தவறான உபாயங்களுக்குத் தடை, தண்டனை

தவறான உபாயங்களுக்குத் தடை, தண்டனை

உண்மைகளையே உரிமையாக்கித் தரத்தான் தர்மம். தர்மத்தை அமல் செய்யத்தான் சட்டம். எனவே சட்ட பூர்வமாக மதச் சுதந்திர உரிமை அளிக்க அரசாங்கம் முற்படுகையில், 1. சுய விருப்பம் ஒன்றின் மீதேயும், 2. ஒரு மதத்தின் கொள்கை, நடைமுறைப் பயிற்சி ஆகியவற்றில் மட்டுமே அச்சுய விருப்பம் இருக்கும் போதும்தான் மதமாற்றம் நடைபெறுகிறது என்ற உறுதிப்பாட்டை உண்டாக்குவதற்கு உதவியாகவும் ஒரு சட்டவிதி இயற்றுதல் அவசியமாகிறது. மத சம்பந்தமேயில்லாத உபாயங்களால் மதமாற்றம் செய்வதைத் தடுக்கும் பொருட்டே இவ்வுறுதிப்பாடு அவசியமாகிறது.

மதப் பிரசாரம் என்பது ஒரு மதத்திலுள்ளோருக்கே அதனை நன்கு பிரகாசப்படுத்திப் பற்றுதலை வளர்த்துக் கொடுக்கும் நோக்கத்திற்காக இன்றி, பிற மதத்தினரையும் அதற்கு மாற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தால் துஷ்பிரசாரமேயாகும். துஷ்பிரசாரம் என்பது பொய்மையே, சட்டப்படி குற்றமே. குற்றத்திற்கு இடமளிக்காமல் தண்டனை விதிக்கவே சட்டம். எனவே பிரசாரம்ட என்பதன் மூலம் பிற மதத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தில் சேருமாறு அழைப்பு விடுவதை, மத மாற்றப் பிரசாரம் செய்வதை, அரசியல் நிர்ணயச் சட்டம் தண்டனைக்குரிய குற்றமாக்குதல் வேண்டும்.

மதச் சுதந்திரத்தின்படி பிரசாரவுரிமை அளிக்கப்பட்டுள்ளதே என இதற்கு ஆட்சேபணை செய்வது நிற்காது. ஏனெனில் மதப் பிரசாரம் என்பது அம்மதத்தின் கொள்கை முதலான மதாம்சங்களுக்கு விளக்கமாகவே மட்டும் முடிந்து, அதனாலேயே பிற மதத்தினரும் தானாகக் கவரப்பட்டு அதைத் தழுவுவதற்குத்தான் மதச் சுதந்திரம் இடமளிக்குமேயழிய, தமது கொள்கைகளை விளக்கி அதனால் பிறரை அம்மதத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பதற்கல்ல.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is பிரசாராமும் துஷ்பிரசாரமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஹிந்து மதமும் மதமாற்றமும்;முதல் மாற்றத்தைச் சரி செய்யும் மறுமாற்றம்
Next