பசு சேவையில் மக்கள் ஒரு குடும்பமாகச் சேர்வது இது எத்தனை அவச்யம் என்று, awareness create செய்வது என்கிறார்களே, அப்படி வலுவான ப்ரசாரத்தால் ஜன ஸமூஹத்தில் ஒரு விழ

பசு சேவையில் மக்கள் ஒரு குடும்பமாகச் சேர்வது

இது எத்தனை அவச்யம் என்று, awareness create செய்வது என்கிறார்களே, அப்படி வலுவான ப்ரசாரத்தால் ஜன ஸமூஹத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால் போதும், இத்தகைய பெரிய ஜனத்தொகையுள்ள நம் தேசத்தில் தேவையான பணமும் திரளும், தொண்டர்களும் திரளுவார்கள் என்றே நம்புகிறேன். அங்கங்கே நாலு பேர் விடா முயற்சியுடன் புறப்பட்டுவிட்டால் போதும். பொருள் பலம், ஆள் பலம் இரண்டும் கிடைத்துவிடும். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், பணம் கொடுக்கிறவர் வேறே, சரீரத்தொண்டு செய்கிறவர் வேறே என்று அடியோடு இரண்டாகப் பிரிந்து நிற்கக்கூடாது. பணம் கொடுக்கிறவரும் கொஞ்சமாவது உடம்பால் உழைக்க வேண்டும், உடம்பால் உழைக்கிறவரும் கொஞ்சமாவது பொருளுதவி பண்ணவேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் total involvement – பூர்ணமான ஈடுபாடு – இருக்கும். அதோடு ஸமூஹத்திலும் மக்கள் பணம் படைத்தவர், உழைப்பாளி என்று இரண்டு ஜாதிகளாகப் பிரிந்து நிற்காமல், எல்லோரும் ஒரேபோல் கோமாதாவின் குழந்தைகளாக, ஒரே குடும்பமாக, ஐக்யப்படுவார்கள்.

என் ஆசை என்னவென்றால், ஹிந்துக்களான நாமெல்லோரும் இப்படி ஒரு குடும்பமாக கோசேவையில் சேர்வதோடு, மற்றவர்களுக்கும் நல்லபடியாக ப்ரேமையுடன் எடுத்துச் சொல்லிப் பிற மதஸ்தர்களையும் இதில் ஈடுபடுத்தி நம்முடைய ஒட்டுமொத்த ஜன ஸமூஹம் முழுதுமே ஏக குடும்பமாக ஒற்றுமையோடு இப்பணியில் ஈடுபடவேண்டும் என்பதே. மதாபிமானம் என்பது ஒவ்வொரு மதஸ்தருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாமானாலும், ஜீவகாருண்யம் என்பது ஸகலருக்கும் பொதுவானதாகையால் அந்த அம்சத்தைக் கொண்டு இந்தப் பணியில் இந்த நாட்டிலுள்ள அத்தனை மதஸ்தர்களும் ஒன்று சேர்ந்து தோள் கொடுக்கவேண்டும் என்பதே என் அவா.