சுயக்கட்டுப்பாடே பெரிய சாகஸம்

சுயக்கட்டுப்பாடே பெரிய சாகஸம்

இப்படி மற்றபேர்தான் தங்களை நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்று வாலிபர்கள் விட்டுவிட்டமல் தாங்களாகவே நல்வழிப்படுவதுதான் அழகும் கௌரவமும். பெரியவர்கள் இவர்களுக்கு உதாரணம் காட்டுவதற்குப் பதில் இப்போதுள்ள ஸ்திதியில் இவர்களே பெரியவர்களுக்கு உதாரணம் காட்டும்படித் தங்களை உசுப்பி எழுப்பிக் கொண்டால் அதுதான் யௌவன ஸாஹஸங்களில் ரொம்பவும் விசேஷமான ‘க்ரெடிடபி’ளான ஸாஹஸமாக இருக்கும்.

‘அட்வென்’சருக்குப் பறக்கும் யுவ ஸமூஹத்தில் அங்கங்கே சில பேராவது இந்த ‘அட்வென்ச’ரில் புறப்பட்டு, தங்களுடைய ஸாஹஸ ஸாமர்த்தியத்தால் மற்ற மாணவர்களையும் அந்த ‘ஸ்பிரிட்’ தொற்றிக்கொள்ளுமாறு செய்யவேண்டும். இதுதான் என் ஆசை. இதற்காகவே, எவரைப் போல் வித்யா ஸ்வீகரணம் செய்த கல்விமான் இல்லையோ, எவரைப் போல் ஸாஹஸம் செய்தவர் இல்லையோ, அதே ஸமயம் எவரைப் போல் விநய பக்தி உள்ளவரும் இல்லையோ அந்த ஆஞ்ஜநேய ஸ்வாமியைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நடக்கமுடியாத ஒன்று நடக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுவதாகவும், ப்ரார்த்தனை பண்ணுவதாகவும் தோன்றலாம். வயதானவர்களாலேயே தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமலிருக்கும் போது காளைப் பருவத்தினரிடம் அதை எப்படி எதிர்பார்க்கலாமென்று தோன்றலாம். நான் எல்லா யுவர்களும் அப்படி ஆவார்களென்று ஒருநாளும் எதிர் பார்க்கவில்லை. நூற்றுக்கு ஏழெட்டுப் பேரைத்தான் எதிர் பார்க்கிறேன். நான் சொல்வது விசித்ரமாகத் தோன்றினாலும், வயதானவர்கள்தான் ரொம்ப வருஷம் கட்டுப்பாடு இல்லாத போக்கில் பழகி ஊறிப் போய்விட்டதால் அந்தப் போக்கிலிருந்து மீளுவது முடியாமல் போகிறது. வாலிபர்கள் அப்படியில்லை. மனஸ் வைத்துவிட்டால், ஒரு பிடிவாதமான ஸங்கல்ப பலத்தில் மனஸுப்படியே சாதித்துக் கொள்கிற சக்தி அவர்களுக்கு உண்டு. அப்படி ஏழெட்டு பெர்ஸெண்ட் இந்த விஷயத்தில் புறப்பட்டால் போதுமென்றுதான் நினைக்கிறேன். வயதானவர்கள் தங்கள் விஷயம் தங்களோடு என்று முடித்து விடுவது போலில்லாமல் வாலிபர்கள் dynamism உள்ள உத்ஸாஹிகளாகத் தங்கள் வழியில் மற்ற ஸகாக்களையும் இழுக்க முடியுமாதலால் இந்த ஏழெட்டுப் பெர்ஸண்டே ஸங்கமாகச் சேர்ந்து காரியம் செய்ய ஆரம்பித்தால் மற்ற வாலிபர்களிலும் கணிசமான பேரை கட்டுப்பாட்டு நெறிகளில் கொஞ்ச நஞ்சமாவது கொண்டு வர முடியும் என்பதே என் நம்பிக்கை.