விச்வப்ரேமைக்கு இருப்பிடம் ஸந்நியாஸியுடைய ஆஹாரத்தில் இரண்டு அம்சங்கள் ஒன்று, அது அவனுக்கு ஸத்வ குணத்தை வளர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது இன்னொ

விச்வப்ரேமைக்கு இருப்பிடம்

ஸந்நியாஸியுடைய ஆஹாரத்தில் இரண்டு அம்சங்கள். ஒன்று, அது அவனுக்கு ஸத்வ குணத்தை வளர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது. இன்னொன்று, அந்த ஆஹார வஸ்து ஏதொரு பிற ஜீவனுக்கும் ஹிம்ஸை விளைவிக்காமல் பெறப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது. கோக்ஷீரத்தில் இந்த இரண்டும் பூர்த்தி செய்யப்படுகின்றன. அது ஸத்வத்தைப் புகட்டுவதாக உள்ளது. அதை கோவிடமிருந்து க்ரஹிப்பதில் அந்த கோவுக்கு ஹிம்ஸையும் இல்லை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே அது விச்வப்ரேமைக்கு ஒரு இருப்பிடமாக உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் mammal – கள் எனப்படுகிற பாலூட்டி ஜீவ ஜந்துக்களில் கோவுக்கு மட்டுமே தன்னுடைய கன்றுக்குத் தேவைப்படுகிற அளவுக்கு மாத்திரமின்றி, அந்த அளவுக்கு உபரியாக மற்ற மநுஷ்யர்களுக்கும் கொடுப்பதற்கு வசதியாக நிறையப் பால் சுரக்கிறது. ஒரு பசு கொடுக்கக்கூடிய அவ்வளவு பாலையும் அதன் கன்றே குடித்தால் அந்தக் கன்றுக்கு வயிறு முட்டி வாந்தி செய்ய ஆரம்பித்து விடும். இதிலிருந்து தெரிவது என்ன? நேராகத் தான் ஈன்ற கன்று என்ற ஒன்றை முன்னிட்டே கோ சுரப்பு விட்டாலும் அது நம்மைப் போன்ற மற்ற மநுஷ்யர்களுக்கும் இயற்கையாகவே தாயாயிருந்து போஷாக்குப் பண்ண வேண்டும் என்பதே பகவத் ஸங்கல்பம் என்றுதானே தெரிகிறது? அந்த மாத்ரு ப்ரேமையே கோவுக்கு வேறெந்த ப்ராணிக்குமில்லாத உன்னத ஸ்தானத்தைக் கொடுத்திருக்கிறது. அதை தெய்வமாகவே கருதும் உன்னதம்.

பசு தெய்வந்தான். ம்ருக ஜாதியாகத் தெரிந்தாலும் மாநுஷமான தாய் போல் பாலைக் கொடுக்கிற கோமாதாவாக இருக்கிற அவள் தெய்வமான ஸ்ரீமாதாவின் ஸ்வரூபமேதான். இஷ்டப்பட்டதையெல்லாம் அளிக்கிற அப்படிப்பட்ட தெய்வத் தாயாக அவள் இருக்கிறபோதே காமதேனுவாக விளங்குகிறாள். பசு பால் கொடுக்கும். இந்தக் காமதேனுப் பசுவோ பாற்கடலிலிருந்து உத்பவித்தவள். ஸ்ரீமாதாவேதான் அப்படி கோமாதாவாக வந்தாள். இதையேதான் ‘பஞ்சசதீ’யில் மூக கவி பிரார்த்திக்கிறார்; காமாக்ஷியம்பாளிடம், ‘ எங்களுக்குக் காமதேநுவாக நீ இருப்பாய்!” என்று பிரார்த்திக்கிறார். 
காமதுகா பவ கமலே காமகலே காமகோடி காமாக்ஷி*

* ‘மூக பஞ்சசதீ’, ஆர்யா சதகம், ச்லோ.49