படிப்பு பாதிக்காமல் ஸேவை த

படிப்பு பாதிக்காமல் ஸேவை

தேசத்துக்கும் ஸமூஹத்துக்கும் மாணவப் பருவத்தில் செய்யக் கூடிய நல்லதுகளை, எல்லாக் கல்விசாலைகளிலும் படிப்பு போக பாக்கித் துறை நடவடிக்கைகளுக்கும் extra-curricular activities என்று இடம் கொடுத்து வைத்திருக்கிறார்களல்லவா, அதற்கு உட்பட்டே படிப்புக்குக் குந்தகம் இல்லாதபடி செய்யத் தடையில்லை.

தாங்கள் படிக்கும் கல்வி நிலையத்தின் ஆதரவிலேயே நடத்தப்படும் இவ்வித ஸேவைகளில் ஈடுபடுவதோடு மாணவர்கள் நிறுத்திக் கொள்வது நல்லது. அதற்கு அதிகமாக பொதுநலப் பணிகளில் பிரவேசிக்க வேண்டியதில்லை. பிற ஸ்தாபனங்களின் மூலமும் பணி செய்யப் படிப்புக்கு மிஞ்சிப் பொழுதிருந்தால் அப்போது வேண்டுமாயின் பெற்றோர் அநுமதியுடன் அவற்றில் உரிய அளவுக்கு ஈடுபடலாம். படிப்புக்கு பாதிப்பு கூடாது என்பது முக்கியம்.

இங்கே கல்வி நிலையங்களுக்கும் ஜாக்ரதை தேவை. பாடம்-படிப்பு என்பதைவிட இம்மாதிரி உலகத்துக்கான பணிகளாலேயே கல்வி நிலையத்துக்குப் பெயரும் புகழும் கிடைக்கக் கூடுமென்பதால் அந்த நிலையங்களே இவற்றுக்கு மிதமிஞ்சிய இடம் கொடுத்து, சராசரி மாணவர்களும், மந்தமானவர்களும் படிப்பில் முன்னேறாமல் பின்தங்கி நிற்பதற்கு வழி செய்து விடக் கூடாது. படிப்புக்கு முக்யத்வம் கொடுத்து நன்றாக எல்லை வகுத்துக் கொடுத்து விட்டே, வெளியுலகப் பணிகளை அவை மேற்கொண்டு, மாணவர்களைப் படிப்பின் அடிப்படையில் தரம் பிரித்து, அவரவர் அளவுக்கு உட்பட்டே அப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

ஆனால் இப்படி வெளியுலகுக்கு நல்லது செய்வதை அரசியல் கட்சிகளின் ஸம்பந்தத்தை அடியோடு விலக்கியே செய்யவேண்டும். அரசியல் கட்சித் தொடர்பு அவர்களுக்கு அடியோடு கூடாது.