அரசியல் வேண்டவே வேண்டாம் ப

அரசியல் வேண்டவே வேண்டாம்

பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகை, ஸ்போர்ட்ஸ் என்று நான் சொன்னதில் பாலிடிக்ஸ் என்பது மாணவர்களுக்கு வேண்டவே வேண்டாம். தேச நடப்பு அதில்தானே இருக்கிறது என்று கேட்கலாம். தேச நடப்பு அதில்தான் இருந்தாலும் அந்த நடப்பை நல்ல கூர்மையான அறிவுடன் நடத்தித் தரவும் கல்வியில் தேர்ச்சி பெறுவதுதானே உதவும்? இப்போது கல்விக்கு இடையூறு செய்துகொண்டு பொலிடிகல் ப்ரசினைகளில் இறங்குவது அதை மேலும் உணர்ச்சி வேகத்தால் கெடுத்து, தங்களையும் கெடுத்துக் கொள்வதில்தான் முடியும். ‘மேலும்’ கெடுத்து என்று சொன்னேன். ஏனென்றால் தற்போது அரசியலில் யோக்யர்களும், யோக்யமான கொள்கைகளும் அபூர்வமாகிக் கொண்டே வந்து அது ஸ்வய நலத்துக்கும், ஆத்திர-க்ஷாத்திரங்களுக்குமே வளப்பமான விளைநிலமாகியிருக்கிறது. இந்த நிலையில் பக்குவ தசைக்கு வராத இளவயஸு மாணவர்கள் அதில் போய் விழுந்தால்?

இப்போது போலில்லாமல் பாலிடிக்ஸ் – அரசியல் – ஒழுங்காக, தார்மிகமாக இருந்தாலும், எதற்கும் உரிய பருவம் என்று ஒன்று உண்டாகையால், படித்துத் தேர்ச்சி பெற்று உத்யோகத்துக்குப் போய் வாழ்க்கைப் பொறுப்பு எடுத்துக் கொள்ளவே கடமைப்பட்டுள்ள மாணவ ஸமூஹம் அரசியலில் இறங்கவே கூடாது.

கல்வி கற்கிற காலத்தில் ஆற்ற வேண்டிய கடமை கல்வி கற்பதுதான். அதற்குக் குந்தகமாக அரசியலில் ஈடுபாடு காட்டுவது இன்றைக்கும், என்றைக்குமாக தனக்கும் ஹானி பண்ணி, தேச நடப்புக்கும் குந்தகந்தான் உண்டாக்கும்.

மாணவப் பிராயத்தில் படிக்கிற படிப்பும், அதோடு, அதைவிட, உணர்ச்சி ப்ரவாஹம் பெருகும் அந்த தசையில் ப்ரவாஹத்தைக் கட்டுப் படுத்துவதற்காகக் கைக்கொள்ளும் பக்தி, விநயாதி ஸத்குணங்களுந்தான் யுவர்களை நல்ல மனிதர்களாக, தர்மத்தின் புஷ்டி பெற்ற ப்ரஜைகளாக ரூபம் செய்யும். அந்தப் புஷ்டியைப் பெற்ற பலசாலிகளாக ஆகி, படிப்பு முடிந்த பின்பே, அந்த தர்மபலம் கொண்டு தேச நடப்பை தாங்கி தரித்து அதை தக்க வழியில் நடத்திக் கொண்டு போகவேண்டும். பலம் பெறுவதற்கான அப்யாஸம் பெறுகிற மாணவ தசையிலேயே, பலம் பெற்று விட்டவர் செய்ய வேண்டியதைச் செய்யப் புறப்படுவது அனர்த்தத்திலேயே முடியும். ‘நாம் தேசத்தை நல்ல வழியில் நடத்துவதற்கு நல்ல புத்தி பலமும், தர்ம பலமும், தெய்வ பலமும் பெற வேண்டும். முதலில் இவற்றை நாம் பெற்று, நிலைப்படுத்திக் கொண்டால்தான் பிற்பாடு தேச ப்ரச்னைகளின் பளுவைக் கஷ்டப்படாமல், தாங்கி அதை அபிவிருத்தி செய்ய முடியும். ஆகவே பலம் பெறாத தற்போதைய ஸ்திதியில் நாம் ராஜீய வியவஹாரங்களில் இறங்குவது நமக்கும் நல்லதில்லை, ராஜ்யத்துக்கும் நல்லதில்லை’ என்று யௌவனப் பிராயத்தினர் உணர வேண்டும்.

இவற்றில் புத்திபலத்தை முக்யமாகக் காலேஜில் பெறுகிற படிப்பாகவே பெறவேண்டும்; அதோடு அதைக் கொண்டுதான் நாளைக்கு இவன் ஒரு உத்தியோகத்திலே அமர்ந்து வீட்டை நடத்தமுடியும் என்றும் ஏற்பட்டிருக்கிறது. படிப்புக்குக் குந்தகம் பண்ணிக்கொண்டால் வீட்டை நடத்த முடியாமல் போகும். தன் வீட்டையே நடத்தாதவன் நாட்டை எப்படி நடத்த முடியும்?

ஆகவே இந்தப் பிராயத்தில் செய்ய வேண்டியது, தன்னை ஒரு நல்ல பிரஜையாக பலப்படுத்திக் கொள்வதும், தற்போது தனக்குள்ளதும், கல்யாணமான பின் தனக்கு ஏற்பட இருப்பதுமான வீட்டை நிர்வஹிப்பதற்குத் தேவையான அஸ்திவாரத்தைப் போட்டுக் கொள்வதும் தான். அதற்கப்புறம்தான் நாடு வருகிறது. பிற்பாடு அதன் நடப்புகளை நல்லபடி செய்வதற்கே இப்போது அதில் தலையிடாமல், தகுந்த யோக்யாதாம்சங்களைப் பெறவேண்டும்.

அரசியல்வாதிகள் தங்களுடைய ஆதாயத்தையே நினைத்துக்கொண்டு மாணவர்களையும் தங்கள் பக்கம் இழுக்கத்தான் பார்ப்பார்கள். மாணவர்கள் அப்படி இழுபடாதபடி அவர்களுக்குத் தகுந்த புத்திமதியை அறிவுரையை அவர்களுடைய கல்வி ஸ்தாபனத்தினரும், அகத்துப் பெரியவர்களும் எடுத்துச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும். இன்றைக்கு சீலமுள்ள பெரியவர்களாகவும், தலைவர்களாகவும் நம்மிடையே உள்ளவர்களும் அவர்களை உரியபடி எச்சரித்து, விஷயத்தை விளக்கிக் காப்பாக நிற்க வேண்டும்.

வாலிபர்களுக்கு இப்படி சும்மா சும்மாச் சொல்வதால் அலுப்பும் ஆயாஸமும் ஏற்படாத விதத்தில் – bore அடிக்காத விதத்தில் – பக்குவமாக, அவர்களுக்கும் அதில் ஒரு ருசி, ‘இண்டரஸ்ட்’ உண்டாகுமாறு சொல்ல வேண்டியதைச் சொல்லி, எச்சரிக்கை வேண்டியதில் எச்சரிக்கை ஏற்படுத்த வேண்டும். இது குறிப்பாக அறிவாளிகளான ஆசிரியர்மார்கள் கவனம் செலுத்திச் செய்ய வேண்டிய காரியம்; பெரிய ஸேவை. தேசத்தின் முதிர்ச்சி பெற்ற தலைவர்களும் ஆகர்ஷணம் உள்ள முறையில் இப்படிப் பிரசாரம் செய்து மாணவர்களுக்கு விழிப்பு உண்டாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.