லேசாக்கி அருள்வாராக! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இடையூற்று நீக்கத்திற்காக ஸகல தேவர்களாலும் வணங்கப்படுபவர்; தேவர்களில் உச்சாணியிலிருக்கிறவர்கள் தங்களுக்குள்ளேயே வணங்கிக் கொண்டாலும் பிணங்கிக் கொண்டாலுங்கூட அவர்களுடைய காமனைகளையும் (விருப்பங்களையும்) தாமாக நிறைவேற்றி வைப்பவர் – இப்பேர்ப்பட்ட மஹிமைகள் கொண்ட விக்நேச்வரரை நாமும் பக்தியுடன் வணங்கி விக்நேச்வர ப்ரஸாதத்தால் தடைகள் யாவும் விலகி ஆனந்தமாக இருப்போம்!

பெரிய தடை நம் மனஸேதான். ஏதாவது காமம், கவலை, – ‘இது அப்படியாகணும்’, ‘அது அப்படியாகணும்’, ‘அப்படி ஆகுமோ ஆகாதோ?’, ‘எப்படி ஆயிடுமோ?’ என்று பல தினுஸான எண்ணங்களின் பாரத்தில் நெரிபடுவது – என்று நம் மனஸையே நம்முடைய வாழ்க்கைப் பிரயாணம் ஆனந்தப் பாதையில் போகமுடியாதபடி பெரிய தடையாக குறுக்கே போட்டுக்கொண்டிருக்கிறோம். விக்நேச்வரரை உபாஸித்து உபாஸித்து அவருடைய ப்ரஸாதத்தினால் அவர் மாதிரியே நாமும் குழந்தைகளாகி ஒரு காமமில்லை, கவலையில்லை, போனதையும் வருவதையும் குறித்த மனோபாரம் இல்லவே இல்லை என்றாகி, – அப்பப்போ ஒரு ஸந்தோஷமா? அதை குழந்தை மாதிரி நன்றாகச் சிரித்து அநுபவித்துக் கொண்டு – அதே மாதிரி, அப்பப்போ ஒரு துக்கம் வந்தாலும் அந்த நிமிஷம் மட்டும் அழுதுவிட்டு, ஆனால் அப்புறம் நினைத்து நினைத்து அழாமல் – இப்படி சிரிப்பு, அழுகை இரண்டும் இருந்தாலும் சிரித்து விளையாடுவதுதான் ஜாஸ்தியாக ஒரு குழந்தை இருப்பதுபோலவே இருந்துவிட்டோமானால் நம்மைவிட பாக்யசாலியில்லை. முக்யமாக, ‘சென்று போனது இப்படியாச்சே; வரப்போவது இப்படியிருக்கணுமே’ என்று ஓயாமல் நம்மை பிய்த்துப் பிடுங்கும் சிந்தனைச் சுமை குழந்தைக்கு இல்லாததுதான் அதனுடைய ஆனந்தத்தின் ரஹஸ்யம். குழந்தை ஸ்வாமி கனமான யானை ரூபத்திலிருந்தாலும் இந்த விசாரத் சுமையில்லாமல் பரம லேசாக இருப்பவர். ‘நெட்டிப் பிள்ளையார்’ என்று அவரை லேசாகப் பண்ணுகிறோமல்லவா? நம்மையும் அவர் அப்படிப் பண்ண ப்ரார்த்திப்போம்.

