அரோஹரா ஆரம்பத்தில் பார்வதி

அரோஹரா

ஆரம்பத்தில் பார்வதி என்று ஒரு தாயாரைச் சொன்னேன். அவளுக்குப் பதி, கணவர் பரமசிவன், ‘பார்வதீபதி’ என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு ‘மஹாதேவன்’ என்றும் பெயர். உங்களைப் போல் ஒரு குழந்தை அவரை ‘ஹரஹர’ என்ற பெயரைச் சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு ஞான சம்பந்தர் என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக ஹரஹர என்று சொல்லிக்கொண்டு போவதைப் பார்த்து எல்லா ஜனங்களும் ‘அரோஹரா’ என்று கோஷம் போட்டார்கள். அந்தக் காலத்தில் உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் அந்தக் கோஷத்தில் ஓடிப் போய்விட்டது. வையம் அதாவது, உலகம் துயர் தீர்ந்தது. அதாவது, கஷ்டமே இல்லாமல் ஆயிற்று. “என்றைக்கும் இதேமாதிரி ஹர ஹர சப்தம் எழும்பிக் கொண்டே இருக்கட்டும்; அதனால் உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும்” என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று.

     அரன் நாமமே சூழ்க

      வையகமும் துயர் தீர்கவே

அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன்.

இப்போது நான் “நம: பார்வதீ பதயே!” என்று சொல்வேன். உடனே நீங்கள் அம்மையான பார்வதியையும் அவள் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு அந்தக் குழந்தை சொன்ன மாதிரியே பக்தியோடு “ஹர ஹர மஹாதேவா” என்று சொல்ல வேண்டும்.

     நம: பார்வதீ பதயே!

      ஹர ஹர மஹாதேவா!