்வமும் நான் காணவில்லை – கோபிஸ்துல்யம் ந பச்யாமி தநம் கிஞ்சித்’ என்று சொல்கிறார். அப்படியே நஹுஷ மஹாராஜாவும் கோவைக் கொடுத்து அவரை வாங்கி அப்புறம் அவரை ஸ்வதந்திரமாக விட்டுவிடுகிறான்.
கோதானத்துக்கு மிஞ்சி ஒரு புண்யமுமில்லை. பாப பரிஹாரத்துக்கு அதுவே பெரிய மருந்து. தானம் வாங்குபவர் அதை நன்றாக ஸம்ரக்ஷித்து வைத்துக் கொள்ளக் கூடியவர்தான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டே கோதானம் செய்ய வேண்டும்.
ச்யவன மஹர்ஷி கோ மஹிமையைச் சொல்லும் ச்லோகங்களில் ஒன்று:
நிவிஷ்டம் கோகுலம் யத்ர ச்வாஸம் முஞ்சதி நிர்பயம் |
விராஜயதி தம் தேசம் பாபம் சாஸ்யாபகர்ஷதி ||

என்ன அர்த்தமென்றால்: “எந்த தேசத்தில் பசுக்கள் தங்களுக்கு ஹிம்ஸை நேருமோ என்று பயப்படாமல் கோகுலங்களில் நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றனவோ அந்த தேசமே எல்லாப் பாபங்களும் விலகப் பெற்று ப்ரகாசமாக விளங்கும்.”

நம்முடைய பாரத தேசம் அப்படி ஆவதற்கு, அதை அந்த மாதிரி ஆக்குகிற மனப்பான்மையையும் செயற்பான்மையையும் நாம் பெறுவதற்கு கோவைக் கண்ணாகப் பேணிய கண்ணன் அருள் புரிவானாக!

*1.17