பஞ்ச கவ்யம்   லௌகிகமாக வெளி அசுத்தியைப் போக்குவதை விட முக்யம், வைதிகமாக அது உள் அசுத்தியையும் போக்குவதே மற்ற ஜந்துக்கள் விஷயத்தில் மூக்கைப் பிடி

பஞ்ச கவ்யம்

  லௌகிகமாக வெளி அசுத்தியைப் போக்குவதை விட முக்யம், வைதிகமாக அது உள் அசுத்தியையும் போக்குவதே. மற்ற ஜந்துக்கள் விஷயத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு அலம்பித் தள்ள வேண்டியதாக இருக்கிற மலத்தையே அது கோவிடமிருந்து கோமயமாக வருகிறபோது நம்முடைய உள்ளழுக்கைப் போக்கிக் கொள்வதற்காக நாம் உட்கொள்ளும் பஞ்ச கவ்யத்தில் ஒரு வஸ்துவாகச் சேர்க்கும்படி சாஸ்திரத்தில் விதித்திருக்கிறது.
‘பஞ்சகவ்யம்’ என்றால் என்ன? ‘கவ்யம்’ (gavyam) என்றால் கோ ஸம்பந்தப்பட்டது. அப்படிப்பட்ட ஐந்து சேர்ந்ததே பஞ்சகவ்யம். அதில் மூன்று – பாலும், பாலிலிருந்து பெறுகிற தயிரும், நெய்யுமாகும். பாக்கி இரண்டு? இங்கேதான் எதிரிடையானவையும் வருகின்றன. கோமயமும், கோமூத்திரமும்தான் அந்தப் பாக்கி இரண்டு. பால், தயிர், நெய், கோமூத்திரம், கோமயம் என்ற ஐந்தையும் கலந்து செய்வது பஞ்ச கவ்யம். க்ஷீரம், ததி, ததா சாஜ்யம், மூத்ரம், கோமயம் ஏவ ச என்று சொல்லியிருக்கிறது. ஒருவருக்கு ஏற்பட்ட விழுப்பு, தீட்டுகளைப் போக்குகிற புண்யாஹவாசன கர்மாவில் ‘பஞ்சகவ்ய ப்ராசனம்’ என்பதாக இந்த ஐந்தையும் சேர்த்த ஒன்றைக் கொடுப்பார்கள். அதை உட்கொள்ள வேண்டும்.
வெளியிலே விழுப்பு போய் மடியாவது என்ற சுத்திகரணம் பஞ்சகவ்யத்தினால் நடக்கிறது என்றாலும் அதுவே அதன் முக்ய ப்ரயோஜனம் இல்லை. அதனுடைய முக்ய ப்ரயோஜனம் இதைவிடப் பெரிய சுத்திகரணமாக, நமக்கு உள்ளழுக்கை உண்டாக்கிய பூர்வ கர்ம பாபத்தையே போக்குவதுதான்.
ஸாதாரண விஷயமில்லை. நம்முடைய கஷ்டங்கள், ஜன்மாக்கள் எல்லாவற்றுக்கும் காரணம் பாபகர்மாக்கள் தான். அவையே நசிப்பது என்றால் எவ்வளவு பெரிய விஷயம்? அதற்குப் பசு தருகிற ஐந்து வஸ்துக்கள் உதவுகின்றன என்றால் பசுவைப் போன்ற பரம உபகாரி நமக்கு எவருண்டு?
சரீர சுத்தியோடேயே, சித்தத்துக்குப் பரம அசுத்தியை உண்டாக்கும். பாபமாகிற அசுத்தத்தையும் நிவர்த்தித்துக் கொள்ளப் பஞ்ச கவ்யம் உதவுகிறது. சித்தத்துக்கு ஏற்பட்ட பாப அசுத்தியே சரீரத்தில் தோலிலிருந்து ஆரம்பித்து எலும்புக் குருத்து வரையில் பலவித வியாதிகளாகப் பரவுகிறது. இந்த வெளி வியாதி உள் வியாதி இரண்டையும் சுட்டெரிக்கவே பஞ்சகவ்ய ப்ராசனம். ‘ஒரு கட்டையை அக்னி பஸ்மம் பண்ணுகிறாற்போல நான் உட்கொள்ளும் இந்தப் பஞ்சகவ்யம் சர்மத்திலிருந்து (தோலிலிருந்து) அஸ்தி (எலும்பு) வரை என் தேஹத்தில் ஊடுருவியுள்ள பாபத்தை பஸ்மம் பண்ணட்டும்’ என்றே பஞ்சகவ்ய ப்ராசனத்தின் (உட்கொள்தலின்) போது சொல்லும்படி சாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது:
யத் த்வக்-அஸ்தி கதம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே |
ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹத்வாக்நிவேந்தனம் ||
தஹது அக்நி: இவ இந்தனம்’ என்பதே ஸந்தியில் ‘தஹத்வாக்நிரிவேந்தனம்’ என்று ஆகியிருக்கிறது. ‘இந்தனம்’ என்றால் ‘விறகு’. விறகை நெருப்பு எரிக்கிற மாதிரிப் பாபத்தைப் பஞ்ச கவ்யம் எரித்துவிடட்டும் என்று அர்த்தம்.
கோவிலிருந்து கிடைக்கும் பாலிலிருந்து சாணி வரையில் எல்லாமும் நம் வியாதிகளைப் போக்கிப் புஷ்டியும் தருகின்றன; பாபத்தைப் போக்கி ஆத்மாவைக் கடைத்தேற்றவும் செய்கின்றன.
பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய இந்த எல்லாவற்றுக்கும் இருக்கிற நாலு சிறப்புக்கள்; ஒன்று, அவை வாய்க்கு ருசியாக இருக்கின்றன; இரண்டு, உடம்புக்குப் புஷ்டி அளிக்கின்றன; மூன்று, ஆஹாரமாக இருப்பதோடு மருந்தாகவும் இருக்கின்றன; நாலு, வைதிக ப்ரயோஜனம் உடையவையாக இருந்துகொண்டு பாபத்தைப் போக்கி ஆத்மாவை ரக்ஷித்துக் கொடுக்கின்றன.