“ஏவ” எதில் சேர வேண்டும்? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

“மாமேவ கலயந்து” – “வந்தநாநி மாம் ஏவ கலயந்து” “நமஸ்காரக் கார்யம் என்னை வந்தடையட்டும்.”

“மாம் கலயந்து” என்றாலே “என்னை வந்தடையட்டும்” என்று அர்த்தம் ஏற்பட்டுவிடும். “மாம் ஏவ கலயந்து” என்று “ஏவ” சேர்த்துச் சொன்னால், “என்னையே வந்தடையட்டும்”, “என்னொருவனையே வந்தடையட்டும்,” “என்னை மட்டுமே வந்தடையட்டும்” என்று அர்த்தமாகும். அதாவது நமஸ்காரம் வேறே யாரையும் போய்ச் சேராமல் ச்லோக கர்த்தாவுக்கு மட்டுமே கிடைக்கவேண்டுமென்று ஆகும். ஆசார்யாள் பிறருக்காகவே, ‘பிறர்க்குரியாளர்’ என்னும்படியாகவே வாழ்ந்தவர். மஹான்களாக, ஆசார்யர்களாக இருக்கிறவர்களைப் பற்றி, ‘ஒரு ப்ரதிபலனும் எதிர்பாராமல் வஸந்தகாலம் மாதிரி லோகஹிதம் செய்பவர்கள்’ என்று சொன்ன அவரே அப்படி இருந்தவர்தான். அப்படிப்பட்டவர் எங்கேயாவது நமஸ்கார க்ரியையானது வேறே எவருக்குமில்லாமல் தம் ஒருவருக்கே சேரணுமென்று monopolise (ஏக போக்கியம்) பண்ணிக்கொள்ள நினைப்பாரா? ஆனாலும் போதுமான யோசனை இல்லாமல் இப்படிச் சில பேர் அர்த்தம் பண்ணிக்கொண்டிருப்பதோடு, அதுவும் போதாமல் கடைசியில் “கலயந்து நாந்யே” என்று இருப்பதையும் “(கலயந்து) நாந்யம்” என்று பாடபேதம் பண்ணி தப்புக்கு மேலும் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்! “நாந்யே (ந அந்யே)” என்று நாம் வைத்துக்கொண்ட பாடப்படி, “எனக்கு வேண்டியதெல்லாம் நமஸ்கார க்ரியை தான். வேறே எதுவுமில்லை” என்று அர்த்தம். “நாந்யம் (ந அந்யம்)” என்றாலோ, “என்னையே நமஸ்கார க்ரியை சேரணும். வேறே எவரையுமில்லை என்று ஆகிவிடும்! தனக்கு மட்டுமே என்று selfish – ஆகச் சொன்னதை இன்னும் வலியுறுத்தி, “ஆமாம், வேறே யாருக்குமில்லை” என்று சொன்னதாகி விடும்! ஆசார்யாள் எங்கேயாவது அப்படிச் சொல்லியிருப்பாரா?

‘நாந்யே’ வா, ‘நாந்ய’ மா, என்று சில பேர் யோசித்து, “இந்த வம்பே வேண்டாம். ‘நாந்யே’ யும் வேண்டாம், ‘நாந்ய’ மும் வேண்டாம். ‘மாந்யே’ என்று போட்டு முடித்து விடலாம் என்று நினைத்து,

மாமேவ மாதரநிசம் கலயந்து மாந்யே

என்று வைத்துக்கொண்டு விடுகிறார்கள். ‘மாந்யே!’ என்பது லக்ஷ்மியைக் கூப்பிடும் ஸம்போதனம் (விளி வேற்றுமை). ‘மதிப்புக்குகந்தவளே!’ என்று அர்த்தம். ‘லோக மாந்ய திலகர்’ என்கிற மாதிரி ‘மாந்யே’.

ஒரு கேள்வி கேட்கலாம். “இங்கே இப்படிச் சில பேர் ‘மாந்யே’ என்றும், நீங்கள் ‘நாந்யே’ என்றும் வைத்துக் கொண்டு சமாளித்தாலும், ‘மாமேவ’ என்பது அப்படியே தானே இருக்கிறது? ‘எனக்கு மட்டுமே’ என்றுதானே அதற்கு அர்த்தம்? இதற்கு என்ன, ஸ்வாமிகளே, ஸமாதானம் சொல்லப்போகிறீர்கள்?” என்று கேட்கலாம்.

சொல்கிறேன்.

