கோவின் மலமும் பரிசுத்தம்! எதிரிடையாகத் தோன்றுகிறவையும் பசுவிடத்தில் ஒன்று சேர்கின்றன ரக்த ஸமானமான அதன் க்ஷீரம் புத்தியைக் கெடுப்பதற்குப் பதில்

கோவின் மலமும் பரிசுத்தம்!

எதிரிடையாகத் தோன்றுகிறவையும் பசுவிடத்தில் ஒன்று சேர்கின்றன. ரக்த ஸமானமான அதன் க்ஷீரம் புத்தியைக் கெடுப்பதற்குப் பதில் சுத்தப்படுத்துவதைச் சொன்னேன்; உடம்புக்கு சக்தியைக் கொடுப்பதே உள்ளத்துக்கும் சுத்தி தருவதைச் சொன்னேன். இதைவிடவும் எதிரிடையான இன்னொன்று, அதனுடைய கழிவுப் பொருளான கோமயம் என்கிற சாணமும் பரிசுத்தப்படுத்துவதுதான். அது உடம்பு, உள்ளம் இரண்டையும் சுத்தி செய்வதாக இருக்கிறது. கழிவுப் பொருளான மலம்தான் பொதுவில் மிகவும் அசுத்தமானதாக இருப்பது; நோய் நொடிகளைப் பரப்புவது; பரம துர்கந்தமாகவும் இருப்பது. அதை உடனேயே தேய்த்து அலம்பி சுத்தம் செய்வோம். ஆனால் கோவின் மலமோ மற்ற மலங்களையும், ஏனைய அசுத்தங்களையும் போக்குவதாக இருக்கிறது; நோய்க்கிருமிகளை அழிப்பதாக இருக்கிறது. அது துர்கந்தமும் வீசுவதில்லை. அதற்குப் பவித்ரமான, ஆரோக்யமான ஒரு தினுஸு மணம் இருக்கிறது.

மற்ற பிராணிகளின் மலம் புனிதத்தன்மையைக் கெடுத்து அசுத்தி செய்வதாயிருக்க, கோமயம் மட்டும் அசுத்தியை நீக்கிப் புனிதம் செய்வதாக இருக்கிறது. சாப்பிட்ட உச்சிஷ்டம் – எச்சில் என்பது – ஸுகாதாரப்படியும் அசுத்தம்; சாஸ்த்ரப்படியும் மடித்தப்பானது. அதன் அசுசியைப் போக்கிப் புனிதப் படுத்துவது கோமயம். அதனால்தான் எச்சிலிடுவதற்கு கோமயத்தை உபயோகிப்பது. பரம சுத்தத்தை க்ருஹத்துக்கு வரவழைப்பதற்காகவே, ஆரோக்யலக்ஷ்மியையும் ஸௌமங்கல்ய லக்ஷ்மியையும் நம் க்ருஹத்தில் குடிகொள்ளப் பண்ணுவதற்காக வாசலில் கோலம் போடும் இடத்தில் சாணம் தெளிப்பதும், வீட்டைச் சாணியால் மெழுகுவதும். இப்போது பாஷனின் பெயரில் இந்தப் பழக்கங்கள் எல்லாம் போய், எங்கே பார்த்தாலும் infection, pollution என்று ஆகியிருக்கிறது.
கோமயம் எவ்வளவு புனிதமாக நினைக்கப்படுகிறது என்பதற்கு அநேகச் சான்றுகள் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஸந்நியாசிக்கு அக்னி ஸம்பந்தம் கூடாது என்ற விதியை ரொம்பவும் கண்டிப்பாகப் பின்பற்றுகிற ஸாதுக்கள் உண்டு. அவர்கள் அக்னி மூட்டிச் சமைத்த ஆஹாரம் எதையும் புஜிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் விறகு, கரி மூட்டாமல் முழுக்கவும் பசுஞ்சாணி விரட்டியிலேயே அக்னி மூட்டி அதிலே சமைத்ததென்றால் அப்போது தோஷமில்லை என்று அதை புஜிக்கிற வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். பசுவுக்கு இருக்கப்பட்ட புனிதத்தன்மையால்தான் இப்படி அதன் மலத்துக்குங்கூடப் பெருமை இருக்கிறது.