பிறருக்கு உபகாரமாக இப்போது

பிறருக்கு உபகாரமாக

இப்போது நாம் இத்தனை பேரும் ஒரே ஒரு மரத்தின் நிழலில் இருக்கிறோம்.*  ரொம்ப வருஷங்களுக்கு முன் இத்தனூண்டு சின்னதாக இருந்த ஒரு செடிதான் இப்போது இவ்வளவு பேருக்கும் நிழல் தருகிற மரமாக ஆகியிருக்கிறது. இன்றைக்குச் சின்னவர்களாக இருக்கிற நீங்களும் பெரியவர்களாகிற போது இந்த மரம் மாதிரிப் பலபேருக்கு உபகாரமாக இருக்க வேண்டும்.

*இது ஒரு பள்ளியின் மர நிழலில் ஆற்றிய உரை.

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெல்லாம் உபகாரம் செய்வதற்காகத்தான். நிறையச் சம்பாதித்து அதையெல்லாம் நமக்காகவே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி சந்தோஷப்படமாட்டார். அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோயாளிகள், அநாதைகள் எல்லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட்டார்.

அதனால் நீங்கள் எல்லோரும் உலகத்துக்கு உங்களால் முடிந்த உபகாரத்தை செய்யவேண்டும். அதில் உங்களுக்கு ஒரு பெரிய சந்தோஷமும் திருப்தியும் உண்டாகும். நீங்களே சாப்பிடுவதை விட ஓர் ஏழைக்குச் சாப்பாடுபோட்டால் அதில் உங்களுக்கு இன்னும் ஜாஸ்தி இன்பம் உண்டாகும். நாம் பிறந்திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான் என்று தெரியும். இப்படி உங்களால் முடிந்த உதவியைச் செய்து நீங்கள் மற்றவர்களின் மனத்தைக் குளிர வைத்தால் அதைப் பார்த்து ஸ்வாமியும் உங்களிடம் மனம் குளிர்ந்து நிரம்ப அருள் செய்வார்.

உங்களிடம் மற்றவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் வந்தால் அவர்களும் நீங்கள் ஸ்வாமியைத் தொழுவதைப் பார்த்துத் தாங்களும் தொழுவார்கள். பக்தியினால் உங்களுக்கு உண்டாகிற ஆனந்தமும் நல்லறிவும் அவர்களுக்கும் கிடைக்கும். ஆனபடியால் நீங்கள் ஸ்வாமியிடம் பக்தியாக இருப்பதே எல்லாவற்றையும் விடப் பெரிய பரோபகாரமாகிறது.