நல்லதை விருத்தி செய்து கெட்டதைக் குறை

நல்லதை விருத்தி செய்து கெட்டதைக் குறைக்க வேண்டும்

லோகம் என்று இருந்தால் அதில் எல்லாமே நல்லதாக இல்லாமல் கெட்டதும் இருக்கத்தான் செய்யும். ஸ்ருஷ்டி தோன்றிய நாளாக இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. முடிவிலே இந்த லோக வாழ்க்கையே – அதிலே நல்ல வாழ்க்கை என்று சொல்கிறதும் உள்படத்தான் – நிஜமில்லை; லோகாதீதமான, மாயாதீதமான ஒன்றுதான் நிஜம்; இதிலிருந்து அதற்குப் போய்ச் சேருவதுதான் நமது முடிவான லக்ஷ்யமாக இருக்க வேண்டும்’ என்று நமக்குக் காட்டுவதற்காகவே ஸ்வாமி இந்த லோகத்தில் கெட்டதுகளையும் வைத்திருக்கிறார் போலிருக்கிறது. 

நாம் வாழுகிற இந்த பூலோகத்துக்கு ’மிச்ரலோகம்’ என்று பெயர். அப்படியென்றால் ‘கலப்பு உலகம்’. என்ன கலப்பு என்றால் நல்லதும் கெட்டதும் கலந்து இருப்பது தான். தேவலோகத்தில் எல்லாம் நல்லதே. அஸுர லோகத்தில் எல்லாம் கெட்டதே. மநுஷ்யர்களான நம்முடைய இந்த லோகத்திலோ இரண்டும் கலந்து மிச்ரமாயிருக்கும். அப்படித்தான் ஈச்வர நியதி. ஆனாலும் இதில் நல்லதைவிடக் கெட்டது ரொம்ப ஜாஸ்தியாகி விட்டால் நாம் அந்தக் கெடுதலிலேயே அழுந்தி அழுக்காகி இங்கேயிருந்து போய்ச் சேரவேண்டிய லக்ஷ்யமான நிஜத்தை அடைய முடியாமலே போய்விடும். அப்படி ஆகுமாறு விடப்படாது. பூர்வ யுகங்களிலுங்கூட நல்லதோடு கெட்டதும் இருந்தாலும் க்ருத, த்ரேதா, த்வாபர யுகங்களில் முறையே, நல்லதே ரொம்ப ஜாஸ்தி, ‘ரொம்ப’ என்று சொல்ல முடியாவிட்டாலும் ஜாஸ்தி, ஜாஸ்தி என்று சொல்ல முடியாவிட்டாலும் ஸமம் என்று மூன்று விதமாக இருந்திருக்கிறது. கலியில் நிலைமை மாறி, கெட்டது ஜாஸ்தியாயிருக்கும் என்றும் சாஸ்த்ரங்கள் சொல்கின்றன. அப்படிச் சொன்னதால் இங்கே முழுக்கக் கெடுதலே வியாபித்து, நல்லது எடுபட்டே போய்விடும் என்று அர்த்தமில்லை. ஏனென்றால் அப்போது ‘கலப்பு லோகம்’ என்ற இதன் பேரே பொய்யாகி இது அஸுர லோகமாக அல்லவா ஆகிவிடும்? அதோடுகூட, கலியின் கொடுமைக்கும் அதே சாஸ்திரங்களில் பரிஹாரம் – நிவாரணம் சொல்லியிருப்பதால், இங்கே இந்த யுகத்திலும் நல்லதற்குப் பாதியளவு இடமில்லாவிட்டாலும், நாற்பது சதவீதமாவது இடமுண்டு என்று காட்டுவதாகவே ஏற்படுகிறது. தற்காலத்தில் ஆகியிருப்பதுபோல் அந்த அளவுக்கும் கீழே நல்லது போய்விடுவதற்கு நாம் இடம் தரப்படாது. லோகம் பூராவும் இப்போது காணப்படுகிற மாதிரி கெட்டதிலேயே மேலும் மேலும் போய் விழுந்து மீட்சியே இல்லாமலாகிவிடக்கூடாது. அதற்கு நல்லதை விருத்தி செய்து, கெட்டதைக் குறைக்க வேண்டும். முழுக்கக் குறைத்து ஸைஃபர் பன்ணிவிட முடியாதுதான். ஆனாலும் நல்லதை அது அமுக்கிப் போட்டுவிட்டுத் தானே தலையோங்கி நிற்க முடியாத அளவுக்குள்ளாவது அதைக் குறைக்கத்தான் வேண்டும்.

ஜெனரலாக உள்ள இந்த விஷயத்தையே வாலிப லோகத்துக்குப் பொருத்தித்தான் ஏதோ மனசில் தோன்றியதைச் சொன்னேன். பூராவும் அப்படியே சீர்திருந்திவிடுமென்று எதிர்பார்த்து, சீர் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேனென்று அர்த்தமில்லை. கெட்டதற்கே அடியோடு விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே முடிந்த மட்டும் திருந்துவதற்காக, திருத்துவதற்காக எனக்குத் தெரிந்த மட்டும் ஏதோ சொன்னேன்.

ஸாரத்தில் நம்முடைய இளம் தலைமுறையினர் உசந்த சரக்கு என்பதே என் அபிப்ராயம். நல்ல லோஹத்தில் (உலோகத்தில்) தடிமனாகக் களிம்பு ஏறினாற் போல இப்போது வேண்டாத அம்சங்கள் அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதை நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்து அவர்களைப் பளிச்சென்று ப்ரகாசிக்கப் பண்ண வேண்டும். இந்தக் காரியத்தைப் பெரியவர்களும் பண்ண வேண்டும்; அதோடு விட்டுவிடாமல் அவர்கள் தாங்களாகவேயும் பண்ணிக் கொள்ள வேண்டும். நல்லதற்கும் இந்த லோகத்தில் இந்தக் காலத்திலும் நிச்சயமாக இடம் உண்டு; கெட்டதன் ஆதிக்கத்தில் நல்லது அடித்துக் கொண்டே போய்விட்டது என்று ஆகாமல் அது ஜீவனுடன் வாழ இடம் உண்டு என்று ஆகவேண்டும். அப்படி மக்கள் – பெரியவர்கள், வாலிபர்கள் எல்லோரும் சேர்ந்து – ஆக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஈச்வர க்ருபை அப்படி ஆக்கிக் கொடுக்கவேண்டும்.

  • சிறுவர்களுக்கும், வாலிபர்களுக்குமான இவ்வுரைகளைப் படித்த கையோடு, ‘குரு-சிஷ்ய உறவு’ என்ற உரையில் ‘தற்கால ஆசிரியர்மார்களுக்கு’ என்றுள்ள பிரிவைப் படித்தால் வட்டம் பூர்த்தியாகும்.