எந்த பாஷையாயிருந்தாலும் ச்லோகம், செய்யுள், பொயட்ரி என்று இருக்கும்போது வார்த்தைகள் முன்னே பின்னே வரலாம். அதனால்தான் ‘பொயட்ரி’ யை ‘ப்ரோஸ் ஆர்டர்’ பண்ணுவது என்று இருக்கிறது. இப்படி முன்னே பின்னே வார்த்தைகளை மாற்றிப் போடுகிற ஸ்வாதந்த்ரியம் ஸம்ஸ்க்ருதத்தில் ரொம்ப ஜாஸ்தி. அந்த பாஷையில் ப்ரோஸிலேயே வார்த்தைகளை ஸஹஜமாக இடம் மாற்றிப் போடுவதுண்டு. பொயட்ரியிலோ கேட்கவே வேண்டாம். ‘மீட்ட’ ரை உத்தேசித்தும், ஒலி நயத்தை உத்தேசித்தும் வார்த்தைகளை எப்படியெல்லாமோ இடம் மாற்றிப் போடுவதுண்டு.

இந்த வகையில் ‘ஏவ’ என்பது ‘மாம்’ என்பதை ஒட்டியிருந்து ‘மாமேவ’ என்று வந்தாலும், அர்த்தத்தில் அது ‘மாம்’ என்பதைத் தழுவி “என்னையே” என்று பொருள் கொடுப்பதாக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. முந்தின வரியில் ‘வந்தநாநி’ என்று வருகிறதல்லவா? அதையே இந்த ‘ஏவ’ தழுவுகிறதென்று அர்த்தம் செய்து கொண்டுவிட்டால் எல்லாம் ஸரியாகிவிடும். அதாவது வார்த்தைகளை அடுக்கியுள்ள முறையில் ‘மாம் ஏவ’ என்று இருந்தாலும், அர்த்தத்தைப் பார்க்கும்போது இந்த ‘ஏவ’ என்பதை ‘வந்தாநாநி’ என்பதோடு ஒட்டிவைத்து ‘வந்தநாநி ஏவ’ என்று பொருள் கொள்ள வேண்டும். அப்போது, “அம்மா! நீ பலவிதமான ஸம்பத்துக்களைத் தருபவளானாலும் எனக்கு அவற்றில் வேறெதுவும் வேண்டாம் (நாந்யே); வந்தனங்கள் மாத்திரமே வேண்டும். நமஸ்காரஸ்ரீ மட்டுமே என்னை வந்தடைய வேண்டும்” என்று அர்த்தமாகிவிடும். “வந்தநாநி…மாம் ஏவ கலயந்து” என்று ச்லோகத்தில் இருந்தாலும் அதை “வந்தநாநி ஏவ மாம் கலயந்து” என்று வைத்துக்கொண்டு அர்த்தம் பண்ணிக்கணும். அப்போது, “வந்தன க்ரியை என்னை மாத்திரம் வந்தடையட்டும்” என்ற அபிப்ராயம் அப்படியே மாறி, “வந்தன க்ரியை மாத்திரம் என்னை வந்தடையட்டும்” என்றாகிவிடும்! மஹாலக்ஷ்மி, தாயார் வேறே எந்த அநுக்ரஹமும் செய்யவேண்டாம்; அவளை நமஸ்கரிக்கிற எண்ணமொன்றை மாத்திரம் அநுக்ரஹிக்க வேண்டும் என்றாகும்.

“கலயந்து” என்றால் ‘வந்தடையட்டும்’ என்று சொன்னேன். இது ஒன்றுதான் அதற்கு அர்த்தமென்றில்லை. ‘கல்’ என்பது அதற்கு தாது. அதற்கு அநேக அர்த்தங்கள். இதன்படி “கலயந்து” என்பது “வந்து சேரட்டும்” என்று ஸாதாரணமாகச் சொல்வதிலிருந்து “ஆட்கொள்ளட்டும்” என்று பரவச பாவமாக உசத்திச் சொல்லும்வரை அர்த்தம் கொடுக்கும். வந்தனக்ரியை தம்மை அப்படியே கெட்டியாகப் பிடித்துக் கொள்ளட்டும் என்று சொல்லவே ஆசார்யாள் ” (வந்தநாநி மாம்) கலயந்து” என்று பதப்ரயோகம் செய்திருக்கிறார்.

ஆசார்யாள் தமக்காக இன்றி நமக்காக வேண்டிக் கொள்வதுதான் இது. எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுப்பதுதான் இது. “நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே” என்ற மாதிரி, “வந்தனம் என்ற ப்ரக்ரியையை நான் விட்டாலும், அது என்னை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்” என்று நமக்கு வழிகாட்டவே ஆசார்யாள் ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மறுமைப் பயன் கோரி
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மூவுலக குரு
Next