இருவித மக்களுக்கான இரு வழிகள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆனாலும் லோகம், ப்ரஜைகள் என்று ஈச்வரன் நாடகம் ஆடுவதில், ‘ஸந்நியாஸியாகப் போ; காட்டுக்குப்போய் மூக்கைப் பிடிச்சுக்கோ; அப்படியே ‘ஆத்மா, ஆத்மா’ன்னு விசாரம் பண்ணி, அதிலேயே தோஞ்சு போ’ என்றால் ரொம்பப் பேர் அதைக் கேட்கக் கூடியவர்களாக இல்லை. எல்லாவற்றுக்கும் காரணமான வஸ்துவைத் தெரிந்துகொண்டு–ப்ரஹ்மம், ப்ரஹ்மம் என்னும் அதுதான் தன்னுடைய ஆத்மா என்று தெரிந்துகொண்டு–அதிலேயே ஐக்யமாகிவிட வேண்டுமென்ற தாபம் பெருவாரியானவர்களுக்கு ஏற்படுவதேயில்லை. இந்தத் தாபத்திற்கு ‘முமுக்ஷுத்வம்’ என்று பெயர். ‘விடுபட வேண்டும் என்று ஆசைப்படுவது’ தான் முமுக்ஷுத்வம். அந்த ஆசையுள்ளவன்தான் முமுக்ஷு என்பவன். நிவ்ருத்தி மார்க்கம் என்று இத்தனை நாழி நான் சொன்னது ஞான மார்க்கம் என்று பொதுவில் சொல்லப்படுவதுதான். அதில் செல்ல யோக்யதை பெற்ற அதிகாரி முமுக்ஷுக்கள்தான். ஜனத்தொகையில் அவர்கள் ரொம்பவும் கொஞ்சமாகவே இருப்பார்கள்.

மற்றவர்கள் ஏதாவது கார்யம் செய்வதில்தான் எப்போதும் ஈடுபட்டிருப்பார்கள். வெளி உபகரணங்கள், மற்ற மநுஷ்யர்கள் ஆகியவை இல்லாமல் கார்யமில்லை. இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு எதையாவது பண்ணிக்கொண்டேயிருப்பதுதான் பெருவாரியான ஜனங்களின் ஸ்வபாவம். கர்மத்திலேயே பற்றுள்ள இவர்களை ‘கர்ம ஸங்கிகள்’ என்று பகவான் கீதையில்1 சொல்லியிருக்கிறார். ஏனிப்படிக் கர்மா பண்ணிக் கொண்டிருக்கிறார்களென்றால், இவர்களுக்குப் பலவிதமான ஆசைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றிக் கொள்வதென்றால், அதற்காக ஏதோ உழைத்து, கிழைத்து, பிறத்தியானை ஏமாற்றி, கீமாற்றி ஏதாவது கார்யம் பண்ணித்தானேயாக வேண்டியிருக்கிறது? நாம்பாட்டுக்குச் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால், நாம் ஆசைப்படும் வஸ்து அதுவே நம் கையில் வந்து விழுமா? வெளியிலிருந்து ‘வரவேண்டும்’ என்றில்லாமல், நம்மிடமே எப்போதும் ஸ்வயம் ஸித்தமாக இருக்கும் ஆத்மாவை அடையத்தான் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமே தவிர, பாக்கி எது வேண்டுமென்றாலும் கார்யம் பண்ணித்தானாக வேண்டும்.

இப்படிச் சொல்வதினாலேயே ஒவ்வொரு கார்யமும் பண்ணும்போது ஆத்மாவை விட்டுவிட்டு மேலும் மேலும் வெளியில் போய்க் கொண்டிருப்பதாக ஏற்படுகிறது ‘ப்ர-வ்ருத்தி’ என்றாலே அதுதான் அர்த்தம்; ‘வெளியிலே போய்க்கொண்டேயிருப்பது’ என்றே அர்த்தம்.

