தேவதையரின் இடையூறும் தீர்ப்பவர் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இதிஹாஸகாவ்யம் ஒன்று என்றால் அதன் ஆரம்பத்தில் வாக்தேவியாயும் வித்யாதி தேவதையாகவும் இருக்கப்பட்டவளை ஸ்தோத்ரிப்பதே பொருத்தம். அதுவே போதும் என்று தோன்றலாம். ஆனால் அவளுக்கும் முந்திப் பிள்ளையாரை ஸ்தோத்ரிக்க வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி?

அவளை நாம் ஸ்தோத்ரிப்பதற்கே ஏதாவது விக்னம் ஏற்பட்டுவிட்டால் என்ன பண்ணுவது? அதனால் முதலில் விக்னங்களைப் போக்கடிக்கும் விக்நேச்வரரை ஸ்தோத்ரிக்க வேண்டியதாகிறது.

இதைவிடவும் முக்யமாக இன்னொரு காரணமும் உண்டு. நாம் ஸ்தோத்ரிக்க முடியாமல் நமக்குத்தான் விக்னம் ஏற்படுமென்றில்லை. நாம் ஸ்தோத்ரிக்கும் தேவதை நமக்கு அநுக்ரஹம் பண்ணமுடியாமல் அந்த தேவதைக்கும் ஏதாவது விக்னம் ஏற்படலாம். புராணங்களைப் பார்த்தால் தெரியும், ஸாக்ஷாத் பார்வதி பரமேச்வரர்கள், மஹாவிஷ்ணு, அவருடைய அவதாரங்கள், ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி முதலானவர்களுக்குக் கூடச் சில ஸந்தர்பங்களில் எடுத்த கார்யத்தை முடிக்கமுடியாமல் விக்னங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அப்போது அந்த தெய்வங்களும் விக்நேச்வரருடைய ஸஹாயத்தைக் கோரிப் பெற்று, அவருடைய அருளாலேயே விக்னத்திலிருந்து நிவாரணம் பெற்றிருக்கிறார்கள்*. ப்ரம்மாதி தேவர்களும் இவரை நமஸ்கரித்தே க்ருத க்ருத்யர்களாவார்களென்று தானே (ஆரம்பத்தில் சொன்ன) ச்லோகத்திலும் பார்த்தோம்? அதனாலேயே இவருடைய துணை அவர்களுக்கு இல்லாவிட்டால் அவர்களுடைய கார்யங்களும் நிறைவேறாமல் விக்னம் ஏற்படுமென்று தெரிகிறதல்லவா? ஆகையினால்தான் ஒரு காவ்ய ஸ்ருஷ்டியாயிருந்து அதன் ஆரம்பத்தில் ஸரஸ்வதியை ஸ்துதிப்பதானாலும், இதே மாதிரி, தனலாபத்துக்காக லக்ஷ்மியை ஸ்துதிப்பதானாலும், நோய் நொடி தீருவதற்காக ஸூர்ய நாராயணனை ஸ்துதிப்பதானாலும், இப்படியே எந்த லக்ஷ்யத்தை முன்னிட்டு எந்த ஸ்வாமியை ஸ்துதிப்பதானாலும், அந்த ஸ்வாமியின் கார்யத்துக்கும் விக்னம் ஏற்படாமல் ரக்ஷிக்கும் பிள்ளையாரைத்தான் முதலில் ஸ்துதிக்க வேண்டுமென்று ஏற்பட்டிருக்கிறது.

ருத்ராபிஷேகமாக இருக்கட்டும், சண்டி ஹோமமாக இருக்கட்டும், வேங்கடரமண ஸ்வாமி ஸமாராதனையாக இருக்கட்டும், எந்தச் சடங்காகத்தான் இருக்கட்டும், பிள்ளையாருக்கு ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக்கொள்ளாமல் எதுவும் தொடங்குவதில்லை! பிரம்மாதி தேவதைகளில் யாரானாலும் தங்கள் காரிய நிறைவேற்றத்துக்காக அவர்களும் இவரை நமஸ்கரித்தாக வேண்டியிருக்கிறது என்பதாலேயே அவர்களிடம் நாம் ஒரு கார்யத்தை எதிர்பார்த்துப் போய் வழிபாடு நடத்தும் போது, அவர்களுக்கும் முந்தி இவரை வழிபடவேண்டுமென்று விதி ஏற்பட்டுவிடுகிறது.


* “தெய்வத்தின் குரல்” நான்காம் பகுதியில் ‘பிற தெய்வங்களும் போற்றும் பிள்ளையார்‘ என்ற உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is வாகீசர் யார்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மன்னாகுடிப் பெரியவாள்
Next