பசுவை வதைப்பது தாயைக் கொல்வது போன்றது இங்கே முக்யமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்: இப்படிச் சொன்னது தானாகவே இயற்கை மரணம் அடைந்த கோவைக் குறித்ததுதா

பசுவை வதைப்பது தாயைக் கொல்வது போன்றது


இங்கே முக்யமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்: இப்படிச் சொன்னது தானாகவே இயற்கை மரணம் அடைந்த கோவைக் குறித்ததுதான். கோஹத்தி – பசு வதை – என்பது ஸ்வப்னத்திலும் நினைக்கக்கூடாத மஹா பாபம்; படு பாதகம் என்பது. வதை வரையில் போக வேண்டாம்; அதற்கு ஒரு சின்ன ஹிம்ஸை விளைவித்தால்கூடப் பாபமாகும். கோவை மாதா என்றே அல்லவா பார்த்தோம்? அதனால் கோஹத்தி என்பது ப்ராயச்சித்தமேயில்லாத மாத்ருஹத்திக்கு ஸமானமான மஹா பெரிய தோஷமாகும். அதை முக்யமாக எடுத்துச் சொல்வதற்காகத்தான் கோவைப் பற்றிப் பேச ஆரம்பித்ததே.
கறக்கிற மட்டும் ஒட்டக் கறந்து குடித்துவிட்டு, அல்லது அந்தப் பாலை விற்றுப் பணம் பண்ணிவிட்டு, கறவை நின்று போன பிறகு கோவுக்குத் தீனி போட்டு ரக்ஷித்து என்ன ப்ரயோஜனம் என்கிற எண்ணத்தில் அதை இறைச்சிக் கூடத்துக்கும் கசாப்புக் கடைக்கும் அனுப்புவதென்பது நம்மைப் பெற்ற தாயார் வயஸாகி வேலை செய்ய முடியாமல் ஆனவுடன் அவளைக் கொலை செய்தால் எப்படியோ அப்படித்தான். கோ மாம்ஸம் தாய் மாம்ஸத்துக்கு ஸமானமே.

தானாக மரித்த கோவின் சர்மத்தைத்தான் ஸங்கீத வாத்யங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் ஸங்கீதம் தெய்வ பரமானதாக இருக்கிறதனால், ஸ்வாமி கோவிலிலேயே வாத்யங்கள் வாசிக்க வேண்டித்தானே இருக்கிறது? ஆனால் அதற்காக உயிருள்ள கோவை உபயோகமில்லை என்பதற்காக வதைத்துத் தோலை உரிப்பது என்றால் அதை ஸ்வாமி க்ஷமிக்கவே மாட்டார்.
அதேபோலத்தான் கோவின் வயிற்றுக்குள்ளிருந்து எடுக்கும் கோரோசனையும் ஸ்வாமிக்கே கந்த உபசாரத்தில் சேர்க்கக்கூடிய வாசனை த்ரவ்யமாக அது இருப்பது வாஸ்தவம். அதோடு மருந்துச் சரக்காகவும் இருக்கிறது. அப்படியிருந்தாலும், அதற்காக கோவை வதைப்பது நியாயமாகாது; கொஞ்சங்கூட நியாயமே ஆகாது. இயற்கை மரணம் என்று ஒன்று எந்த ஜீவனுக்கும் உண்டல்லவா? அப்படி மரித்த கோவிலிருந்து சர்மமோ, கோரோசனையோ பெறவேண்டும்.