இதற்கு எதிர்ப்பதம் ‘நி-வ்ருத்தி’. விட்டுவிட்டு வெளியிலே போவதற்கு எதிர் என்ன? இருந்த இடத்துக்கே திரும்ப வருவதுதானே? ‘திரும்பி வருவது’ தான் ‘நிவ்ருத்தி’ — ஆத்மாவுக்கே திரும்பி வந்துவிடுவது.

‘ப்ரவ்ருத்தி’ என்றால் கார்யத்தில் ஈடுபட்டிருப்பது என்றும், ‘நிவ்ருத்தி’ என்றால் கார்யத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு இருப்பது என்றும் அர்த்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பெருவாரியான ஜனங்கள் ஆத்மாவை விட்டு, கார்யத்தில் போகிறவர்களாகத்தானிருப்பார்கள் என்றால் அவர்களையெல்லாம், ‘அப்படிப் போகப்படாது; சும்மா உட்கார்ந்து கொண்டு ஆத்ம விசாரம் பண்ணு’ என்று பலவந்தம் செய்ய முடியுமா என்ன? பண்ணினாலுந்தான், அவர்களுக்காக அந்த ஆசை-முமுக்ஷுத்வம் என்ற ஆசை–லோக ஆசைகள் எல்லாம் போய் ஸத்ய வஸ்துவை அடைய வேண்டுமென்று மட்டுமுள்ள ஆசை–இல்லாதபோது என்ன பலன் இருக்கும்?

ஸரி, அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிடுவதா? அப்படிவிட்டால் அவனவனும் தன் துராசைகளுக்காகப் பிறத்தியானை ஏமாற்றுவது, வயிற்றில் அடிப்பது என்று அல்லவா லோகமே சீர்குலைந்து போய்விடும்? ஈச்வரனுக்கு லோகம் ரஸமுள்ள நாடகமாயில்லாமல் அலங்கோலக் கூத்தாக அல்லவா ஆகிவிடும்? பின்னே என்ன செய்யலாம்?

இதற்குத்தான் வேதமானது ப்ரவ்ருத்தியிலேயே போகக் கூடியவனுக்கு அவனுடைய போக்குக்கு ஏற்றதாக, ஆனால் அவன் இஷ்டப்படியெல்லாம் அதர்மமாகக் கார்யங்களைப் பண்ணவிடாமல், ப்ரவ்ருத்தி மார்க்கம் என்று தர்ம மயமாகக் காரியங்களை வகுத்துத் தருகின்ற கர்ம மார்க்கத்தையும், கார்யத்தை விட்டுச் செயலற்ற ஆத்மாவில் ஒடுங்க விரும்புபவனுக்கு நிவ்ருத்தி மார்க்கம் என்னும் ஞான மார்க்கத்தையும் போட்டுக் கொடுத்தது.

வேதம் போட்டுக் கொடுத்தது என்றால் என்ன அர்த்தம்? வேத மந்த்ர ரூபமாக ஈச்வரனே ரிஷிகள்மூலம் போட்டுக் கொடுத்தான் என்றுதான் அர்த்தம்.

இந்த இரண்டு விதமான ப்ரஜைகளும் அவனிடமிருந்து தானே வந்திருக்கிறார்கள்? அவர்களுக்கு நல்ல மார்க்கம் போட்டுக் கொடுக்க வேண்டியது அவனுடைய கடமை தானே? கர்ம ஸங்கிகளாகவே அதிகம் பேர் இருக்கிறார்களென்றால் அதுவும் அவனே அவர்களை அப்படி இருக்கும் படிப் பண்ணிப் போட்டிருப்பதால்தான்!

யத: ப்ரவ்ருத்திர்-பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்

என்று கீதையில் சொல்லுகிற இடத்தில்2, எவனால் இது அனைத்தும் வ்யாபிக்கப் பட்டிருக்கிறதோ அந்த ஈச்வரனிடமிருந்தேதான் ஜீவர்களுக்கு ப்ரவ்ருத்தி என்பது ஏற்பட்டிருக்கிறது என்று ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை ஆசார்யாள் பாஷ்யத்தில் மேலும் ஸ்பஷ்டமாக்கி ஈச்வரன் ஒரு ஜீவனுக்குள்ளே அந்தர்யாமியாக உட்கார்ந்து கொண்டே அதை ப்ரவ்ருத்தியில் ஈடுபடுத்துகிறான் என்று சொல்லியிருக்கிறார்.

