ஸர்வ தேவதா ஸ்வரூபம் என்றால் நம்முடைய சிற்றறிவால் இன்னதென்றே கிரஹித்துக் கொள்ள முடியாமல் அல்லவா இருக்கிறது? ஒரே மலைப்பாக – பயம் கலந்த மலைப்பாக – இருக்கிறதே தவிர அன்போடு பக்தி பண்ணும்படியாக இல்லையே! அதனால் கோமாதாவைக் குறிப்பாக லக்ஷ்மி என்ற ஒரு தேவதையின் ஸ்வரூபமாகச் சொல்வது. அமர(கோச)ம் என்கிற ஸம்ஸ்க்ருத நிகண்டுவில் (அகராதியில்) லக்ஷ்மியின் பல பெயர்களைச் சொல்லும்போது ‘லோகமாதா’, ‘லோகஜனனி’ என்னும் இரண்டு பெயர்கள் சொல்லியிருக்கிறது. கோமாதா அந்த லோகமாதாவே.
கோமாதாவை லக்ஷ்மி என்கிறது ஒரு பக்கம். அவளை லக்ஷ்மியின் வாஸ ஸ்தானமாகச் சொல்வது இன்னொரு பக்கம். லக்ஷ்மிக்கு வாஸ ஸ்தானங்கள் ஐந்து. ஸுமங்கலியின் ஸீமந்தம் என்கிற வகிடு, மலர்ந்த தாமரைப் பூவின் உள்பக்கம், யானையின் மஸ்தகம் (தலை), வில்வ பத்ரத்தின் பின் பக்க ரேகை ஆகிய நாலோடு பசுவின் பின்புறமும் ஐந்தாவதாக மஹாலக்ஷ்மியின் நிவாஸமாக இருக்கிறது. கோவிடத்தில் எதிரிடைகள் சேர்கிறதில் கோமய, கோமூத்ரங்களும் பவித்ரமாக இருப்பதாகப் பார்த்தோமல்லவா? அப்படியேதான் அதன் முக மண்டலமாக இல்லாமல் ப்ருஷ்டபாகமாக இருக்கப்பட்ட பின்புறமும் பரம பவித்ரமான லக்ஷ்மீவாஸமாக இருக்கிறது. அழகுக்காக கோவின் முகத்தில் சந்தன குங்குமங்கள் இட்டுக் கழுத்தில் மாலை போட்டாலும், கோபூஜை என்று பண்ணும்போது பின்புறத்தை அலங்கரித்து அங்கேயே அர்ச்சனாதிகள் செய்யவேண்டும். ஒரு கோவினிடம் நிக்ருஷ்டமானது (தாழ்ந்தது) என்று எதுவுமேயில்லை. அதனிடம் ஸர்வமும், ஸர்வாங்கமும் உத்க்ருஷ்டமே (உயர்ந்தனவே). நம் மடம் மாதிரி தர்மபீடங்களில் ப்ரதிதினமும் காலம் கார்த்தாலே நடக்கிற முதல் வழிபாடு கோபூஜைதான் என்பதிலிருந்து கோவுக்குள்ள உத்க்ருஷ்டமான ஸ்தானத்தைப் புரிந்து கொள்ளலாம். பசுவைவிட யானை எவ்வளவோ பெரியதாக இருந்தாலும் கோபூஜைக்கு அப்புறந்தான் கஜபூஜை.