கவலை, குறை மட்டுந்தான் பாரம் என்றில்லை. தன்னைப்பற்றிய பெருமையும்கூடப் பெரிய பாரம்தான். இன்னும் சொல்லப்போனால் இதுதான் பெரிய பாரம். கவலைப்படுவது துக்க பாரம். தான் என்ற பெருமை அஹங்கார பாரம். துக்கத்தைப் போக்கிக்கொண்டு அதன் பாரம் தீரணும் என்ற எண்ணமாவது இருக்கிறது. அஹங்காரமோ பாரம் என்றே தெரியாததால் இதுதான் பெரிய ஆபத்து. இது குறைத்துக்கொள்ள வேண்டியது என்பதையே நாம் உணராததால் பாரத்தைப் பெருக்கிக் கொண்டே போகிறோம். ‘நாம் இப்படியிப்படிப் பண்ணினோமாக்கும், இதையிதை ஸாதித்தோமாக்கும்’ என்று பெருமைப்படுவது அஹங்கார பாரம்தான். விசேஷமாக எதுவும் செய்யாவிட்டாலும்கூட, “நான் அதைப் பண்ணினேன், இதைப் பண்ணினேன்” என்று வார்த்தையிலாவது சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது. யாராவது ஏதாவது ஸரியில்லாமல் பண்ணிவிட்டால், “நானாயிருந்தா என்ன பண்ணியிருப்பேன் தெரியுமா, ஸார்?” என்று கேட்கத் தோன்றுகிறது. வாஸ்தவத்தில் நாம் பண்ணியிருந்தால் இன்னும் மோசமாயிருக்கும்! இப்படிக் கர்த்தாவாகக் கொண்டாடிக்கொள்ளும் பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லை கட்டிக் கொள்கிறோமென்பதுதான் உண்மை. கர்த்ருத்வம் மாதிரி பாரம் எதுவும் கிடையாது என்று பாரமார்த்திகமாகக் கொஞ்சம் போனால்கூடத் தெரிந்துவிடும்.

தேவர்களெல்லோராலும் தொழப்பட்டு, அவர்களுடைய விக்னங்களையும் போக்கும் பெரிய கார்யத்தைச் செய்யும் பிள்ளையார் எப்படியிருக்கிறார்? கொஞ்சமாவது பெருமை கொண்டாடிக்கொள்கிறாரா? அவர் பாட்டுக்கு குழந்தையாகவே அப்பா சிரஸிலுள்ள பிறையைப் பிடித்திழுத்து விளையாடிக்கொண்டிருக்கிறார். அதைத் தாமரைத் தண்டு என்று நினைத்துக்கொள்ளும் அறியாக் குழந்தையாகத் தன்னைக் காட்டிக்கொண்டு விளையாடுகிறார். மனோபேதமாயிருந்த சிவ – சக்திகளையே தாம் ஒன்று சேர்த்து வைத்தும், ‘எவ்வளவு பெரிய ஸாதனை செய்து விட்டேன்?’ என்று மார்தட்டிக் கொள்ளாமல், தாம் செய்த ஸாதனை தமக்கே தெரியாத மாதிரி பால லீலையில் ஈடுபட்டிருக்கிறார். ரூபத்தில் யானையாயிருந்தாலும் உள்ளப்பாங்கில் அந்தத் தாமரை நூல் மாதிரி லேசாகவே அவர் இருப்பதால் தான் எக்காலமும் குழந்தையாகக் குதூஹலித்துக் கொண்டிருக்கிறார்.

அந்தக் குழந்தை ஸ்வாமி நம் எல்லோரையும் குழந்தை பக்தர்களாக்கி ஆனந்த லோகத்தில் எப்போதும் லேசாக மிதந்துகொண்டிருக்கச் செய்வாராக!

ஸர்வ அர்த்தங்களையும் அருளுவதில் அவர் சதுரர் என்று ஒரு பெரியவரும், நாம் சிந்திக்கும் அர்த்தங்களை அவர் அருளவேண்டும் என்று இன்னொரு பெரியவரும் ஸ்தோத்ரம் செய்திருப்பதைப் பார்த்தோம். அப்படிப்பட்ட அவர் நமக்கு முக்யமாக மனஸை லேசாக்கி சாந்தியளித்து ரக்ஷிக்கட்டும்!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is களபம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பிற சொத்துக்களும், குரு தரும் சொத்தும்
Next