முதலில் ‘கர்மயோகம்’ முதலான அத்யாயங்களில் சொல்லும்போது பகவான், ஜனங்கள் கர்மஸங்கிகளாக (அதாவது ப்ரவருத்தியிலேயே நாட்டமுடையவர்களாக) இருப்பதற்குக் காரணம் ப்ரக்ருதி, ப்ரக்ருதி என்றே சொல்லி வந்தார். ப்ரக்ருதி என்றால் மாயைதான். ஸரி, மாயை என்றால் அது மட்டும் தானே ஏதோ பண்ணுகிறதா என்ன? அந்த மாயையையும் உடையவனாக, அதற்கு யஜமானனாக ஈச்வரன்தான் இருக்கிறான். “ப்ரக்ருதி என்பது மாயை என்று தெரிந்துகொள். அந்த மாயைக்கு ஸொந்தக்காரன்–மாயையின் யஜமானன்–மஹேச்வரன் என்று தெரிந்து கொள்” என்று ஒரு உபநிஷத்து 3 சொல்கிறது. பகவானும் கீதையில் “மம மாயா துரத்யயா“: “கடக்க இயலாததான என்னுடைய மாயை” என்றே சொல்லியிருக்கிறார்.4 ஆகையினாலே ஈச்வரனேதான் அவனுடைய மாய லீலை நடக்கணுமென்றே கர்ம ஸங்கிகளாக ப்ரவ்ருத்தியில் போகிறவர்களையும் அப்படிப் பண்ணியிருக்கிறானென்று தெரிகிறது. ஜீவர்கள் அத்தனை பேருமே நிவ்ருத்தியில் போனால் என்ன ஆகும்? அவர்கள் ஞானத்தினால் மாயையை உடைத்தெறிந்துவிட்டு ஈச்வரனுடைய நிர்குணமான ப்ரஹ்ம ஸ்வரூபத்திலேயே ஐக்யமாகிவிடுவார்கள்.

அப்புறம் ப்ரபஞ்ச லீலை என்று எப்படி அவன் விளையாடிக் கூத்தடித்து ஸந்தோஷப்பட முடியும்? முதலில் ஸ்ருஷ்டியில் தோன்றிய ஸநகாதிகள் நிவ்ருத்தியில் போய்விட்டதால், அப்புறம் ப்ரஜாபதிகள் என்றே ஏகமாகப் பிள்ளை, குட்டிகளைப் பெற்று பூமியை ரொப்புவதற்காக மரீசி முதலான பத்துப்பேரை ப்ரஹ்மா ஸ்ருஷ்டித்தாரென்று பாகவதத்தில் பார்க்கிறோம். ஆகையினால் திவ்ய ஸங்கல்பமே லோகம் பூராவும் ஞானியாகப்போய், லோகத்தையே விட்டு விட்டுப்போய், அவனுடைய ட்ராமா ஸ்டேஜைக் காலியாக, பாழாகப் பண்ணிவிடக் கூடாதென்றுதான் இருக்கிறதென்று தெரிகிறது.

