திருநீறு அபிஷேகப்ரியனான, பரமேச்வரன் விபூதி ப்ரியனும் ஆவான் ‘காடுடைய சுடலைப் பொடி பூசி’ என்று தேவாரத்தின் முதல் பாட்டிலேயே ஞான ஸம்பந்தக் கு

திருநீறு

அபிஷேகப்ரியனான, பரமேச்வரன் விபூதி ப்ரியனும் ஆவான். ‘காடுடைய சுடலைப் பொடி பூசி’ என்று தேவாரத்தின் முதல் பாட்டிலேயே ஞான ஸம்பந்தக் குழந்தை சொல்லியிருக்கிற மாதிரி, ஸ்வாமி இட்டுக் கொள்வது ச்மசான (மயான)த்தில் சவங்களை எரித்துப் பெறுகிற பஸ்மாவே. ஆனாலும் நாம் விபூதி தயாரித்து அவனுக்கும் இட்டுவிட்டு, அபிஷேகங்கூடப் பண்ணி, நமக்கும் இட்டுக் கொள்கிறோமே, அது எங்கேயிருந்து வருகிறது? கோமய உருண்டைகளைப் புடம் போட்டுத்தான் விபூதி பண்ணுவது. விபூதியைவிடப் பவித்ரமாக ஒன்று கிடையாது. ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளின் ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்றுப் பதிகத்தைப் பார்த்தால் போதும், அந்தத் திருநீற்றுக்கு என்னவெல்லாம் மஹிமை இருக்கிறதென்று தெரியும். ‘பஸ்மஜாபாலோபநிஷத்’ என்றே இருக்கிற உபநிஷத்தில் பரமேச்வரனே கோமயத்திலிருந்து எப்படி விபூதி செய்வது என்று விளக்கமாகச் சொல்லி, அது ஸர்வ பாபங்களையும் போக்கி மோக்‌ஷம் தருவது என்று சொல்வதாக இருக்கிறது. கோவின் மலத்துக்கே அப்படிப்பட்ட நிர்மல சக்தி இருக்கிறது. வெளி மலம், கச்மலம் – ‘கசுமாலம்’ என்று நாட்டு ஜனங்களும் சொல்வதைப் போக்குவதோடு அணு, கர்ம, மாயா மலங்களையும் சேதிப்பதாக கோமயத்திலிருந்து பெறுகிற விபூதி இருக்கிறது. யஜ்ஞத்தில் நீற்று விழுகிற ஹோம பஸ்மாவை வைஷ்ணவர்களும் மந்த்ர பூர்வமாக தரித்துக் கொள்வார்கள்; அதில் ஸமித்துச் சாம்பலோடு கோமயத்தாலான வரட்டியின் சாம்பலும் கலந்திருக்கும்.
சுத்தம் செய்து கொள்வதற்கு இரண்டு வழி; ஒன்று ஸ்நானம் பண்ணுவது, இன்னொன்று விபூதி அணிந்து கொள்வது. ஸ்நானம் செய்வதை ‘நீராடுதல்’ என்றும் விபூதி தாரணத்தை ‘நீறாடுதல்’ என்றும் சொல்லுவார்கள். ஸ்வாமிக்கு நீறாட்டலையே நீராட்டலாகி விபூதி அபிஷேகமும் செய்கிறோம். அது அடிப்படையில் கோமயாபிஷேகந்தான்.