இறைவனின் அன்பும் தர்ம ஒழுங்குப்பாடும்

இறைவனின் அன்பும் தர்ம ஒழுங்குப்பாடும்

சூரிய மண்டலம் எத்தனை பெரிது! அதைவிடப் பெரிய நட்சத்திர மண்டலங்கள் எத்தனையோ இருக்கின்றனவாம். இத்தனையையும் செய்த ஸ்வாமி எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்? அத்தனை பெரியவர் குழந்தைகளான நம் பிரார்த்தனையையும் கேட்கிறார்! புழு பூச்சியிலிருந்து எல்லாவற்றுக்கும் இந்த உலகத்தில் அததற்குத் தேவைப்படுகிற ஆகாரத்தை அவர்தான் வைத்திருக்கிறார். அப்படியானால் அவர் இருதயத்தில் எத்தனை அன்பு இருக்கவேண்டும்?

அன்பு இருப்பது மட்டுமல்ல. நாம் ஒழுங்கில்லாமல், தப்பும் தவறுமாகக் காரியம் செய்வது போலவா அவர் செய்கிறார்? அவரை ’ஏன்?’ என்று கேட்டுக் கண்டிப்பதற்கு அவருக்கு மேல் எவரும் இல்லாவிட்டாலும் அவர் எத்தனை ஒழுங்கோடு தினமும் இந்தப் பூமியை ஒரு முறை சுழலவிட்டுப் பகலையும் இரவையும் படைக்கிறார்? இதே போல் இந்தப் பூமி சரியாக ஒரு வருஷத்தில் சூரியனைச் சுற்றி வரச் செய்து பலவிதமான பருவங்களை உண்டாக்குகிறார்! ஒவ்வொன்றும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒழுங்கு செய்திருக்கிறார். நாமும் அவரைப் போல மனசில் அன்பாக இருக்க வேண்டும்; காரியத்தில் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த ஒழுங்குக்குத் தான் தர்மம, அறம் என்று பெயர்.

அன்பும் அறமும் உருவான ஸ்வாமியை வேண்டினால் நமக்கும் இவை உண்டாகும். அவருடைய அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மன அழுக்கையெல்லாம் போக்குகிற பெரிய ஸ்நானம்.