பக்தி அவசியம் இப்போது குரு

பக்தி அவசியம்

இப்போது குருகுலவாஸக் கல்விமுறை அடிபட்டுப் போய்விட்டாலும், இன்றைக்கும் யுவர்களைத் தப்பான உணர்ச்சி வேகங்கள் அடித்துக்கொண்டு போகாமல் ரக்ஷிப்பதற்கு பக்தியையும், விநயத்தையும் விட்டால் வேறே உபாயமில்லை. தெய்வத்திடம் பக்தியும், அகத்திலே தாயிடமும்-தகப்பனாரிடமும் கல்விசாலையில் ஆசிரியர்களிடமும் கட்டுப்பட்டு மரியாதை காட்டுவது என்ற ரூபத்தில் பக்தியும் மாணவர்களுக்கு அத்யாவச்யம்.

பக்தியுடன் ஸ்வாமியிடம் தினமும் இரண்டு வேளையும் கால்மணி, அரைமணி நேரம் ஜபம், பிரார்த்தனை செய்வது, அவ்வப்போது கோவிலுக்குப் போவது, ஸத்கதா ச்ரவணம் செய்வது, தெய்விகமான ஆத்ம ஸம்பந்தமான நூல்கள் கொஞ்சம் படிப்பது ஆகியன அவர்களுக்கு ரொம்பவும் நல்லது செய்யும். ஆனாலும் இங்கேயுங்கூட நான் ஜாக்ரதையுடனேயே கால்மணி-அரைமணி பிரார்த்தனை, ‘கொஞ்சம்’ தெய்வ பரமாகப் படிப்பது என்று கால அளவைக் குறுக்கிக் கொடுத்திருக்கிறேன். ஏன் குறுக்கினேன் என்றால் மாணவர்களுக்கு முக்கியம் படிப்புத்தான். அதிலேதான் அவர்கள் மிக நிறையக் கவனம் செலுத்தவேண்டும். அப்படிப் பார்க்கும்போதுதான் ‘ஆவரேஜ்’, சராசரி என்ற நிலையிலுள்ள ஒரு மாணவன் தெய்வ சம்பந்தமாகவேகூட ரொம்பவும் பொழுதைச் செலவு செய்து படிப்புக்கு ஊறு விளைவித்துக் கொள்ளக்கூடாது என்ற அபிப்பிராயத்தில் பக்தி பண்ணுவதற்கு கால அளவைக் குறுக்கிக் கொடுத்தேன். நல்ல புத்திசாலியாக இருந்து, படிப்புக்கு அதிகப் பொழுது செலவிடத் தேவையில்லாதவர்களுக்கு இந்தக் குறுக்கல் இல்லை. அதே ஸமயத்தில் அவர்களுக்குக்கூட இந்தக் காலகட்டத்தில் படிப்புத்தான் முதல் முக்யத்வம் என்ற ப்ரக்ஞை மறக்கக்கூடாது.

அடிப்படையில் அத்தனை மாணவர்களுக்கும் உறுதியான தெய்வ நம்பிக்கை என்பது இருந்து, தெய்வந்தான் தங்களை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும் என்ற பிரார்த்தனா சிந்தனை பலமாக ஸ்திரப்பட்டுவிட்டால் போதும், தெய்வ பக்திக்காக எவ்வளவு பொழுதை ஒதுக்குவது என்பது அடுத்த பக்ஷம் தான். அது அவரவரும் படிப்பில் எப்படி, கெட்டிக்காரரா இல்லையா என்பதைப் பொறுத்து அமையும். கெட்டிக்காரர்கள் படிப்புக்குப் பொழுதைக் குறைத்துக் கொண்டு பக்தி பண்ணுவதற்கு ஜாஸ்தி செலவிடலாம். அப்படியில்லாதவர்கள் இதற்கு மாறுதலாகச் செய்ய வேண்டும்.

படிப்புக் காலத்தில் தெய்வ விஷயமாகக் கூட ரொம்பவும் போய்விடவேண்டாம் என்று ஒரு பக்கம் சொல்லும்போதே, இன்னொரு பக்கம் அதிலும் இருக்க வேண்டிய அளவுக்கு ஈடுபாடு இல்லாவிட்டால் மனஸின் நல்ல வளர்ச்சி ரொம்பவும் பாதிக்கப்பட்டுவிடும் என்பதையும் வலியுறுத்தியாக வேண்டியிருக்கிறது. தெய்வ சிந்தனை, அதோடேயே இழைந்து வரும் தர்மம் என்கிற நெறிமுறைகள் ஆகியவை இல்லாவிட்டால் மனுஷ்ய ஜன்மமே வீண்தான்.