அரசும் மதமும், தர்ம சக்கரம் பகவானின் அருட்சூசகம்

தர்ம சக்கரம், பகவானின் அருட்சூசகம்

நமது பாரத நாடு விடுதலை அடைந்திருக்கும் இத்தருணத்தில், இந்தப் புராதன நாட்டு மக்கள் யாவரும் ஒரே மனத்துடன் ஸ்ரீ பகவானை மனமுருகிப் துதிக்க வேண்டும். நமக்கு மேன்மேலும் மனோபலத்தையும் தொன்று தொட்டு நமது நாட்டின் தனிச் சிறப்பாக உலக முழுவதிலும் பெருமை பெற்றுத் தந்துள்ள ஆத்மிகத் துறையில் நாம் நன்கு ஈடுபடச் சக்தியையும் கொடுத்தருளுமாறு வேண்டுவோம். அவரது அருளால் தான் நமக்குச் கிடைத்திருக்கும் இச்சுதந்திரத்தை நாம் உண்மையான சுதந்திரமாகக் காப்பாற்றிக் கொள்ளவும், அதன் வழியே நமது நாட்டினர் மட்டுமல்லாது, உலகின் கண்ணுள்ள எல்லா மக்களும் நிறைவாழ்வு என்பதன் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற உதவி செய்யவும் முடியும்.

பாக்கியவசமாக நமது சுதந்திர பாரதத்தின் கொடிக்கு நடுவில் நடுநாயகமாக பகவானது தர்மஸ்வரூபமான சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. இக்கொடியின் அமைப்பைத் திட்டமிட்ட தலைவர்களின் கருத்து வேறுவிதமாக இருப்பதாகத் தோன்றினாலும்ட, நாமோ, 'பகவானே இந்நாட்டின் உயிர்நிலை அவரைச் சுற்றியே பிரஜைகளின் வாழ்க்கை முழுதும் படர்ந்திருப்பதுதான்' என்பதை நமக்கு நினைவூட்டவும், அவரது காப்பு சுதந்திர பாரதத்திற்கு எப்போதும் உண்டு என்று காட்டு முகமாகவுந்தான் அவரது இத் தர்ம சக்கரம் நமது கொடி நடுவில் இடம் பெறக் கருணை கூர்ந்திருக்கின்றாரென எண்ணுகிறோம்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is இரு வித சரணாகதிகளும் குரு சிஷ்ய உறவும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  உண்மையான 'ஸெக்யூலரிஸம்'
Next