ஆனாலும் அதற்காக ட்ராமாவில் நடிக்கிற எல்லாரையும் தறிகெட்டு அவரவர் இஷ்டத்துக்கு ஆக்ட் பண்ண விட்டு விடலாமா? இப்படிக் கூடாது என்றுதான், ‘இந்த ஜனங்கள் ப்ரவ்ருத்தியில் போனாலும், நாம் வேடிக்கை பார்ப்பதற்காக அவர்களுக்குக் கொடுத்திருக்கிற கொஞ்சம் ஸ்வாதந்த்ரியத்தைக் கொண்டு ஒரே கோணா மாணாவாக ஒவ்வொருத்தரும் தன்னிஷ்டப்படியே பண்ணி, ஒட்டு மொத்தமான ஸமூஹவாழ்வு ஒழுங்கு கெட்டுப் போகும்படி ஆவதற்கு விட்டு விடக்கூடாது. இதுகள் தனி ப்ரஜைகளாகவும் ஒரேயடியாகத் தப்புப் பண்ணிப் பாபத்தில் மாட்டிக்கொள்ளவிடக் கூடாது. ட்ராமாவே இல்லாமல் எல்லாம் ப்ரம்மமாகவும் போகப்படாது; ட்ராமா ஒரே குழப்பமாகவும் போகப்படாது; ஒரேயடியாகத் தப்பு-தண்டா, அதற்காகப் பாபத்தில் மாட்டிக்கொண்டு பரிதவிப்பது என்றும் போகவிடப்படாது. கர்மாவினால் நித்யாநந்தந்தான் நிச்சயமாக இல்லையென்றாலும், அதைப் புண்ய கர்மாவாகப் பண்ணுவதால் அடையக்கூடிய தாற்காலிகமான போக போக்யாதி ஆனந்தங்கூட இல்லை என்று ஜனங்கள் ஆக்கிக்கொண்டு ஒரே கஷ்டத்தில் அழுந்திவிடுவதற்கு விடப்படாது. தனி வாழ்க்கை, ஸமூஹ வாழ்க்கை எதுவானாலும் அதில் ஒரு ஒழுங்கு, அன்பு, அழகு, பரஸ்பர ஸஹாயம் எல்லாம் இருக்கும்படியாக — இத்தனையையும் சேர்த்து ஒரே வார்த்தையில் சொல்வதானால், தர்மமாக இருக்கும்படியாக — இவர்களுக்கு வழியமைத்துக் கொடுக்கவேண்டும்’ என்று ஈச்வரன் பரம க்ருபையோடு நினைத்தே ப்ரவ்ருத்தி மார்க்கம் என்பதை வேதங்கள் வழியாக வெளிப்படுத்தினார். அவரவரும் ஸமூஹத்தில் ஈச்வரன் தங்களைப் பிறப்பித்திருக்கிற நிலைக்கு ஏற்ப இப்படியிப்படி ஸத்கார்யங்களாகப் பண்ணிக்கொண்டு போய், இந்த லோகத்திலே தாங்களும் ச்ரேயஸை அடைந்து, லோகமும் தங்களால் க்ஷேமமடையும்படியாகச் செய்துகொண்டு, அதற்கும் மேலான ஸ்வர்காதி புண்ய லோகங்களிலும் ஸந்தோஷத்தைப் பெறட்டும் என்று வழிபோட்டுக் கொடுத்தார். வேதத்தில் இந்த பாகத்துக்குக் கர்ம காண்டம் என்று பெயர். யஜ்ஞ கர்மாநுஷ்டானமெல்லாம் இதில் அடங்குவதுதான்.

நிவ்ருத்தி மார்க்கமாக மோக்ஷ ஸித்திக்கு அதே வேதத்தில் முடிவு பாகங்களிலுள்ள உபநிஷத்துக்கள் மூலமாக வழி போட்டுக் கொடுத்தார். அதற்கு ஞான காண்டம் என்று பெயர். அதில் தத்வோபதேசம் நிரம்ப இருக்கும்.

மோக்ஷம் வேறு, ஸ்வர்கம் வேறு. மோக்ஷம்தான் ஸம்ஸாரத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறும் ஸ்தானம். பரமசாந்தமான ஸ்தானம். ஸ்வர்கம் என்பது புண்யத்தின் அளவைப் பொருத்து, அது செலவழியும் காலம் வரையில் மாத்திரம், பலவித இந்த்ரிய இன்பங்களை மாத்திரம் கொடுக்கும் லோகம்.


1 III.26
2 XVIII-46
3ச்வேதாச்வதரோபநிஷத் IV.10
4கீதை VII.14

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கர்ம மார்க்கத்தின் இருவித பலன்கள்
Next