பேணுவது புண்யம்; புறக்கணிப்பது பாபம் பசுவைப் பேணிக் காப்பது ஸர்வ பலன்களையும் அளிக்கும் பரம புண்யம் இதைச் சொல்லும் கையோடேயே அதைப் புறக்கணிப்பது சா

பேணுவது புண்யம்; புறக்கணிப்பது பாபம்

பசுவைப் பேணிக் காப்பது ஸர்வ பலன்களையும் அளிக்கும் பரம புண்யம். இதைச் சொல்லும் கையோடேயே அதைப் புறக்கணிப்பது சாபங்களை வாங்கித் தரும் மஹா பாபம் என்பதற்கும் ஆதாரமிருப்பதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. ஸுர்ய வம்சத்திலே வந்த மஹாத்மாவான ராஜா திலீபன் வாழ்க்கையில் இரண்டுக்கும் சான்று இருக்கிறது. அவர் தேவலோகம் சென்றிருந்தபோது காமதேனுவை ப்ரதக்ஷிணம் செய்யாமல் வந்து விடுகிறார். அந்தத் தப்புக்காக அவருக்கு ஸந்ததி வாய்க்காது என்று சாபம் ஏற்படுகிறது. சாப நிவ்ருத்தி என்றும் ஒன்று உண்டே! அது என்ன? அந்தக் காமதேனுவின் கன்றான நந்தினி, ஸுர்ய வம்சத்தின் குலகுரு வஸிஷ்டரிடம் இருக்கிறது. வஸிஷ்டர் சொன்னதின் பேரில் அதற்கு ஒரு மாட்டுக்காரன் செய்வதைவிட பக்தியுடன் திலீபன் மேய்த்து கட்டி, குளிப்பாட்டிவிட்டு, இன்னும் எல்லாக் கைங்கர்யமும் செய்கிறார். பத்னி ஸுதக்ஷிணையுடன் சேர்ந்து அப்படிப் பண்ணுகிறார். சாபம் நிவ்ருத்தி ஆகிறது. சாபம் நிவ்ருத்தியாகி ஏதோ ஒரு சாமானியப் பிள்ளை பிறந்தது என்றில்லாமல் ஸுர்யவம்சத்துக்கு ரகு வம்சம் என்றே இன்னொரு பெயர் ஏற்படும்படியான பெருமைகள் நிறைந்த ரகு திலீபனுக்குப் புத்ரனாகப் பிறந்தவன் தான். அப்புறம் பகவானே ரகுராமனாக அவதாரம் செய்யவும் அதுவே அடிப்படை.