பரிப்ரச்னம் எப்படி விநயமாகும்?

பரிப்ரச்னம் எப்படி விநயமாகும்?

வளைத்து வளைத்துக் கேள்வி கேட்பதே 'பரிப்ரச்னம்'. "குரு சொல்வதில் நிச்சயம் ஏற்படாவிட்டால் தானே இப்படிக் கேட்கத் தோன்றும்? ஆகையால் விஷயத்திலும், விஷயத்தில் மாத்திரமில்லாமல் விஷயம் சொல்லும் குருவிடமுமே ஸந்தேஹத்தைக் காட்டுவது போல் அல்லவா இந்தப் பரிப்ரச்னம் என்பது தோன்றுகிறது, இந்த இடத்திலேயே பகவான் 'ஸந்தேஹக்காரன் நாசமடைகிறான்' - 'ஸம்சயாதமா விநச்யதி' - என்றும் சொல்லியிருக்கிறாரே ச்ரத்தை, நியம், சரணாகதி இருந்தால் குரு சொல்வதில் ஸந்தேஹமே வராது, ஆனபடியால், கேள்வியும் எழும்பாது. கேள்வி கேட்பவன் ஸம்சய்காரன்தோனே? சிஷ்ய லக்ஷணத்திற்கு நேர்மாறாக இப்படிப் பண்ணி பகவான் வாயினாலேயே 'விநச்யதி' 'அழிந்து போகிறான்' என்று சாபம் வாங்கிக் கொள்வதை எப்படி விநயத்தில் சேர்க்கமுடியும்? - இப்படித் தோன்றலாம்.

அதில்லை ஸரியான அர்த்தம். சிஷ்யன் அவச்யம் பண்ணவேண்டியவைகளிலேயே, ப்ரணிபாத்திற்கும் ஸேவைக்கும் மத்தியில் பரிப்ரச்நத்தை பகவான் சொல்லியிருக்கிறார். அப்புறம், "ஸம்சயாத்மா வீணாகிறான்" என்று பிரித்துச் சொல்லியிருக்கிறார். ஆகையினால் வளைத்து வளைத்துக் கேள்வி கேட்கிற 'பரிப்ரச்னம்' ஸம்சயம் இல்லை என்று ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.

அந்தப் பரிப்ரச்னத்தை எப்படிப் புரிந்துகொள்ளணுமென்றால், அது குருவை வளைத்து வளைத்துக் கேட்பதில்லை, அப்படிக் கேட்டால்தான் அவரிடம் ஸம்சயம் என்று ஆகும். அவர் சொன்ன விஷயம் ஸரியா என்ற ஸந்தேஹமும் இல்லை. குரு சொல்கிறாரென்றால் அது ஸரியே என்று வைக்கும் நம்பிக்கைக்கு ஹானியான ஸம்சயமில்லை. 'அவர் சொல்லும் விஷயம் ஸரியேதான், ஆனாலும் அது தனக்கு நன்றாக அர்த்தமாகிவிடாதா? என்று ஒரு சிஷ்யன் தன்னையே வளைத்து வளைத்துப் "புரிஞ்சிண்டாயாடா?" என்று சோதித்துப் பார்த்துக் கொண்டு, ஆனாலும் அதற்குத் தானாகப் பதில் கண்டுபிடிக்கப்படாது என்று குருவிடம் ஸமர்ப்பிப்பது தான் 'பரிப்ரச்னம்'. தனக்கு ஏதோ ஒரு அணுவளவு புரியாமல் போனால்கூட, மறைக்காமல், ஒளிக்காமல் ஸமர்ப்பிக்க வேண்டும். அது அசட்டுத்தனம், அறியாமை என்று குருவுக்குத் தோன்றினால்கூடப் பரவாயில்லை என்ற அளவுக்கு அபிமான ரஹிதமாக, தன்மானம் விட்டு ஜாடாவும் கேட்டுக் கொள்வதே பரிப்ரச்னம். 'மானத்தை விட்டு' என்றால் விநயம் இல்லாமல் வேறே என்ன?

ஒரு மெஷின் இருக்கிறது. அது வேலை செய்துகொண்டு இருக்கும்போது நாம் பார்க்கிறோம். அது மெஷின், வேலை செய்கிறது என்பதில் நமக்கு ஸம்சயம் இருக்கிறதா? இல்லை. ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்று தெரியவில்லை. பக்கத்திலேயே அந்த மெஷினை விற்கிறவரோ, ஓட்டுகிறவரோ இருக்கிறார். அவருக்கு மெஷின் ஸமாசாரம் முழுக்கத் தெரியும் என்பதில் நமக்குக் கொஞ்சங்கூட ஸம்சயமில்லை. அதனால் அவரிடம் அது எப்படி வேலை செய்கிறது என்று கேட்கிறோம். அவர் சொல்கிறார். சொல்கிறதெல்லாம் நமக்கு அப்படியே புரிந்து விடுகிறதா? சில பாயின்டுகள் புரியாமலிருக்கின்றன.

அப்போது மேலே நன்றாகக் கேள்வி கேட்க வேண்டியதுதானே? அதாவது

'பரிப்ரச்னம்' பண்ண வேண்டியதுதானே? இதனால் அந்த ஆஸாமியிடமோ, அவர் சொன்ன விஷயத்திலோ ஸந்தேஹம் என்றாகி விடுமா? நாம் ஸரியாக, நன்றாகப் புரிந்து கொண்டோமா என்று நம்மிடமே ஸந்தேஹத்தில் நம்மையே சோதித்துக் கொண்டு, 'ஓ, இன்ன பாயின்ட் புரியவில்லை' என்று தெரிந்து கொண்டு, விஷயம் தெரிந்தவரிடம் அதைப்பற்றி ஒளிக்காமல் கேட்பதுதான் பரிப்ரச்னம். அது விநயத்தின் கீழே வருகிறதுதான் என்பதில் (சிரித்து) ஸந்தேஹப்பட வேண்டாம்!


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is விநயமும் ச்ரத்தையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஆசார்யாள் காட்டும் சிரத்தையின் சிறப்பு
Next