நெய்யபிஷேகம் ஐந்தில் நமக்குத் தெரிந்தது பாலபிஷேகம் மட்டுமே அடுத்தபடியாகத் தயிரபிஷேகம் நெய்யபிஷேகம் நாம் அதிகம் கேள்விப்பட்டதில்லை மலையாளம் த

நெய்யபிஷேகம்

ஐந்தில் நமக்குத் தெரிந்தது பாலபிஷேகம் மட்டுமே. அடுத்தபடியாகத் தயிரபிஷேகம். நெய்யபிஷேகம் நாம் அதிகம் கேள்விப்பட்டதில்லை. மலையாளம் திருச்சூரில் நெய்யபிஷேகம்தான். ஹிமயமலை பனிப் பாளம் மாதிரி அங்கே லிங்கத்துக்கு நிறைய நெய்யபிஷேகம் செய்திருக்கும். எத்தனை காலம் ஆனாலும் அந்த நெய் கெடுவதில்லை என்பதோடு எத்தனைக்கெத்தனை பழசோ அத்தனைக்கு அந்த நெய் ஒளஷதமாக இருக்கிறது. மலையாள வைத்யர்கள் ‘புராதன க்ருதம்’ என்று அந்தப் பழைய நெய்யையே மருந்தாகக் கொடுப்பது வழக்கம்.

மலையாள தேசம் வரையில் போகவேண்டாம். நம் திருவையாற்றுக்குப் பக்கத்தில் இருக்கிற தில்லை ஸ்தானத்திலும் ஸ்வாமி பெயர் ‘நெய்யாடியப்பர்’ என்றே இருப்பதிலிருந்து அங்கும் ஸ்வாமி நெய்யால் அபிஷேகம் பெற்றவர் என்றே தெரிகிறது. அந்த ஸ்தலத்தின் பெயரே ‘திருநெய் ஸ்நானம்’ என்றுதான் ஆதியில் இருந்து அது தமிழ்வழக்குப் படி அப்பர், ஸம்பந்தர் தேவாரங்களில் ‘திருநெய்த்தானம்’ என்று வந்து, ‘திருநெய்த்தானம்’ என்பதுதான் பொது ஜனங்கள் பேச்சில் ‘தில்லைஸ்தானம்’ என்று ஏதோ சிதம்பர ஸம்பந்தம் உள்ள மாதிரி ஆகியிருக்கிறது!

பால், தயிர், நெய் தவிரப் பஞ்ச கவ்யத்திலுள்ள கோ மூத்ரத்தாலோ, கோமயத்தாலோ தனித்தனியே அபிஷேகம் செய்கிற வழக்கம் இல்லை. ஆனால் ஐந்தையும் கலந்த பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம். அப்படி ஈச்வரார்ப்பணமாவதுதான் பசுக் குலத்துக்கே பெருமை சேர்ப்பது என்று அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கிறார்:
ஆவினுக்(கு) அருங்கலம் அரன் அஞ்சாடுதல்*
’ஆ’ என்றால் பசு. ‘அஞ்சாடுதல்’ என்பது பஞ்சகவ்யத்தில் நீராடுவது; அதாவது பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் பெறுவது.
*சொற்றுணை வேதியன் எனத் தொடங்கும் ‘நமசிவாயப் பதிகம்’.