அழுக்கு நீக்கிக்கான நீர் பிரார்த்தனைய

அழுக்கு நீக்கிக்கான நீர் பிரார்த்தனையே

சோப்பு முதலானவை அழுக்கைப் போக்குகிற பண்டங்களானாலும் அவற்றை அப்படியே நம் மீது வைத்துக் கொண்டிருக்க முடிவதில்லை. இவ்விதம் செய்தால் இந்த வஸ்துக்களே அழுக்கு மாதிரிதான் நம் மீது படிகின்றன. ஆகவே, அழுக்குப் போக்கும் வஸ்துக்களும் நமக்குப் பயனாக வேண்டுமானால் ஜலம்தான் அத்தியாவசியமாக இருக்கிறது. சீயக்காய், சோப்பு முதலியவைகளை ஜலத்துடன் சேர்த்தே தேய்த்துக் கொள்கிறோம். அதற்கப்புறமும் இவையே உடம்பைப் பிடித்துக் கொண்டு அழுக்காகி விடாமல், நிறைய நீரைக் கொட்டிக் கொண்டு குளிக்கிறோம்.

இப்படியே நம் மன அழுக்கைப் போக்குகிற நல்ல குணங்கள் பல இருந்தாலும்கூட, வேறொரு ஜலம் இல்லாவிட்டால் இந்த நல்ல குணங்கள் மாத்திரம் நமக்கு மனத்தூய்மையைக் கொடுக்க மாட்டா. அந்த ஜலம்தான் தெய்வ பக்தி. எல்லா அழுக்குகளும் நீங்குவதர்குக் கங்கா ஸ்நானமாக இருப்பது ஸ்வாமியிடம் செய்கிற பிரார்த்தனை தான்.

சின்ன வயசிலிருந்தே தினமும் ஐந்து நிமிஷங்களாவது தனிமையில் உட்கார்ந்து ஸ்வாமியையே நினைக்க வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. எனவே, இப்போதே இந்த நல்ல பழக்கத்தை ஆரம்பித்து விட வேண்டும்.

முதலில் நமக்கு நேராக எல்லா நன்மைகளும் செய்து வருகிற தாய் தந்தையரையும், ஆசிரியரையும் மனத்தில் நினைத்து வணங்க வேண்டும். பிறகு உலகம் முழுவதற்கும், ஈ, எறும்பிலிருந்து நம் அப்பா, தாத்தா உள்பட எல்லாருக்கும், தாயும் தந்தையுமாக இருக்கிற ஸ்வாமியை நினைக்க வேண்டும். ஒரு நாள் குளித்தால் போதாதது போலவே, தினம் தினமும் மன அழுக்குப் புதிதாகச் சேருமாதலால், அன்றன்றும் பிரார்த்தனை செய்து மனத்தைக் கழுவ வேண்டும்.