காபியில் பாலை வீண் செய்ய வேண்டாம் கோவிடமிருந்து நாம் பயன் பெறும் விஷயமாகவும் ஒன்று சொல்ல வேண்டும் உண்மையான பயன், அது தரும் த்ரவியங்களை வைதிக யஜ்ஞங்

காபியில் பாலை வீண் செய்ய வேண்டாம்

கோவிடமிருந்து நாம் பயன் பெறும் விஷயமாகவும் ஒன்று சொல்ல வேண்டும். உண்மையான பயன், அது தரும் த்ரவியங்களை வைதிக யஜ்ஞங்களிலும் தெய்வகார்யங்களிலும் உபயோகப்படுத்திக் கொள்வதும், அதன் பால், தயிர் முதலானவற்றை நாம் சாப்பிட்டு ஆரோக்ய விருத்தி பெறுவதுந்தான். ஆனால் துர்பாக்யவசமாக நடப்பது என்னவென்றால் ஆரோக்யத்துக்கு ஹானியான காபிக்குத் தான் இப்போது பாலில் பெரும்பகுதி போகிறது. அம்ருத துல்யமான பாலை உடம்பு, மனஸ் இரண்டையும் கெடுக்கும் விஷ வகையான கஃபைன் சேர்ந்த டிகாக்ஷனோடு சேர்த்து வீணடிக்கிறோம். பசு ரக்ஷணம் போலவே ஆத்ம ரக்ஷணத்திலும் ஜனங்கள் கவனம் செலுத்தி, காபி குடிக்கிற கெட்ட பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

பலமுறை காபி குடிப்பதற்குப் பதில் அந்தப் பாலில் ஒரு பாகம் கோயில் அபிஷேகத்துக்கும், ஒரு பாகம் ஏழை நோயாளிகளுக்கும் ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கும் போகுமாறு செய்யவேண்டும். பால் ருசியே காணாமல் நோஞ்சான்களாக லக்ஷக்கணக்கான ஏழைக் குழந்தைகள் இருக்கும்போது, நினைத்தபோதெல்லாம் பல பேர் காபி ருசி பார்ப்பது ஸமூஹத்துக்குச் செய்கிற த்ரோஹமாகும்.

காபிக்குப் பதில் காலை வேளையில் மோர்க்கஞ்சி சாப்பிடலாம். ‘தக்ரம் அம்ருதம்’ என்று சொல்லியிருக்கிறது. ‘தக்ரம்’ என்றால் மோர்தான். ஒரு பங்கு பாலிலிருந்து அதைப் போல் இரண்டு மூன்று பங்கு மோர் பெறலாமாதலால் இது சிக்கனத்துக்கும் உதவுவதாக இருக்கிறது. சில பேருடைய தேஹவாகுக்குப் பால் ஒத்துக்கொள்ளாது; பேதியாகும். அப்படிப்பட்டவர்களுக்கும் ஏற்றதாக கோமாதா அந்தப் பாலிலிருந்தே இந்த மோரை அருள்கிறாள். கொழுப்புச் சத்து சேரக்கூடாத ரோகங்களுக்கு ஆளாகிறவர்களும் வெண்ணெய் கடைந்து எடுத்து விட்ட மோர் சேர்த்துக் கொள்ளலாம்.